மனிதகுலத்தின் பெரும்பகுதி வாழ்வதற்கு உலகம் உகந்த இடமல்ல என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அதிகாரவர்க்கப் பயங்கரவாதிகளின் சித்திரவதைகளின் கோரம் வெளியாகியுள்ளது.
உலகின் பணக்காரர்களாலும் உற்பத்தி சாதனங்களை உடமையாக்கி வைத்துள்ள மனிதர்களாலும் தெரிவுசெய்யப்படும் அரசுகள் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் வகையில் சித்திரவதைக் கூடங்களை நடத்திவருகின்றது.
தமது சுரண்டலை மட்டுமல்ல கொலைகளையும் சித்திரவதைகளையும் கூட உலகமயமாக்கியுள்ள அதிகாரவர்க்கத்தின் தலைமை நாடு அமெரிக்கா.
இலங்கை போன்ற குட்டி நாடுகளில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளிலிருந்து தனது உள்ளூரிலேயே நடத்தப்படும் காட்டுத் தர்ப்பார் வரைக்கும் அமெரிக்காவின் ‘முதலாளித்துவ ஜனநாயகமே’ தலைமை வகிக்கிறத்து. சித்திரவதைகளும், கொலைகளும். கொள்ளையும். சூறையாடலும் வழமையானதே என்று எண்ணும் விலங்குகள் போன்ற நாளைய சந்ததி ஒன்றை உருவாக்குவதற்கு ஆளும் வர்க்கத்தின் திட்டம். சீ.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவு நிறுவனம் நடத்திய கொலைகளையும் சித்திரவதைகள் அமெரிக்க செனட் சபையின் அறிக்கையாக வெளிவந்துள்ளது.
ஜூலியன் அசாஞ்ஜ், செல்சி மானிங் போன்றவர்களால் நீண்டகாலத்தின் முன்பே அக்குவேறு ஆணிவேறாகப் வெளிப்படுத்தப்பட்ட அமெரிக்க அரசின் மனிதகுல விரோதச் செயல்களின் ஒரு பகுதியை அமெரிக்க செனட் சபை அறிக்கையாகச் சமர்ப்பித்து அமைதியடைந்துவிட்டது. தெரிந்தவற்றை அறிக்கையாக்கி இன்னும் ஜனநாயகம் வாழ்வதாக உலக மக்களுக்குப் பிரச்சாரம் வேறு மேற்கொள்கிறது அமெரிக்க அரசு.
உலகம் முழுவதுமுள்ள சீ.ஐ.ஏ இன் தடுப்பு முகாம்களில் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் அருவருப்பான பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். வெளிச்சம் உட்புகாத இருண்ட அறைகளுக்குள் பூட்டிவைக்கப்பட்டு 24 மணி நேரமும் உரத்த சத்ததில் இசைத்தட்டுகள் போடப்பட்டன. தவறியும் சூரிய ஒளி படாதவறு, மலசலம் கழிப்பதற்குக் கூட ஒரு வாளி மட்டும் வழங்கப்பட்டிருந்தது. கொடும் குளிரிலும் உடைகள் இல்லாமல் வெறும் கொங்ரீட் தரைகளில் படுத்துறங்கும் நிலையே காணப்பட்டது.
மலவாசல்களுக்கு ஊடான சித்திரவதைகள் பொதுவான நிகழ்வாக இருந்தாகச் சொல்லப்பட்டுள்ளது.இதனால் கைதிகள் மூல நோய் உட்பட பல்வேம்று நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர். மூட்டுப்பகுகள் முழங்கால் போன்றவற்றில் பல மணி நேரங்கள் நிற்கவைத்து சித்திரவதை செய்தமையால் பல கைதிகள் மரணமடைந்துள்ளனர். கால்களையும் கைகளையும் சங்கிலிகளால் பிணைத்து அசைவின்றி பல நாட்கள் வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் மரணித்துப் போயினர். இருளுக்குள் பலர் பார்வையிழந்தனர். தப்பியிருப்பவர்கள் வெறும் நடைப் பிணங்களே.
கைதிகளின் தாயின் கழுத்தை அறுக்கப்போவதாகவும், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்போவதாகவும், குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்யப்போவதாகவும் சீ.ஐ.ஏ பயங்கரவாதிகள் மிரட்டியுள்ளனர்.
உலகம் இதுவரை கண்டிராத இச் சித்திரவதைகளை சீ.ஐ.ஏ நடத்தியதாகக் அமெரிக்க செனட் வெளியிட்டிருகும் இந்த அறிக்கை பெரு வெள்ளத்தின் ஒரு துளி போன்றதே. உலகம் முழுவதும் காணப்படும் சித்திரவதைக் கூடங்கள் தொடர்பான விபரங்களோ அவைற்றின் தொகையோ நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடப்படவில்லை.
உலகின் சந்துபொந்துக்களிலிலெல்லாம் சந்தேகத்தின் பேரில் மனிதர்கள் நாளை சித்திரவதைக்கு உட்படுத்தப்படலாம். அடிப்படை ஜனநாயகத்திற்காகக் குரல்கொடுக்கும் மக்களிலிருந்து ஆயுதமேந்திப் போராடும் போராளிகள் வரை அமெரிக்க அரசின் முகாம் ஒன்றில் விலங்குகளிலும் கேவலமாக நடத்தப்படலாம். அமெரிக்க மேட்டுக்குடிகளின் நாய்கள் சோகமாகவிருந்தல் பதைபதைக்கும் விலங்கு உரிமைவாதிகள் வாழும் ‘ஜனநாயக’ நாட்டில் தயவில் மனிதர்கள் விலங்குகளைவிடக் கேவலமாகின்றனர். நான் அமெரிக்கன் என்றும் ஐரோப்பியன் என்றும் கூறுவதற்கு இனியாவது வறிய நாடுகளின் குடியேறிகள் அவமானப்படட்டும்.
சீ.ஐ.ஏ இன் சித்திரவதையை இலகுபடுத்த்ய நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை விமானநிலையம் கைதிகளைப் பரிமாறப் பயன்பட்டுள்ளது.