Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க குழந்தைகளை விட இந்திய சீன குழந்தைகள் திறமையாக படிக்கின்றனர்:ஜனாதிபதி ஒபாமா கூறுகிறார்!

23.03.2009.

அமெரிக்க குழந்தைகளை விட இந்திய மற்றும் சீன குழந்தைகள் படிப்பதில் அதிக திறமையுடன் இருக்கின்றனர். அவர்களை விட அதிக வசதிகள் இருந்தும் அமெரிக்க குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஒபாமா பேசுகையில்;

அமெரிக்க குழந்தைகளை விட இந்தியா மற்றும் சீன குழந்தைகள் படிப்பில் திறமையாக இருக்கிறார்கள். இதற்கு பெற்றோர்கள், பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது. அதற்குக் காரணம் நீங்கள் தான்.

அமெரிக்க குழந்கைள் வீட்டுக்கு வந்தவுடன் அவர்கள் வீட்டுப் பாடம் செய்வதில்லை. வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதேபோல, அமெரிக்க பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு தொடர்பாக நடக்கும் பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில் கலந்து நேரம் ஒதுக்குவதும் கிடையாது. பிள்ளைகளின் அறிவுப் பசியை தூண்டுவதில் பெற்றோருக்கு அதிக பங்கிருப்பதை மறந்துவிட்டார்கள்.

இந்தியா மற்றும் சீனாவில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் நெரிசல் அதிகம். நமது குழந்தைகளுக்கு கிடைக்கும் கம்பியூட்டர் உள்ளிட்ட வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் படிப்பில் நமது குழந்தைகளை விட அருமையாக இருக்கிறார்கள்.

குழந்தைகளின் படிப்பு விஷயத்தை பெற்றோர்கள் முக்கியமானதாக கருத வேண்டும். அமெரிக்க குழந்தைகளின் கல்வித் தரத்தை அதிகரிக்க அவர்கள் அனைவரும் பொறுப்பேற்று, உழைக்க வேண்டும்.

சீனா மற்றும் இந்தியாவில் இருக்கும் குழந்தைகள் ஒரு மாதம் நம்மைவிட கூடுதலாக படிக்கிறார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது நமது குழந்தைகள் சாதாரணமாக இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

படிப்பு விஷயத்தில் அனைத்து பணிகளையும் ஆசிரியர்களின் தலையில் கட்டிவிட முடியாது. அவர்கள் தினமும் வீட்டுப் பாடம் எழுதுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக திகழ முடியாது என்றார்.

Exit mobile version