Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையைக் கண்டித்து வரு‌ம் 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொட‌ர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலர் பி.வி. கதிரவன் ஆகியோர் கூ‌ட்டாக வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவின் அதிபர் ஒபாமா வரு‌ம் 6ஆம் தேதி இந்தியா வருகிறார்.

ஆப்பிரிக்க அமெரிக்கரான அவரின் செயல்பாடுகள் ஏகாதிபத்தியக் குணங்களை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. இராக் மீது ஆக்கிரமிப்பு, ஈரானுக்கு அச்சுறுத்தல், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு, கியூபா மீது பொருளாதாரத் தடை என்று அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் தொடர்கிறது.

சர்வதேச அளவில் தான் பின்பற்றி வரும் மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு துணை நிற்க, இந்தியாவை அமெரிக்கா நிர்பந்தம் செய்து வருகிறது. சில்லறை வணிகம், உயர் கல்வி உள்ளிட்ட துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்குமாறு இந்தப் பயணத்தின் மூலம் அமெரிக்கா நிர்பந்தம் செய்ய முனைகிறது.

போபால் விஷ வாயு வழக்கில் ஆயிரக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமான ஆண்டர்சன் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் இந்திய அரசை அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. இந்திய- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாம் வற்புறுத்தி வரும் நிலையில் தேச நலனுக்கு எதிரான பல ஒப்பந்தங்களை இந்தியாவின் மீது திணிக்கும் நோக்கத்துடன் ஒபாமா இந்தியா வருகிறார்.

எனவே, அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் வரு‌ம் 8ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version