Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்!

15.08.2008.

ரஷியாவுடன் நட்புறவு வேண்டுமா, அல்லது ஜார்ஜியா தலைமை நீடிக்க வேண்டுமா இந்த இரண்டில் எது அமெரிக்காவுக்கு தேவை என்பதை அந்த நாடே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரஷியா கூறி உள்ளது.

அமெரிக்க கண்டனம்

ரஷியாவில் இருந்து பிரிந்த சிறு நாடுகளுள் ஒன்று, ஜார்ஜியா. இது இப்போது அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டு உள்ளது. அதோடு அமெரிக்காவின் ராணுவ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவும் முன் வந்து உள்ளது.. இந்த நிலையில் ஜார்ஜியாவில் ரஷியர்கள் வசிக்கும் தெற்கு ஒசெட்டியாவில் ஜார்ஜிய ராணுவத்துக்கும், ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒசெட்டிய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷியா போரில் குதித்தது. தெற்கு ஒசெட்டியாவை ரஷியா கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

ரஷியாவுடன் கூட்டு கடற்படை ஒத்திகையை அமெரிக்கா ரத்து செய்தது. அதோடு உலக அமைப்புகளில் ரஷியா தனிமைப்படுத்தப்படும் எனறும் அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஜார்ஜியாவுக்கு உதவிகளை ராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்கா அளித்தது.

எது வேண்டும்?

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ரஷிய பிரதமர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். . ஜார்ஜிய ராணுவத்துக்கு அமெரிக்கா தான் நிதி உதவி செய்து வருகிறது. இந்த தைரியத்தில் தான் ஜார்ஜியா, தெற்கு ஒசெட்டியா மீது ஆக்கிரமிப்பு செய்தது என்று ரஷிய வெளிநாட்டு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது.

அமெரிக்காவுக்கு யார் வேண்டும் என்பதை அந்த நாடு தான் முடிவு செய்யவேண்டும். அதற்கு ரஷியாவின் நட்புறவு வேண்டுமா? அல்லது ஜார்ஜியாவின் தலைமை வேண்டுமா என்பதை அதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நியாயமா?

ஜார்ஜியாவின் போர்விமானங்கள் தெற்கு ஒசெட்டியாவின் தலைநகரான ட்ஸ்கின்வேலி நகரில் கடந்த 8 தேதி அதிகாலையில் குண்டுகள் வீசினவே அப்போது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதை கண்டிக்காமல் மவுனம் காத்தனவே, அது மட்டும் நியாயமா?

என்னிடம் பேசிய அமெரிக்க மந்திரி ரைஸ், ஜார்ஜியாவில் உள்ள கோரியில் ரஷிய ராணுவ வீரர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார். அதற்கு நான் பதில் அளிக்கையில் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தேன்

இவ்வாறு வெளிநாட்டு மந்திரி லாவ்ரோவ் கூறினார்.

Exit mobile version