இலங்கை அரசு மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் செயல், இரட்டை வேடம். இவ்வாறு அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஷியா பிரிவைச் சேர்ந்த சையிது கல்பே ஜவாத் நக்வி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் பேசுவதற்காக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் ஷியா பிரிவைச் சேர்ந்த சையிது கல்பே ஜவாத் நக்வி சென்னை வந்திருந்தார்.
1966-ம் ஆண்டு லக்னோவில் பிறந்த இவர்… உலாமா கவுன்சில் உறுப்பினர், தன்ஸீம்-இ-பஸ்டரன்-இ-ஹுஸைன் நிறுவனத்தின் நிறுவனர் எனப் பல்வேறு பொறுப்புகளையும் வகிக்கிறார்.
அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியதற்காக, 144 தடை உத்தரவை எதிர்த்துக் கூட்டம் போட்டதற்காக… எனப் பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லக்னோ நகரில் ஒரு மில்லியன் மக்கள் கலந்துகொண்ட அமெரிக்க, இஸ்ரேல், டென்மார்க் நாடுகளுக்கு எதிரான பேரணியைத் தலைமை தாங்கி நடத்தியவர்.
அவரிடம் பேசினோம்.
”இஸ்லாம் என்றால் ‘அமைதி’ என்று பொருள். இஸ்லாம் மார்க்கம் அமைதியின் மார்க்கம். அது ஒருபோதும் தீவிரவாதத்தை அனுமதிப்பது இல்லை. ஜிகாத் என்ற பெயரில் தீவிரவாதத்தைக் கையில் எடுத்துக்கொள்வதற்கு இஸ்லாம் மார்க்கம் பொறுப்பு அல்ல.
உயிர்ப்பலி என்பது கூடாது என்றுதான் இஸ்லாம் போதிக்கிறது. கிறிஸ்தவம், இந்து, பௌத்தம் ஆகிய மதங்களும் அதையே சொல்கிறது.
பௌத்தத்தைக் கடைப்பிடிக்கும் சிங்கள அரசு செய்திருக்கும் போர்க் குற்றங்கள் மனித உரிமையை மீறிய செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஒரு குழுவுக்கும் அரசுக்கும் போர் நடந்து, போரில் வெற்றி கொண்டோம் என்று அரசு அறிவித்த பிறகு… அந்தக் குழு சம்பந்தப்பட்டவர்களையோ, அவர்களது உறவுகளையோ துன்புறுத்துவது, கொல்வது என்பது மனிதாபிமானத்துக்கும் மனித நேயத்துக்கும் எதிரான செயல்.
அதே நேரத்தில், இலங்கை அரசு மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் செயல், இரட்டை வேடம்.
இலங்கையில் அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுவிட்டனர் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் அதே அமெரிக்கா… பாலஸ்தீனம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் எல்லையில் தனது வான் படை மூலம் தாக்குதல் நடத்தி, லட்சக்கணக்கான குழந்தைகளைக் கொன்று குவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவை யாரும் கண்டிக்கவில்லை. தன்னால் அடிமைப்படுத்த முடியாத ஈரான் மீது அடுக்கடுக்கான பொருளாதாரத் தடையை விதித்து வருவதால், அங்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் இறந்துகொண்டே இருக்கிறார்கள்.
இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு, ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கிறது அமெரிக்கா.
அல்கொய்தாவையும் தாலிபன்களையும் உருவாக்கிய அமெரிக்கா, அவர்களுக்கு நிதி உதவியும் ஆயுதமும் அளித்து தனது தேவைக்காகப் பயன்படுத்தியது.
இன்று அவர்களை அழித்தொழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று வருகிறார்கள்.
லெபனான் மீது இஸ்ரேல் மூலமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோது, குழந்தைகள் பலியானது அமெரிக்காவுக்குத் தெரியவில்லை.
உலகில் மக்களை அதிகமாகக் கொல்வதும் மனித உரிமைகளை மீறுவதும் அமெரிக்காதான்.
உலகில் இருக்கும் பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதமும் நிதியுதவியும் அளிப்பது அமெரிக்காதான்.
எனவே மனித உரிமைகள் குறித்துப் பேச அமெரிக்காவுக்கு அருகதை இல்லை. இது, அமெரிக்காவின் கபட நாடகம்.”
இவ்வாறு தீர்க்கமாகப் பேசினார் ஜவாத் நக்வீ!
ஜூனியர் விகடன்