Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து கதிரியக்கக் கசிவு.

03.08.2008
ஜப்பானின் தென்பகுதியில் உள்ள துறைமுகம் ஒன்றில் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து கதிரியக்கக் கசிவு ஏற்பட்டுள்ளது. அணுசக்தியால் இயக்கப்படும் யுஎஸ்எஸ் ஹவுஸ்டன் என்ற போர்க்கப்பலால்தான் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பசிபிக் கடலில் சர்வதேசப் போலீஸ்காரன் போன்று உலாவி வரும் இந்தக்கப்பலிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

ஜப்பானில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பது மற்றும் அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பல்கள் அங்குள்ள துறைமுகங்களில் நுழைவது ஆகிய இரண்டு விஷயங்களுமே சர்ச்சைக்குரியதாகும். ஜப்பானிய சிறுமியை அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் ஜப்பானை விட்டு அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்ற முழக்கம் அதிகரித்தது. ஏற்கனவே நடைபெற்ற இது போன்ற கொடுமையான சம்பவங்களில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, இத்தகைய சம்பவங்களில் விசாரணை செய்ய ஜப்பானுக்கு அதிகாரம் இல்லை என்ற வகையில் சட்டம் இயற்றுமாறு அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது.

இந்நிலையில், கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு பல வாரங்கள் கழித்தே ஜப்பான் அரசுக்கு தகவல் தந்ததாக அமெரிக்க கடற்படை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூலை 17 ஆம் தேதியே இந்தக் கசிவை அமெரிக்கக் கடற்படை கண்டுபிடித்திருந்தது. இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அத்தகைய ஆர்வலர்களில் ஒருவரான மசாஹிகோ கோடோ, இந்த சம்பவத்தை அமெரிக்க கடற்படை கையாண்ட விதம் வெளிப்படையானதாக இல்லை. எந்த வகையிலும் இவர்களை நம்ப முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது என்று குறிப்பிடுகிறார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தையே தாங்கிப் பிடித்திருக்கும் ஜப்பானுக்கே இந்த நிலைமைதான் உள்ளது. இத்தகைய அணுகுமுறையைக் கொண்ட அமெரிக்காவுடன் ஜப்பான் போட்டுள்ள இதே உடன்பாடுகளை இந்தியாவும் போடப்போகிறது. இடதுசாரிகளின் “தொல்லைகள்” நீங்கி விட்டதால் ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு தேவையான வசதிகளை இந்தியப் பகுதிகளில் ஏற்படுத்துவதற்கான உடன்பாடு வரப்போகிறது. சென்னை துறைமுகத்துக்கு அமெரிக்க போர்க்கப்பல் கேளிக்கைகளுக்காக வந்தபோது அணு ஆயுதம் உங்கள் கப்பலில் உள்ளதா? என்று கேப்டனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதையெல்லாம் சொல்ல முடியாது என்ற பதில்தான் கிடைத்தது.

காஷ்மீர் எல்லையில் பணி புரிபவர்களுக்காக இரவு நேரத்தில் பார்க்கக்கூடிய வசதியுள்ள கண்ணாடிகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கப் போகிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனையுடன் அமெரிக்கா அதைத் தரத்தயாராகிறது. அவர்கள் மேற்பார்வையில்தான் நாம் அந்தக் கண்ணாடியை அணிந்து பார்க்க வேண்டுமாம். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பெயரில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்கா அமர்ந்து கொண்டது. தற்போது இந்தியாவின் எல்லைப்பகுதிகளிலும் கூடாரம் அடிப்பதற்காக அமெரிக்கா அலைந்து கொண்டிருக்கிறது.

Exit mobile version