ஐ.நா செயலாளர் பன் கீ மூன் நியமித்த தஸ்ருமன் குழு ஏற்கனவே யுத்தக்குற்றங்களை ஆராய்ந்து அறிக்கை சம்ர்பித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இத் தீர்மானம் காலத்தைக் கடத்தி இலங்கை அரசிடமிருந்து தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வதைப் பிரதானமான நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டாவதாக புலிகளின் போர்க்குற்றம் என்ற பெயரில் முன்னைநாள் அப்பாவிப் போராளிகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரச யந்திரம் தனக்குரிய பொறிமுறைகளை வகுத்துக்கொண்டு காலத்தை இழுத்தடிக்கும் இடைக்காலப் பகுதியில் உலகம் முழுவது பரந்து சென்று அச்சத்துடன் வாழும் முன்னை நாள் போர்க்குற்றவாளிகள் என்று கருதி போராளிளைக் கைது செய்யப்படும் வாய்ப்புக்களே அதிகமாகிறது.
தீர்மானத்தின் உட்கூறுகள் குறித்த அடிப்படை தெளிவுகள் கூட இன்றி தமிழர் தலைமைகள் என்று தம்மை வரித்துக்கொண்ட பிழைப்புவாதிகள் அமெரிக்காவின் தீர்மானத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர்.
தீர்மானத்தில் ‘இலங்கையின் உட்கட்டமைப்பு நிர்மாணம், மீள்குடியேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பது நீடிக்கும் சமாதானத்திற்கு அவசியமானது என மேலும் குறிப்பிடப்பட்டது. தீர்மானத்தின் உள்ள்டக்கத்தை அறியாமலே அதனை எதிர்ப்பதாக இலங்கை அரசு கூறுவது நாடகம். அதே வேளை தீர்மானத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது எங்கு போராட்டத்திற்குப் பொறிவைக்கபட்டுள்ளது என்று தெரியாமலே ஆதரவு வழங்கும் தமிழ்ப் பிழைப்புவாதத் தலைமைகள் தமிழர்களின் அழிவிற்கு வழிவகுத்துக் காட்டிகொடுக்கின்றன. தீர்மானத்தின் சாராம்சத்தைப் பெற்றுக்கொண்டு ஆதரிப்பதா, மௌனம் சாதிப்பதா என்பதைத் தீர்மானித்திருக்கலாம். முரண்படும் பகுதிகளோடு போராடியிருக்கலாம்.