Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் யாழ். மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாக உறுப்பினர் அ.சங்கையா தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் இருவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்துக் கௌரவித்ததுடன், அமிர்தலிங்கம் கட்சியின் செயலாளராக கடமையாற்றிய போது தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் நினைவுப் பேருரை ஆற்றினர். இந்நினைவுப் பேருரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான சிவாஜிலிங்கம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் நினைவு பேருரை ஆற்றினர். நினைவுப் பேருரையில் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீதரன் தெரிவிக்கையில், ‘இயற்கையும் இறைவனும் ஒன்றிணைத்துக் கொடுத்த அருமையான நாட்களில் தமிழ் மக்களின் துன்ப துயரங்களுக்காக குரல் கொடுத்த தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாற்றில் மறக்க முடியாத வடுக்கள். அவர்களைப்போல் தலைவர்கள் இல்லை. அவர்களின் வரலாறு விடுவிக்கப்பட வேண்டும்’ என்றார்கள். தொடர்ந்து, ‘அமிர்தலிங்கத்தின் சகாப்தம்’ என்ற நினைவு நூலினை ரெலோ அமைப்பின் அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீதரனிடம் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில், யாழ். மாநகர முன்னாள் முதல்வர் கந்தையன் மற்றும் அரசியல் தலைவர்கள், பிதேச சபை தவிசாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version