Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அ.மார்க்ஸிக்குத் திறந்த கடிதம் : அசோக்

நன்றி : தீராநதி நவம்பர் 2008.

அன்புள்ள அ.மார்க்ஸ் அவர்களே வணக்கம்.

தங்களுக்கு நீண்ட நாட்களாக எழுத நினைத்த கடிதத்தை இப்பொழுது காலதாமதமாக எழுதுவதற்கு முதலில் மன்னிக்கவும்.

ஷோபா சக்தி போன்றவர்களுடனான தங்களது உறவு அரசியல் ரீதியிலானது என்பதை விடவும் அதிகமும் தனிப்பட்ட ரீதியானது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்.

அது எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பரஸ்பரம் அதற்கான பொருளாதார இலக்கியத் தேவைகள் உங்களுக்குள் இருக்கலாம். அதுவும் எனக்கு ஒரு பொருட்டில்லை.

தமிழகத்தில் நீங்கள் ஷோபா சக்தி போன்றவர்களை ஜனநாயகக் காவலர்களாகவும் மனித உரிமைப் போராளிகளாகவும் கட்டமைப்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கட்டுடைக்கத்தான் தங்களுக்குத் தெரியும் என்பதற்கு மாறாக உங்களுக்குக் கட்டமைக்கவும் தெரியும் என்பதைத் தாங்கள் இதன் வழி நிரூபித்திருக்கிறீர்கள்.

நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் இந்தியாவில் மனித உரிமைகளுக்கும்  ஜனநாயகத்திற்காகவும் வன்முறைக்கு எதிராகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதனையும் நான் அறிந்தே இருக்கிறேன்.

பாரிஸில் நெடுங்குருதி ஏற்பாட்டாளர்கள் தொடர்பான வன்முறை நிகழ்வு குறித்துத் தாங்கள் இப்போது அறிந்தே இருப்பீர்கள்.

காந்தியாரின் அகிம்சை குறித்தும் சே குவேராவின் வன்முறை குறித்தெல்லாம் நீங்கள் தற்போது பேசி வருகிறீர்கள்.

கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கும், அரசியல் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் துப்பாக்கியும் வன்முறையும் வழியல்ல என்பதை நீங்கள் வழியுறுத்தி வருவதாகவும் நான் கருதுகிறேன்.

நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னால் நடைபெற்ற வன்முறை நிகழ்வை ஒட்டி அதில் பேசவிருந்த பல பேச்சாளர்கள் அதிலிருந்து விலகிவிட்டார்கள்.

சோதிலிங்கம் போன்றவர்கள் விலகிக் கொண்டதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

பாரிஸிலிருந்தும் கூட மு.நித்தியானந்தன் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

வன்முறை எதிர்ப்பின் தார்மீகத் தன்மைகளை அவர்கள் தமது நடவடிக்கையின் மூலம் காத்திருக்கிறார்கள்.

வன்முறைக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் இந்தியாவில் பேசி வருகிற நீங்கள், எந்தத் தார்மீக அடிப்படையில் நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னான ஏற்பாட்டாளரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?

இந்தியாவில் நடந்தால்தான் இது வன்முறை பாரிஸில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நடந்தால் வன்முறை இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா?

நீங்கள் சுகனது புத்தகத்திற்கு முன்னுரை கொடுங்கள்.

ஷோபா சக்தி பற்றி பிம்பங்களைக் கட்டமையுங்கள். அது உங்கள் சொந்தப் பிரச்சினை.

உங்களுக்கு இவர்கள் இருவரும் வழிபாடு நடத்தட்டும். அதுவும் உங்கள் சொந்தப் பிரச்சினை.

நெடுங்குருதிப் பிரச்சினை அப்படியானது இல்லை.

கருத்து மாறுபாடுகளை கொலைகளினாலும் துப்பாக்கி வன்முறைகளாலும் தீர்த்துக் கொள்வது தொடர்பான பிரச்சினை இது.

ஈழத்தமிழர்களுக்குள் உயிர்வாழ்தல் தொடர்பான பிரச்சினை இது.

கொலை அரசியலுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள்.
அதற்கு எதிராகப் பேசுவதாகத் தமிழகத்தில் தாங்கள் முகம் வைத்திருக்கிறீர்கள்.

பெரும்பாலுமான அரசியலறிந்த ஈழத்தமிழர்கள் வன்முறைக்கு எதிராக இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த வேளையில் நீங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேபாளப் புரட்சி பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசியிருக்கிறீர்கள்.

உங்களது சொல்லும் செயலும் முரண்பாடாக இருக்கிறது.

உங்களிடம் எனது நேரடியான கேள்வி இதுதான்.

மனித உரிமை பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேசி வருகிற நீங்கள் என்ன அடிப்படையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்டீர்கள்?

மார்க்சியத்தின் பெயரால் நடந்த அநீதிகளையெல்லாம் பட்டியல் போடுகிற நீங்கள் எந்தத் தார்மீக அறத்தின் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டீர்கள்?

அறநேர்மையுடன் கேட்கிறேன்.

பதில் சொல்லுங்கள்.

இதற்கு ழாக் தெரிதா உங்களுக்குத் தேவைப்பட மாட்டார் என நினைக்கிறேன்.

அன்புடன்
அசோக்
பாரீஸ்
பிரான்ஸ்.

Exit mobile version