Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்க தேர்தலுக்கு முதல் நாள் : ஒபாமா முன்னணியில்-CNN

இன்றைய CNN  தொலைக்காட்சி ஆய்வுகளினடிப்படையில் ஒபாமா 7 சத வீத அதிகப் படியான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்சஸ் மானிலத்தில் மட்டும் மக்கெயின் 57 வீத வாக்குகளையும் ஒபாமா 38 வீத வாக்குகளையும் பெறுவர் என எதிர்வு கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உலகம் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு, ஜனநாயகக் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சி பலவீனமாக உள்ள பென்சில்வேனியாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கடந்த அதிபர் தேர்தலில் தனது கட்சி தோல்வியுற்ற புளோரிடா, வடக்கு கரோலினா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான நடைமுறை சற்றே வித்தியாசமானது. இத்தேர்தலில் அந்நாட்டு மக்கள் ஒபாமாவுக்கோ அல்லது மெக்கெய்னுக்கோ நேரடியாக வாக்களிக்கப் போவதில்லை.

ஏனென்றால், அந்நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு குறிப்பிட்ட மக்கட்தொகைக்கு ஒரு தேர்தல் தொகுதி உருவாக்கப்படும். இதனை எலக்டோரல் காலேஜ் என்று அழைப்பார்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று அறிவிக்கப்படும். அதன்படி, அங்கு 538 எலக்டோரல் காலேஜ்கள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற (அதிபர் ஆக) 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும்..

அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 538 வாக்குகளில், 270 வாக்குகளைப் பெற்றவர் அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

நாட்டின் 44வது அதிபரைத் தேர்ந்தெடுக்க நாளை தான் 50 மாகாணங்களிலும் முறைப்படியான தேர்தல் நடக்கிறது. (இருப்பினும் சில மாகாணங்களில் சில பகுதிகளில் வாக்குப் பதிவு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது.)

Exit mobile version