இப்போது FSA அமரிக்க இராணுவத்தை உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கூறுகின்றனர். ஈழத்தில் இக்கட்டான காலங்களில் அமரிக்காவையும் ஏகபோக நாடுகளையும் தலையிட வேண்டும் என்று போராட்டத்தின் பெரும்பகுதியைக் கையிலெடுடுத்துச் சிதைத்த புலம் பெயர் ஐந்தாம் படைகளை இது நினைவுறுத்துகிறது.
இன்றும் நவநீதம் பிள்ளையையும், அமரிக்காவையும், இந்திய அரசையும் நம்பியிருக்கும் புலம் பெயர் மற்றும் ஈழத் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இவர்கள் (FSA) எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்ல.
அமரிக்க தலைமையிலான நாடுகள் ஏனைய நாடுகளில் தலையிடும் நோக்கோடு உருவாக்கும் இவ்வாறான அடியாட்படைகள் இறுதியில் ஏகாதிபத்தியங்களாலேயே அழிக்கப்படுவது வழமை. ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் தலைவர்கள் பலரை விடுதலைப் போராளிகள் என்று கௌரவித்த அதே அமரிக்கா பின்னர் பயங்கரவாதிகள் என அழித்து ஆப்கானை பிணக்காடாக மாற்றியது.
சிரியாவில் குறுகிய காலத்துக்குள் உருவாக்கப்பட்ட போராளிக் குழுக்களைப் போன்றே இலங்கையிலும் உருவாக்கப்பட்டன. இந்திய உளவுத்துறையிடம் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், புலிகள் போன்ற அமைப்புக்களும் பயிற்சியைப் பெற்றுக்கொண்டன. மொசாட் என்ற அதிபயங்கர இஸ்ரேல் உளவு அமைப்பிடம் விடுதலைப் புலிகள் பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர்.
இறுதியில் இவர்கள் அனைவராலுமே விடுதலைப் போராளிகள் அழிக்கப்பட்டனர்.
இன்று சிரியாவில் நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. கொலை வெறியோடு மத்திய கிழக்கில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பிற்கு மக்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஐந்தில் மூன்று அமரிக்கர்கள் சிரியா மீதான ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றனர். ஆக்கிரமிப்பு நடத்தினால் அமரிக்க அரசுகளின் மீதான மக்களின் வெறுப்புணர்வு இன்னும்அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. யுத்ததை எதிர்க்கும் செனட்டர் ரொன் போல் போன்றவர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில் ரஷ்ய அரசு தனது வியாபார நலன்களுக்காகவும் மக்கள் அபிப்பிராயத்தைத் தனக்குச் சார்பானதாகவும் மாற்றும் இராஜதந்திர யுத்தத்திலும் வெற்றிகண்டுள்ளது. எட்வார் சினோடென், ஜூலியன் அசாஞ் போன்றவர்களில் ஆரம்பித்து ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராகத் திரும்பியுள்ள மக்கள் கருத்தை தனக்குச் சார்பாக ரஷ்யா பயன்படுத்திக்கொண்டது.
சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் இருந்தால் சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றின் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு சிரிய அரசைக் கோரவேண்டும் என்ற ரஷ்யாவின் முன் மொழிவை அமரிக்க அரசு தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. மக்களின் எதிர்பை தற்காலிகமாக எதிர்கொள்ள அமரிக்க அரசு ரஷ்யாவின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கையையும், புலம் பெயர் சமூகத்தையும் போலன்றி உலகின் பெரும்பாலன பகுதிகளில் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பலம் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது. அபிவிருத்தி என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் செயற்கையான பொருளாதார வீக்கமும், பெரும் பண நிறுவனங்களின் கொள்ளையும், அவற்றிற்காகச் செயற்படும் அரசுகளும் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை சிரியா மீதான படையெடுப்பிற்கு எழுந்த எதிப்பும் அதன் பின்னான அரசியல் நகர்வுகளும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர சக்திகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளன.