Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்காவுடன் தொடர்புகளைப் பேண புலிகள் அதி விருப்புக்காட்டினர்

அமரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள புலிகள் அதிவிருப்புடையவர்களாகக் காணப்பட்டனர் என விக்கி லீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்புரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேரடியான உறவுகள் இல்லாத போதிலும், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள புலிகள் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதனை அறிந்து கொள்ள புலிகள் விரும்பியதாகவும், 2002 சமாதான முனைப்புக்களின் அரசாங்கத் தரப்பு முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராகக் கருதப்பட்ட மிலிந்த மொரகொட இதனை குறிப்பிட்டதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2002ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி அமெரிக்கத் தூதுவர் லுயிஸ் அம்ஸ்லீம் மற்றும் பிரதி தூதுவர் ஆஷ்லி வில்ஸ் ஆகியோர் இந்தத் தகவல்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தாய்லாந்து பேச்சுவார்த்தைகளின் பின்னர் அமெரிக்கா செல்வதாக மிலிந்த மொரகொட தெரிவித்ததாகவும், ‘எதற்காக’ ‘ஆயுதம் கொள்வனவு செய்யவா’ என புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு கடந்த விஜயத்தின் போது ஆயுதக் கொள்வனவு செய்யப்பட்டது என மிலிந்த கேலியாக பதிலளித்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு புலிகளை வருத்தமடையச் செய்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் பின்னர் அதே நிலைமை தொடர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஓர் நாள் புலிகளுடன் நேரடியாக மோதும் என்ற அச்சம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் ஜனநாயகப் போராட்டங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும் தேடித்தேடி அழிக்கும் அமரிக்காவை விடுதலை இயக்கம் அணைத்துக் கொள்ள விரும்பியது ஊனமுற்ற சிந்தனையைக் கொண்ட சமூகம் ஒன்றிலேயேநடைபெறும்.

Exit mobile version