Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமரிக்காவில் பண நெருக்கடி : ஆசியாவிலும் எதிரொலி

1930-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய நிதி நெருக்கடி முன்னெப்போதும் அமெரிக்காவில் ஏற்பட்டது கிடையாது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி எவ்விதம் சீர் செய்யப்படுகிறது என்பதை அனைத்து முதலீட்டாளர்களும் பொறுமையுடன் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் முதலீடு குறைந்துள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க 70,000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என அதிபர் புஷ் தெரிவித்துள்ளார். இந்த முதலீடு எந்த வகையில் சரிவை ஈடுகட்டும் என அனைத்து முதலீட்டாளர்களும் உன்னிப்பாக எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டதால் உள்ளூர் முதலீட்டாளர்கள் முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளனர். இது தவிர, ஒரே நாளில் அதாவது திங்கள்கிழமை மட்டும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்துள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க அரசு நிதி உதவி செய்யும் என அறிவித்தபோதிலும் நியூயார்க் பங்குச் சந்தையில் 4.17 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 5 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்தன. இன்ஃபோசிஸ் பங்குகள் ரூ.84.50 குறைந்து ரூ. 1,543.35-க்கும், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ரூ. 21.10 குறைந்து ரூ. 331.65-க்கும், டிசிஎஸ் ரூ. 45.25 குறைந்து ரூ. 720.75-க்கும் விற்பனையாயின.

இதேபோல ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. டிஎல்எஃப், யுனிடெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையாகச் சரிந்தன.

வங்கிகளின் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் ரூ. 63.95 சரிந்து ரூ. 1,502.75-க்கு விலைபோனது. எச்டிஎஃப்சி வங்கி ரூ. 59.90 மற்றும் ரூ. 1,237.70-க்கு விலைபோனது. ஐசிஐசிஐ வங்கி ரூ. 34.35 குறைந்து ரூ. 599.70-க்கு விற்பனையானது.

ரிலையன்ஸ் பங்கு விலை ரூ. 27.45-ம், அபான் ஆஃப்ஷோர் பங்குகள் ரூ. 21.95-ம், ரிலையன்ஸ் பெட்ரோ ரூ. 1.10-ம் குறைவான விலைக்கு விற்பனையானது.

Exit mobile version