Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அன்று புலிகளுக்குப் பணம் வழங்கிய ஜனாதிபதி இன்று அவர்களின் பணத்தில் வெற்றி பெற முயற்சி ! : ரணில்

“2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வெற்றிபெற முயற்சிக்கின்றார்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

நேற்று சிலாபத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டத்திற்கான புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மாதம்பை அலுவலகம் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்பன கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்முறைக் கும்பல் ஒன்றினால் தீவைத்து நாசம் செய்யப்பட்ட பின் அதற்கு பதிலாக புதிய அலுவலகம் சிலாபத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மாதம்பையில் அமைந்திருந்த எமது ரங்கே பண்டாரவின் அலுவலகம் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்பன பாதாளக் கும்பலினால் தீவைத்து நாசமாக்கப்பட்டது. அதிகூடிய முறை எரித்து நாசமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகம் என்ற வகையில் பாலித ரங்கே பண்டார கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பார்.

ஆனால் ஒன்றை மட்டும் அந்த பாதாளக்கும்பல் புரிந்து கொள்ள வேண்டும். தீ வைப்பதன் மூலமோ, குண்டு வீசுவதன் மூலமோ ரங்கே பண்டாரவின் வாயை மூடிவிட முடியாது.

இன்று நாம் இந்த ராஜபக்ஷவின் தனியாட்சிக்கு முடிவு கட்ட பல கட்சிகளை இணைத்தக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியுள்ளோம்.

ஜெனரல் சரத் பொன்சேகவின் வரவினால் இன்று இந்த அரசு தடுமாறிப் போயுள்ளது. இந்த ராஜபக்ஷவின் தனியாட்சியை, குடும்ப ஆட்சியை ஒழித்து இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த பல கட்சிகளுடன் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

2005ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்குப் பணத்தைக் கொடுத்து பதவிக்கு வந்த ராஜபக்ஷ இன்று விடுதலைப் புலிகளின் பணத்தைக் கொண்டு தேர்தலில் ஈடுபடுகின்றார். நாம் இவரின் விளையாட்டுக்களுக்குப் பயப்படப் போவதில்லை. வருகின்ற ஜனவரி 26ம் திகதி நடைபெறப் போகும் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா நிச்சயம் வெற்றி பெறுவார். இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது”என்றார்.

இவ்வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோசப் மைக்கல் பெரேரா, ஏ.ஆர். அப்துல் காதர், சம்பிக பிரேமதாச, உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பிரதேச தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தின் போது ரங்கே பண்டாரவின் www.bandaraonline.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், அவரின் bandaraunp@yahoo.com மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் ஜனபலய (மக்கள் சக்தி) எனும் புத்தளம் மாவட்டத்திற்கான பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது

Exit mobile version