13.11.2008.
அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இலங்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் உரையாற்றிய கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியதாவது :
” யுத்த நிறுத்தம் என்பது கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கையை ஆட்சி செய்த அனைத்து அரசியல் தலைவர்கள் காலத்திலிருந்து இடம்பெற்று வரும் ஒரு விடயம். இத்தனை வருட காலமும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உற்று நோக்கின், அது முடிவில் அரசுக்கும் படையினருக்கும் பொதுமக்களுக்கும் சகல பாதுகாப்பு தரப்பினருக்கும் பாரிய நெருக்கடியைத் தான் தந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் கூட விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற போது, மனிதாபிமான ரீதியில் யுத்த நிறுத்தம் தொடர்பில் பேசப்பட்டது. அவ்வாறு பேசப்பட்டிருந்தும் இறுதியில் இது அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பொழுது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஊடாக அவர் கையாண்ட முதலாவது நடவடிக்கை வீழ்ந்து கிடந்த சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் கட்டியெழுப்பியதுதான். ஜெனிவா ஒஸ்லோவில் பல பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. சமாதான பேச்சுவார்த்தையூடாக தீர்வு காண முற்சிக்கப்பட்டது. அதுவும் ஒரு நெருக்கடியை உருவாக்கியது.
700 படை வீரர்கள், நிராயுதபாணிகளாக நின்றபோது விடுதலைப்புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் சிங்கள் தமிழ் புதுவருடத்திற்கு இரு நாட்கள் இருக்கும் போது திருகோணமலை கடற்படைத்தளம் தாக்கப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர்.இத்தாக்குதல் நடவடிக்கையும் யுத்த நிறுத்த பிரகடனத்தின் போதே நடைபெற்றது.
மேலும் கடற்படையினர் மருத்துவ விடுமுறைக்காகச் செல்லும் போது அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மாவிலாறு பகுதியில் 30,000 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கான ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நீர்த் திட்டம் மறிக்கப்பட்டது.அதன் பின்னரே கிழக்கை கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் கிழக்கில் தேர்தல் நடத்தி ஆட்சிகளும் அமைக்கப்பட்டன, பல அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் பின் வடக்கைக் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையும் வரை எமது நடவடிக்கை தொடரும். அதேவேளை பிரபாகரன் பணயம் வைத்திருக்கும் தமிழ் மக்களின் நலன் கருதும் நடவடிக்கைகளும் தொடரும். அவர்களின் அத்தியவசிய தேவைகள்,மருத்துவ தேவைகள் போன்றவை கருத்திற் கொள்ளப்படும்.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழேவைக்கும் வரை போர் நிறுத்தப்பட மாட்டாது என அரசு உறுதியாக தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் மட்டுமே யுத்தம் நிறுத்தப்படும். சமாதான பேச்சுவார்த்தைத் தொடரும். விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா இரு ஆண்டுகளுக்கு நீடித்தமையினால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இந்தியா செயற்படாது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.