அன்பான பிரபாகரனுக்கு,
பொலீஸாரின் சித்திரவதைகளை ஒரு காலத்தில் நானும் இலங்கையில் அனுபவித்தவன். அடக்குமுறைகொண்ட கொடிய அரச கருவிகளின் தொழிற்பாடு எங்கும் ஒன்றுதான்.
இன்று காலையில் எழுந்தவுடன், உங்கள் நிலை அறிய பத்தி ரிகைகளையும் ,இணையங்களையும், முகப் புத்தகங்களையும் தேடினேன். தகவல் பெற முடியவில்லை.
உங்களின் “செருப்படியை” கொண்டாடிய முகப் புத்தக நண்பர்களின் பக்கங்களிலும் உங்கள் நிலை பற்றி அறிய முடியவில்லை. அவர்கள் அடுத்த ” பலிக்கடாவை” கொண்டாடுவதற்காக தயாராகிக்கொண்டிருப்பார்கள்.
உங்களுக்கு ஏதாவதொருவகையில் உதவ முடியுமா என எண்ணினேன். உங்களின் குடும்ப வாழ்வு பற்றி எதுவும் எனக்கு தெரியாது. எனினும், இலங்கையிலிருந்து புதுக்கோட்டை அறந்தாங்கிக்கு அருகே உள்ள ஆவனந்தான் கோட்டையில் நீங்கள் வாழ்வதாக அறிந்துகொண்டேன்.
பிரபாகரன், உங்களின் உணர்வுகளை – உணர்ச்சிகளை நான் மதிக்கிறேன்.
முன்னொரு காலத்தில், உங்களைப்போன்றுதான் நாங்களும் இருந்தோம்.எமது தலைவர்கள் சுட்டிக்காட்டிய “துரோகிகள்” எல்லோருக்கும் முதலில் முட்டைகள் அடித்தோம்.செருப்புக்கள் வீசினோம்.கற்களைக்கொண்டும், தடிகளைக்கொண்டும் மண்டைகளை உடைத்தோம்.நாங்களும் எமக்கான “துரோகிகளை” உருவாக்கிக் கொண்டோம்.
“துரோகிகள்” உயிர்வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் என எமது தலைவர்கள் சூளுரைத்தார்கள். நாம் ‘தனிநபர் பயங்கரவாதத்தை’ தேர்ந்தெடுத்தோம்.
துப்பாக்கிகளுக்கு வேலை கொடுத்தோம்.பல “துரோகிகளது” வாழ்வை முடித்து வைத்தோம்.
காலமும் – அரசியல் புரிதலும் ஏற்பட்டபோது, கடந்தகால இந்த அனுபவங்களும், செயற்பாடுகளும் எமது “கோரமுகத்தை” எங்களுக்கு காட்டியது.
எம்மைப்போல்தான், ஒருகாலத்தில் தோழர் லெனின் அவர்களின் அண்ணணார் அலெக்ஸாந்தரும் இருந்தார்.தனிநபர் பயங்கரவாதமே அனைத்திற்கும் தீர்வு என நம்பினார்.ஜார் மன்னனை கொலை செய்ய முயன்று தோல்வியுற்றார்.
அப்போது, தோழர் லெனின் இவ்வாறு கூறினார்.
“…அலெக்ஸாந்தர் நீ ஜாரை வெறுத்தாய். ஜாரை கொல்ல விரும்பினாய்.அவனைக்கொன்றுவிட்டால் சமூக அமைப்பு மாறிவிடும் மக்களின் வாழ்க்கை மேம்படும் என நீ நினைத்தாய். ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாச் மாதம் முதல் தேதியன்று மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புரட்சியாளர்கள் ஜார் இரண்டாம் அலெக்ஸாந்தரை கொன்றார்கள். அதனால் மக்களின் வாழ்க்கை மேம்பட்டுவிட்டதா என்ன? கொஞ்சம்கூட இல்லை.இரண்டாம் அலெக்ஸாந்தரின் இடத்தில் அமர்ந்தான் புதிய ஜார்- மூன்றாம் அலெக்ஸாந்தர்.நிலமை சீர்பட்டதா? இல்லவே இல்லை.எனவே வேறுவிதமாகப் போராடவேண்டும் என்றுபடுகிறது “…
அன்பான பிரபாகரன், வரலாறுகள் எமக்கு பலவற்றை படிப்பிக்கின்றது. நாம்தாம் அனைத்தையும் நிராகரிப்பவர்களாக மாறிக்கொண்டு வாழ்கின்றோம்.