Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அழித்துவிட்டு ‘சமாதானத்தை’ ஏற்படுத்த இலங்கைக்குப் பணம் வழங்கும் அமெரிக்கா

us-imperialismஉலகைத் தனது ஆதிக்கத்திற்குள் உட்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசு இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தும் அதே வேளை தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக அரசுகளைக் கட்டுப்படுத்தும். தெற்காசியாவின் முதல் தன்னார்வ நிறுவனமான கொழும்பு பிளான் என்ற அமைப்பு இலங்கையிலேயே தோற்றுவிக்கப்பட்டது, இலங்கையில் மக்கள் எழுச்சிகள் தோன்றுவதற்கான ‘அபாயம்’ காணப்படுவதாகக் கூறி ஏகாதிபத்திய நாடுகள் தன்னார்வ நிறுவனங்களை உருவாக்கின. பிற்காலத்தில் போராட்ட அமைப்புக்களையே மறைமுகத் தலையீடுகளின் ஊடாகத் தோற்றுவித்து அதனைப் பிற்போக்கு அரசியல் தலைமைகளிடம் கையளித்து அழிவுகளை ஏற்படுத்தின. இன வெறியையும் இனவாதத்தையும் திட்டமிட்டு உருவாக்கின.

சாதிச் சங்கங்கள், போலி இடதுசாரிக் அமைப்புக்கள் போன்றன பெரும் தொகைப் பணச் செலவில் ஏகாதிபத்தியங்களால் தோற்றுவிக்கப்பட்டன.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் நோர்வே அரசின் பண உதவியுடன் பொது பல சேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

பொதுவாக ஏகாதிபத்தியங்களின் ஒட்டுக்குழுக்கள் போன்று செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தன்னார்வ நிறுவனங்களாக மாற்றும் முயற்சி இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,

தன்னார்வ நிறுவனங்களுக்கு மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் நேரடியாகவும் அபிவிருத்தி வங்கிகள் ஊடாகவும், பல்தேசிய நிறுவனங்கள் ஊடாகவும், உப அமைப்புக்கள் ஊடாகவும் நிதி வழங்கி வருகின்றன.
Swedish International Development Cooperation Agency SIDA, Australian Agency for International Development AusAID,Swiss Agency for Development and Co-operation SDC,UK Government Department for International Development DFID,USAID,EuropeAid Co-operation,Asia Development Bank, GTZ ,Norwegian Agency for Development Cooperation NORAD போன்ற நிதி வழங்குனர்கள் உட்படப் பல அமைப்புக்கள் இலங்கை முழுவதும் நிதி வழங்கி வருகின்றன.

ஆயிரக் கணக்கான நெல் வகைகளை உலகிற்கு வழங்கிய பங்களாதேஷ் என்ற நாடு 80 களின் பின்னர் தன்னார்வ நிறுவனங்களின் புகலிடமாகியது. வங்கிகளும், தொலைபேசிச் சேவையும் தன்னார்வ நிறுவனங்களே நடத்துமளவிற்கு பங்களாதேஷ் இனுள் தன்னார்வ நிறுவனங்கள் ஊடுருவி உள்ளூர் பொருளாதாரத்தைச் சிதைத்து, கையேந்தும் சமூகம் ஒன்றை உருவாக்கின. இன்று பங்களாதேஷ் உலகின் வறிய நாடுகளில் ஒன்று. ஊழலில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடுகளில் ஒன்று.

இவ்வாறான ஒரு சூழலில் அமெரிக்க அரசு தனது USAID ஊடாக பல தன்னார்வ நிறுவனங்களை நடத்தி வருகிறது. இப்போது, இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் , தொழிலாளர் பேரவை, 750,000 டொலர்களை இலங்கைகு வழங்கவுள்ளது.

சமாதானம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், வெளிப்படைத் தன்மை போன்றவற்றை உருவாக்க இப் பணத்தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேவேளை ஊழல்களை ஒழிப்பதற்காக இராஜாங்க திணைக்களம் பிறிதாக 1,000,000 டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இப் பணம் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாகவே இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தனது நோக்கங்களுகு ஏற்ற திட்டத்தை முன்வைக்கும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பணத்தை வழங்கும்.

ஐ.நாவில் அமெரிக்க அரசு போர்க்குற்றத் தீர்மானத்தை பிரேரித்த வேளையிலேயே இலங்கையின் உள்ளே கொலைகாரர்களிடமே பொறுப்புக்கூறும் பணியை ஒப்படைக்கப் போவதையும் தீர்மானித்திருக்கும். அமெரிக்க அரசை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு போர்க்குற்ற விசாரணையை அழித்துத் துவம்சம் செய்ய புலம்பெயர் அரசுகளே துணை சென்றன.

Exit mobile version