அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 அரசியல் தமிழ் கைதிகள் மயக்கமடைந்துள்ளனர். நேற்றுக் காலை 4 பேர் மயக்கமடைந்ததையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட அரச வைத்தியர்கள் அவர்களுக்கு சேலைன் ஏற்றியுள்ளனர்.
நேற்று மாலை மயக்கமடைந்த 7 பேருக்கு இன்று காலையே சிகிச்சையளிக்க முடியுமென சிறைச்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் 65 தமிழ் அரசியல் கைதிகளும் தமது கோரிக்கைக்கு உரிய அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோமென தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக நேற்று வவுனியா சிறைச்சாலை உட்பட் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.