Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அனந்தி எழிலன் நேர்காணல்:காணாமல் போனோர் பிரச்சனையை விக்னேஸ்வரன் அரசியல் பிரச்சனையாகக் கருதவில்லை

இனியொரு: நீங்கள் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் என்ன?

அனந்தி: எனக்கு அரசியல் என்பதில் குறிப்பான ஆர்வம் இருந்ததில்லை. சமூகத்தின் இன்றைய உண்மையான பிரச்சனை ஒன்றை நான் முன்வைத்துக் குரலெழுப்புகிறேன், அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையும் கூட. காணாமல் போனவர்களுடைய பிரச்சனையை முன்வைத்தே நான் இன்று பொதுவாகக் குரல்கொடுக்கிறேன். வேறு யாரும் இந்தப் பிரச்சனையை முன்வைத்துப் போராடியிருந்தால் நான் இதற்குள் வந்திருக்க மாட்டேன்.

இனியொரு: ஜனாதிபது ஆணைக்குழு தொடர்பாக?

அனந்தி: அது ஒரு கண்துடைப்பு வேலை. மக்களை மிரட்டுவது போலக் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு வரிக் கேள்விகளில், ஏன் காணமல் போனார், ஆமி கடத்தியதா, இயக்கம் கடத்தியதா, எப்படி உங்களுக்குத் தெரியும் என்று குறுகிய கேள்விகளைக் கேட்கிறார்கள். மிரட்டல் பாணியில் கேட்கப்படும் இக்கேள்விகள் மக்களைப் பொறுத்தவரை ஒரு உளவியல் தாக்குதல் போலவே அமைகிறது.

இனியொரு: இது இலங்கை அரசின் கண்துடைப்பு வேலை என்றும், விசாரணையில் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் பிரதி நிதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்குபற்ற வேண்டும் என்பதை ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கையாக முன்வைக்கவில்லை? இது இன்று பற்றியெரியும் அரசியல் பிரச்சனை இல்லையா?

அனந்தி: அது சரி, விசாரணைக் குழுவில் சமிந்த அத்துக்கோறள என்ற சட்டத்தரணியும் உள்ளார். அவர் இலங்கை அரசு என்ன செய்தாலும் நியாயப்படுத்தும் அரசாங்க சட்டவல்லுனர். இவர்களிடமிருந்தெல்லாம் நீதியை எதிர்பார்க்க முடியாது. இதேல்லாம் பாதிக்கப்பட்ட என்னைப் போன்றவர்களுக்குத் தான் தெரிகிறது. அதன் வலியும் வேதனையும் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. சம்பந்தனும் விக்னேஸ்வரனும் இதனை அரசியல் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இது தனியே மனித உரிமைப் பிரச்சனையாகத் தான் பார்க்கிறார்கள். இது காணாமல் போனவர்களின் பிரச்ச்சனை ஆகவே அனந்தியிடம் விட்டுவிடுவோம் என்று தான் அவர்கள் கருதுகிறார்கள்.

இனியொரு: அது சரியானதா?

அனந்தி : இல்லை..

ஆனால், நீங்கள் அன்றாடப் பிரச்சனைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் நாங்கள் அரசியல் தீர்வைப் பார்த்துக்கொள்கிறோம் என்பது தான் அவர்களுடைய மனோபாவமாக உள்ளது. அவர்கள் அவ்வாறு சொல்வதை எப்படி நிராகரிப்பது.

இனியொரு : இன்று உப்பு விலை அதிகரித்தாலும் அரசுக்கு எதிராகச் சிந்திக்கிறோம். உப்பிலும் அரசியல் இருக்கும் போது, நாளந்த வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மிகப்பெரும் உரிமைப்பிரச்சனை அரசியல் பிரச்சனை இல்லையென அவரகள் சொல்வது சரியா?

தொடரும்….

அனந்தி எழிலலுடன் நடத்திய மிக நீண்ட உரையாடலில் முதலாவது பகுதியை இங்கு தருகிறோம். மிகுதி விரவில்…

Exit mobile version