இலங்கையில் ஊடகத்துறையில் பல வருடங்களாகச் செயற்படுபவரும் அதிகாரத் தரகருமான வித்தியாதரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கிறார். முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு இக் கட்சியை ஆரம்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்படுவதற்குச் சற்று முற்பட்ட காலப்பகுதிகளில் கொழும்பில் இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான அதிகாரத் தரகராகச் செயற்பட்ட வித்தியாதரன், மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவராகவிருந்தார்.
உதயன் பத்திரிகையில் ஆசிரியராகக் கடமையாற்றிய வித்தியாதரன் புலிகளுடனான தொடர்பை தனது அதிகார தரகிற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினார். இன்று புதிய துருப்புச் சீட்டு ஒன்றை அவர் திட்டமிட்டு ஆரம்பிக்க முற்படுவதின் மறுபக்கமே புதிய அரசியல் கட்சி.
கட்சி ஒன்றினுள் போராளிகளை இணைக்காவிட்டால் ஆயுதப் போராட்டத்தின் பால் அவர்கள் ஈர்க்கப்படும் அபாயம் காணபடுவதும் கட்சியை ஆரம்பிப்பதற்கான நோக்கங்களில் ஒன்று என வித்தியாதரன் குறிப்பிடுகிறார்.
மக்கள் தாமாகவே ஆயுதப் போராட்டத்தை விரும்புவதில்லை. அரசுகள் அப்பாவி மக்கள் மீது ஆயுத ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் போது அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன.
மக்கள் மீதான இராணுவ மற்றும் ஆயுதப்படைகளின் ஒடுக்குமுறை இன்னும் தொடரும் நிலையில் தற்காப்பு யுத்தத்திற்கான அரசியல் வெளி இலங்கையில் காணப்படுகிறது.. அதனைப் பலவீனப்படுத்தும் பேரினவாதிகள் மற்றும் அதிகார வர்க்கங்களின் திட்டமே வித்தியாதரனின் கட்சி என்பது வெளிப்படை.