Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அதிகரிக்கும் சிங்களப் பேரினவாதம் : விஜிதா

மீள்குடியேற்றப் பணிகளில் உலக சாதனையைப் புரிந்து விட்டதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போரளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு சிறந்த வாழ்க்கையொன்றைப் பெற உதவி வருவதாகவும் அமைச்சர்கள் பல இடங்களிலும் பேசி வருகின்றார்கள்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து கேட்ட போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் சுதந்திரமாக நடமாட முடியும் என்றும் இவர்களுக்கு எவரும் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர பல தடவைகள் தெரிவித்திருந்தார். ஆயினும் யாழ்.நகரில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் இராணுவ முகாம்களில் கைச்சாத்திட வேண்டும் என இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு புறம் ‘வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை” என தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பென்கமுவ நாலக தேரர் தெரிவித்திருக்கிறார். நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த போதே தேசப்பற்றுள்ள தேரர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். மட்டக்களப்பிறகும், திருகோணமலைக்கும், யாழ். பொன்னாலைப் பகுதிக்கும் தான் சென்று வந்ததாகக் கூறியுள்ள தேரர் அங்குள்ள மக்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றில்லை என அம்மக்கள் கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.

பேரினவாத அரசியல் வியாபாரம் காரணமாக மக்கள் கருத்துக்களை செவிமடுக்க முடியாத நிலையில் இனவாத சிங்கள தலைவர்கள் பலர் இருந்து வருவதை இதன் மூலம் அறிய முடிகிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அவா கொண்டிருந்ததாக இனங்காட்டிய பலர் இப்போது இனப்பிரச்சினை என்ற ஒன்று இருந்ததே இல்லை எனக்கூறத் தொடங்கியிருக்கிறதனையும் அவதானிக்க முடிகிறது. புலிகளை வீழ்த்திய பெருமித உணர்வில் வாழும் சிங்கள தலைவர்கள் பலரும் தமிழர்களின் இனரீதியான அடையாளத்தினை – எழுச்சியை இல்லாதொழிக்க இதுவே தக்க தருணம் எனக்கருதிவருகிறார்கள்.

இதற்கிடையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு இராணுவம் அனுமதி மறுத்த பல சம்வங்கள் இடம்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் தமிழில் தேசிய கீதத்தைப் பாட ஆரம்பித்த போது அங்கிருந்த இராணுவத்தினர் அதனை உடனடியாக நிறுத்துமாறு மாணவர்களுக்கு கட்டளை இட்டுள்ளனர். சிங்கள மொழி மூலமான தேசிய கீதத்தை கசற் மூலம் ஒலிக்கவும் செய்துள்ளனர்.

இதற்கிடையில் பூநகரியில் தனிமையில் வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயாரொருவரை கடந்த சனிக்கிழமை இரண்டு இராணுவ வீரர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ள செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் மடத்திலும் அருகிலுள்ள கடைகளிலும் தங்கியுள்ள படையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூநகரி 4ம் கட்டை விக்னேஸ்வரா வித்தியாலயம் தொடர்ந்தும் இராணுவ முகாமாக இயங்கி வருவதனால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு 10 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பூநகரி மகாவித்தியாலயத்திற்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை பூநகரி – இரணைமடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  மீனவர்களை கடற்படையினர் தாக்கியிருப்பதுடன், அவர்கள் பிடித்து வைத்திருந்த 400 கிலோ மீனையும் பறித்துச் சென்றதாகவும், பச்சை மீனை உண்ணச் செய்து முழந்தாளிட்டு வைத்திருத்தாகவும் தெரிவிக்கபடுகிறது. இந்தச் சம்பத்தையடுத்து கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இச்செய்திகள் வட-கிழக்கு தொடர்ந்தும் இராணுவ ஆட்சியதிகாரத்தின் கீழ் ஆளப்பட்டு வருகிறது என்பதனையும் இதனால் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலை இருந்து வருவதனையும் அதற்கு மேலாக இராணுவ அடக்குமுறைகள் தொடர்கின்ற நிலையினையும் அறிந்து கொள்ள முடிகிறது. வட-கிழக்கில் மக்கள் எவ்வாறானதொரு சூழலிலே வாழவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

கிழக்கிலும் வன்னியிலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் பெளத்த மயமாக்குதலும், இராணுவக் குடியிருப்புக்களும் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன.

நிலைமைகள் இவ்வாறு தொடர்கையில், கடந்த ஆறு நாட்களில் பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக்கருதப்படும் 81 அகதிகளுடன் 7 படகுகள் அவுஸ்திரேலியவைச் சென்றடைந்துள்ளன எனவும் இதையடுத்து இந்த வருடம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த படகு அகதிகளின் எண்ணிக்கை 5547 எனவும் செய்தி வெளிவந்துள்ளது. இவ்வாறு செல்லும் அகதிகளால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கவலை தெரிவித்து வரும் இலங்கை அரசு, இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும் தொடர்ந்தும் அகதிகள் செல்லும் நிலை காணப்பட்டு வருகிறது.

பல வருடங்களாக நிறுவன மயப்பட்ட பேசின வாதத்தின் நச்சு வேர்களுக்கு இலங்கை அரசியல்வாதிகள் திட்டமிட்டு நீர்வார்க்கிறார்கள். ஒரு புறத்தில் உருவாக்கி வளர்க்கப்படும் பேரினவாதத்தை மறு புறத்தில் குறுந்தேசிய வாதத்தினால் எதிர்கொள்ள முடியாது என்பதை முள்ளிவாக்கால் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

மக்களை அமைப்பாக்குவதும், சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதிகளை பலவீனமடையச் செய்யும் வகையில் அங்கிருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளை வென்றெடுப்பதும் இன்றைய எமது அரசியல் தேவையாகும். இலங்கையில் வாழ்கின்ற ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களான மலையக மக்கள், மூஸ்லீம் மக்களும் வட கிழக்குத் தமிழர்களைப் போலவே ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்களுடனான பரஸ்பர உடன்பாடும் புரிந்துணர்வும் அவசியமாகிறது.

ஒடுக்கப்படுகின்ற மக்கள் பகுதியினரான தமிழ்ப் பேசும் மக்களைப் போன்றே காஷ்மீரிகளும், பழங்குடிகளும், இன்னும் உலகம் முழுவதும் பெரும்பான்மையாக வாழும் ஜனநாயக சக்திகளும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நாம் நேசக்கரன் நீட்டினால் எம்மை யாரும் இலகுவில் அழித்துவிட முடியாது. நேர்மையான நண்பர்களை அடையளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதும் உலகில் அரசுகளுக்கு அழுத்தம் வழங்கப்பட்டே நாம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதும் நாம் கற்றுக்கொள்ளும் புதிய பாடங்களாகும்.

இலங்கைக்கு வெளியால் வாழ்கின்றவர்கள் இந்த இணைவுகளுக்கு ஆரோக்கியமான பங்களிப்பு வழங்கமுடியும். இலங்கையில் உருவாகின்ற வெகுஜன அமைப்புக்களையும் அவற்றின் அணிதிரள்வையும் தம்மாலான அளவிற்கு ஆதரிக்க வேண்டும். இந்த அடிப்படைகளிலிருந்தே புதிய போராட்டம் வித்திடப்படலாம்.

Exit mobile version