Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணு சக்தி ஒப்பந்தம்: தாமதமாகும்?

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு 123 ஒப்பந்தம் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பின்னடைவு, அந்நாட்டு பங்குச் சந்தைகளி்ல் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவற்றை தடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், வரும் 25ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அழைப்பை ஏற்று வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்திருந்தால் அன்றைய தினமே இருவரும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க தனியார் வங்கிகளான லீமென் பிரதர்ஸ் திவாலானதால், அமெரிக்க பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக உலக பங்குச்சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதையடுத்து அமெரிக்க பொருளாதாரம், பங்குச்சந்தையை சரிவில் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் பற்றி அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளதால், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்த விவாதம் தள்ளிப் போகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வரும் 25ஆம் தேதி மன்மோகன்சிங்- ஜார்ஜ் புஷ் சந்திப்பின் போது, 123 ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Exit mobile version