Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணு சக்தி ஒப்பந்தம்: சமாஜ்வாடி

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

புதுடெல்லியில் இன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விளக்கினார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலர் அமர் சிங், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு நாடாளுமன்றத்தில் நேரடியாகவோ அல்லது ஒரு அறிக்கையின் வாயிலாகவோ பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எம்.கே. நாராயணனிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையின் மீது ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியில் நாளை விவாதித்தப் பிறகுதான் சமாஜ்வாடி கட்சி இறுதி முடிவு எடுக்கும் என்று அமர் சிங் கூறினார்.

இதற்கிடையே மற்றக் கட்சிகளின் தலைவர்களை இடதுசாரி தலைவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். முன்னாள் பிரதமர் தேவே கவுடாவை இடதுசாரி தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேவே கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலர் தனிஷ் அலி, இந்தியா தனது சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை விட்டுத் தரக் கூடாது என்பதில் தங்கள் கட்சி உறுதியுடன் உள்ளதாகக் கூறினார்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நமது நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், அயலுறவுக் கொள்கை, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை விட்டுத் தரவேண்டுமா என்பதை பிரதமர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பர்தனும் ஷாமிம் ஃபைசியும் கூறினர்.

Exit mobile version