சனி, 30 ஆகஸ்ட் 2008( 13:43 IST )
அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு நாடுகளுடன் (Nuclear Suppliers Group – NSG) அணு சக்தி வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி கேட்டு நமது நாட்டின் சார்பாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவில் ஒப்புக்கொள்ளபட்ட அடிப்படைகளில் எந்த திருத்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது.
சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியில் கரண் தாப்பரின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்திற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி முன்வைக்கப்பட்டுள்ள வரைவில், அணு ஆயுதச் சோதனைகள், பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம், யுரேனியம் செரிவூட்டல் உள்ளிட்டவை தொடர்பான பகுதிகளில் எந்தத் திருத்ததையும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றதுடன், இந்த விடயங்கள் சார்ந்த பிரச்சனைகளை பேச்சின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரைவில் மேம்போக்காகச் செய்யப்படும் திருத்தங்களை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டதற்கு, “மேம்போக்காக அல்லது வேறு விதமான என்ற கேள்விக்கே இடமில்லை. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பாக நமது பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில், நாம் சில எல்லைகளை வகுத்துள்ளோம். அவை மீறப்படுமானால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.
அணு ஆயுதச் சோதனை நடத்தினால் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு முறிந்துவிடும் வகையில் இந்தியாவின் வரைவு திருத்தப்பட வேண்டும் என்று அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவில் (என்.எஸ்.ஜி.) உள்ள சில நாடுகள் வலியுறுத்துவது பற்றிக் கேட்டதற்கு, அணு ஆயுதச் சோதனை செய்யக்கூடாது என்ற வாதம் இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார் நாராயணன்.
“அணு ஆயுதச் சோதனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் நாங்கள் உறுதியளித்துள்ளோம். என்.எஸ்.ஜி.யில் நாங்கள் எதை ஒப்புக்கொண்டாலும் அதை நாடாளுமன்றத்திடம் தெரிவிப்போம்” என்றும் அவர் உறுதியளித்தார்.
அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு நாடுகளுடன் வணிகம் மேற்கொள்ள விலக்குடன் கூடிய அனுமதி கேட்டு முன்மொழியப்பட்டுள்ள வரைவின் மீது இறுதி முடிவு எடுப்பதற்காக செப்டம்பர் 4ஆம் தேதி என்.எஸ்.ஜி. கூடவுள்ள நிலையில், நிபந்தனைகள் ஏற்க முடியாது என்று இந்தியா வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.