Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அணுக்கழிவுகளும் எச்சரிக்கைக் குறியீடுகளும்.

-சோபனா – சேலம்.

நாம் வருங்கால சந்ததியினருக்கு பரம்பரை சொத்தாக விட்டுச் செல்லப்போகும் அணுக்கழிவுகள் பூமிக்கு அடியில் புதைக்கப்படுகின்றன.

ஆனால் அவை புதைக்கப்பட்ட இடத்தில் எச்சரிக்கை செய்ய நாம் தற்போது உபயோகிக்கும் அபாயம் என்பதற்கான குறியீடுகளோ சிவப்பு எழுத்திலான வார்த்தைகளோ போதாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அனைத்து மொழிகளும் காலப்போக்கில் நிறைய மாற்றம் கண்டுள்ளன.

உதாரணமாக தற்போது 21ம்நூற்றாண்டில் உபயோகிக்கும் ஆங்கிலம், 11ம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த ஆங்கிலத்திலிருந்து மிகவும் மாறியுள்ளது. போர்களினாலும், பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளினாலும் மனிதர்களின் வாழிடமும் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் இன்று நாம் பயன்படுத்தும் மொழிகளும் குறியீடுகளும் பல தலைமுறைகளுக்குப்பின் வழக்கொழிந்து போய்விடக்கூடும். அணுக்கழிவுகளின் விஷத்தன்மையோ வீரியம் குறையாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இருக்கும். எனவே இவற்றை அப்புறப்படுத்துவதில் தீவிர கவனம் தேவைப்படுகிறது.

அமெரிக்காவில் அணுஆயுதக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் அணுக்கழிவுகள் புதைக்கப்பட்டுள்ள, மெக்சிகன் பாலைவனத்தில் மிகப்பிரம்மாண்டமான கற்பாளங்களை நிறுவி அவற்றில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாமல் இருக்கும் குறியீடுகளை செதுக்க ஆலோசித்து வருகின்றனர்.

பிரான்சில், அணுக்கழிவு மேலாண்மைக்கான தேசிய முகமை பண்டைக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட ஒளிரும் தன்மையுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் அழியாமல் இருக்கும் எழுத்துக்களுடன் கூடிய விலங்குகளின் தோல் போன்ற காகிதங்களை உபயோகிக்க முடியுமா என ஆராய்ந்து வருகிறது.

அணுக்கழிவுகள் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் மனித சமூகத்துடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான், இதற்கான அபாய எச்சரிக்கைகள் தலைமுறை தலைமுறையாக மக்களிடையே எடுத்துச் செல்லப்படும் என்ற வலுவான எண்ணம் ஐரோப்பாவில் நிலவுகிறது.

‘இன்றைய நாகரிக சமூகம் இதுபோன்ற இடங்களைப் பாதுகாப்பதையும், எச்சரிக்கைகளை வழிவழியாகக் கொண்டு செல்வதையும் கலாச்சாரமாகக் கொள்ள வேண்டியது கடமை. மேலும் இனி வரும் காலங்களில் புதைக்கப்பட்ட கழிவுகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படலாம். அதுவரை அவற்றை பத்திரமாகப் பாதுகாப்பது அவசியம்’ என்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான நிறுவனமும், வளர்ச்சிக்கான அணுசக்தி முகமையும் வாதிடுகின்றன.

மனித குலத்திற்கே சவாலாக இருக்கும் அணுக்கழிவுகள் குறித்து அனைத்து நாடுகளும் தீவிர ஆலோசனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

ஆதாரம் : பிஸினஸ் லைன்

Exit mobile version