Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடுத்த ஜனாதிபதியை தமிழர்களால் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்!: விக்டர் ஐவன்

அடுத்த ஜனாதிபதியை தீர்மானிப்பதில் முக்கிய “வகி பாகம்” தமிழர்களிடமே இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்கான உரிமையை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் கோரி வருவதனால் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகள் இந்த இருவருக்கும் இடையில் பிரிந்து செல்லும் நிலைமை காணப்படுகிறது. அதனால் எதிர்வரும் 26 இல் இடம்பெறும் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக நாட்டின் 2.5 மில்லியன் தமிழ் வாக்காளர்கள் காணப்படுகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக இருந்த வடபகுதியில் ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் தேர்தல் பிரசாரம் நடத்தியுள்ளனர். முன்னாள் யுத்த வலயத்தில் மீள்கட்டுமான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்துவதாகவும் வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் இரு பிரதான வேட்பாளர்களும் தமிழர்களின் ஆதரவைக் கோரியுள்ளனர். புலிகளை வெற்றி கொண்ட விடயத்திலேயே சிங்கள சமூகம் இப்போதும் மிதந்து கொண்டிருப்பதாகவும் ராஜபக்ஷவுக்கா, பொன்சேகாவுக்கா வாக்களிப்பது என்பது தொடர்பாக பிளவுபட்டு நிற்பதாகவும் ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.

புலிகளின் பிரசன்னம் இல்லாமல் 37 வருடங்களின் பின்னர் தமிழ் சமூகம் வாக்களிக்கவுள்ளதாகவும் அடுத்த ஜனாதிபதியை தமிழர்களால் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் வாக்குகள் தொடர்பாக பாரிய கேள்விகள் முன் எழுந்துள்ளன. வட,கிழக்கில் உள்ள பலரின் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் யாருக்கு அவர்கள் வாக்களிக்கப்போகின்றனர் என்பதும் பாரிய கேள்விகளாக உள்ளன.பல்லாயிரக்கணக்கானோர் தற்போதும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாகவும் அதனால் வாக்களிப்பு வீதம் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என்று ஜனநாயகத்திற்கான இயக்கத்தைச் சேர்ந்த நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.

தற்போது தமிழ் வாக்குகள் பாரியதொரு காரணியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் வட,கிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணி வேட்பாளர் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இதேவேளை, தனது சமூகம் தேர்தல் போட்டியில் “மன்னரை உருவாக்குபவராக செயற்பட முடியும் என்றும் புலிகள் இல்லையாயினும் அவர்களின் செல்வாக்கு தற்போதும் இருப்பதாகவும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். இதன் பொருள் அநேகமான தமிழர்கள் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்கக்கூடும். ஏனெனில் புலிகளை அழிப்பதற்கான அரசியல் தீர்மானத்தை எடுத்த ஒருவர் என்று அவர் நோக்கப்படுகிறார் என்று சித்தார்த்தன் ஏ.எவ்.பி.க்கு தெரிவித்துள்ளார்.

புலிச் சந்தேகநபர்களென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானோரை விடுவிப்பதாக இரு வேட்பாளர்களும் வாக்குறுதியளித்துள்ளனர். ஊழல், பொருளாதாரம், ஊடகச் சுதந்திரம் என்பனவே பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் மத்தியிலான முக்கியமான விவகாரங்களாக நோக்கப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

Exit mobile version