இத்தனைக்குப் பின்னரும் இந்திய அரசை இலங்கைக்கு அழைக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விக்னேஸ்வரன் என்ற திடீர் வேட்பாளர். இந்துஸ்தான் டைம்ம்ஸ் இற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தனது ‘அரசியல்’ அடிமைத்தனத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
இந்துஸ்தான் டைம்ஸ்: ஆனால் இந்தியா ஒரு விடயத்தை, உதாரணமாக காஷ்மீர் விடயத்தையோ அல்லது நக்சலைட் கிளர்ச்pயாளர்கள் விடயத்தையோ எப்படி கையாளவேண்டும் என்று அதற்கு உபதேசம் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை, உண்மையில் இந்தியா தலையீடு செய்வதாக வட மாகாணம் உட்பட ஸ்ரீலங்கா முழுவதிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுகின்றனவே. எனவே ஏன் இந்தியா இதில் தலையிட வேண்டும்?
விக்கினேஸ்வரன்: இதோ ஒரு எதிரான கேள்வி. வடக்கில் 150,000 ஸ்ரீலங்கா துருப்புகள் தென்னிந்தியாவில் உள்ள உங்கள் அணு உலைகளுக்கு மிகவும் நெருக்கமாக நிலை கொண்டுள்ளார்கள். கச்சதீவுக்கு படகுகளில் சென்ற எங்கள் கடற்படையினருடன் சீன தேசத்தவர்கள் இருந்ததை கண்டுள்ளார்கள். இந்த விடயங்களை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள விடயங்களாக கருதக்கூடாதா? ஓ! அது ஸ்ரீலங்காவின் உள்வீட்டு விடயங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா, வடமாகாணத்துக்கு அதிகாரத்தை பரவலாக்குவதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட 13வது திருத்தத்தை பாருங்கள் அது கொழும்பினால் ஏற்கனவே பல தடவைகள் வெட்டியும் கொத்தியும் மாற்றப்பட்டு வருகிறது. தற்சமயம் அதை முற்றாக நீக்குவதற்காகக்கூட ஸ்ரீலங்காவின் பாராளுமன்றம் அதை விவாதித்து வருகிறது. இந்தியா விரும்பினால்கூட அதனால் செயற்படாமல் இருக்க முடியாது.
இந்துஸ்தான் டைம்ஸ்: இதில் என்ன ஆக்கபூர்வமான பங்களிப்பை இந்தியா வழங்கமுடியும். மற்றும் வரப்போகும் மாகாணசபைக்கு முந்திய 2 மாதங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தென் பகுதியில் உள்ள சிங்கள பேரிவாதிகளுக்கோ அல்லது வட மாகாண தமிழ் வாக்காளர்களுக்கோ எரிச்சலை மூட்டாமல் எத்தகைய பங்களிப்பை வழங்க முடியும்.
விக்கினேஸ்வரன்: எங்கள் இராணுவம் முகாம்களுக்கு திரும்புவதை, வாக்காளர்களின் தேர்தல் அடையாள அட்டைகள் பறிக்கப்படாமல் இருப்பதை, மக்களை அசு;சுறுத்தி வாக்களிக்காமல் தடுக்கும்படியான மர்மமான குண்டுகள் வெடிக்காமல் இருப்பதை இந்தியாவால் உறுதி செய்ய முடியும். கண்காணிப்பாளர்களை அங்கு நியமித்து நீதியானதும் ஊழலற்றதுமான தேர்தல் நடப்பதை அது உறுதி செய்வதுடன், தேர்தல் வித்தியாசமான ஒரு எண்ணத்தை பிரதிபலிப்பதை கட்டாயப்படுத்தவதற்குப் பதிலாக, தமிழர்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள் என்பதை எங்கள் அரசாங்கத்துக்கு உணர்த்தவும் முடியும்.தமிழ் நாட்டிலுள்ள நண்பர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது இயற்கையானது, ஆனால் ஸ்ரீலங்கா விடயம் அங்கு அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நான் இதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்: நீங்கள் எங்களுக்கு வேறு எந்த விதமான உதவிகளைச் செய்வதையும் நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் தயவு செய்து எங்கள் சொந்தப் பிரச்சினைகளுக்கான எங்கள் சொந்த தீர்வுகளை ஐக்கியமான ஸ்ரீலங்காவுக்குள் நாங்களே தீர்த்துக் கொள்வதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்.
இந்தியாவிற்கு அதன் புதிய நண்பரான விக்கிக்கும் ஒரே துயரம் தான். தமிழ் நாட்டில் எழுச்சிகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே அது. காங்கிரஸ் காரர்களுக்கு விக்கி ஒரு வரப்பிரசாதம். வரவிருக்கும் தேர்தலில் காங்கிரசிஸ் ஈழத் தமிழர்களைக் கொன்று போட்ட கறையை நீக்குவதற்கு விக்கினேஸ்வரனை விட சிறந்த முதலமைச்சர் இந்தியாவிற்குக் கிடைக்கபோவதில்லை.
விக்னேஸ்வரன் தனது பரிவரங்களோடு இந்திய நலனுக்காக தனது ஓய்வு நாட்களைக் ஓட்டி முடித்துவிடும் போது இலங்கை இந்திய அரசுகள் தமிழ்ப் பேசும் மக்களை ஒட்டச் சூறையாடி முடித்திருப்பார்கள்.