புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இலங்கைக்கு எதிரான குரோதப் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கோரியுள்ளார்.
புலம்பெயர் மக்கள் கள நிலவரங்களை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்களில் சில தரப்பினர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், ஆயுத போராட்டம் விரைவில் ஆரம்பமாகும் என குறுட்டுத் தனமான நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், சில புலம்பெயர் தமிழர்களும் இணைந்து இந்தப் பிழையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்த வலய மக்கள் வறுமையில் வாடுவதாகவும் சிறுவர் சிறுமியர் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவி பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கே புலம்பெயர் மக்கள் கூடுதல் முனைப்பு எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இலங்கை ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள அனைத்து பிரச்சாரப் பீரங்கிகளும் பேசுகின்ற அதே குரலில் கே.பியும் பேசுகின்றார். புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தில் வாழும் தமிழர்கள் கூட இனப்படுகொலை நடத்தும் இலங்கை அரசிற்கு எதிராகவே தமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.
கே.பி தன்னைப் போன்ற ஏனைய தமிழ் மக்களையும் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கிறார். இலங்கையில் வாழும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இலங்கை அரசினால் பறிக்கப்பட்டு அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு வெளியிலிருந்து அரச பாசிசத்திற்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. அவற்றையும் நிறுத்தி இனப்படுகொலைக்கும், இனச் சுத்திகரிப்பிற்கும் முழுமையான அங்கீகாரத்தைக் கே.பி வழங்குமாறு கோருகின்றார்.
புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலான எதிர்ப்புணர்வு சரியான அரசியல் தலைமை நோக்கி உள்வாங்கப்படாத நிலையில் தவறான முழக்கங்களைக் கொண்டிருப்பது உண்மையே. அதன் தவறான பகுதிகளை கே.பி போன்ற அரச ஆதரவு அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தமிழ் மக்களை அடிமைகளாக வாழுமாறு நிர்பந்திக்கின்றனர். இன்று அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டியது சர்வாதிகார இலங்கை அரசும், மகிந்த குடும்பமும், அவர்களின் துணைப்படைகளுமே தவிர, புலம் பெயர் தமிழர்கள் அல்ல.