தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் நிலப் பறிப்பு உட்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைளுக்கு எதிராக போராடும் மக்களோடு இணைந்து கொள்ளத் தயாரற்ற நிலையிலேயே உள்ளது. இனப்படுகொலை அரசிற்கு எதிரான போராட்டங்கள் ஊடாகவே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில் அரச துணைக்குழுக் கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இவரது கருத்தானது அரசியல் வியாபாரிகளுக்கு இடையிலான முரண்பாடு மட்டுமே.
நடைமுறைச் சாத்தியமானதும், பொருத்தமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கை மீள இணைப்பதனை விடவும் பல முக்கிய அவசர பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கூறு உள்கட்டுமானம் என்பது பல் தேசிய நிறுவனங்களுக்கு இலங்கையையும் குறிப்பாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களையும் அடகுவைப்பதாகும். பேரினவாத அரசும் பன் நாட்டு நிறுவனங்களும் இணைந்து நடத்திய உள்கட்டுமான வேட்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாதைகளாகத் தெருக்களில் அலைவிடப்பட்டுள்ளனர். தவிர, வடக்கையும் கிழக்கையும் இணைப்பது என்பது வட – கிழக்கில் வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும்.