Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அடக்குமுறைச் சட்டங்களும் அரசாங்க எருமைகளும்…. : தியாகு.

காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை என்பது இந்தியத் தேசியப் பற்றாளர்களுக்குப் பிடித்தமான ஓர் அடுக்குத்தொடர்.இந்திய அரசின் கீழ் இருக்கும் வடகோடி முதல் தென்கோடி வரை இணைக்கிற பொதுத்தன்மை என்னவென்று தேடிப்பார்த்தால் மிஞ்சுவது அடக்குமுறையும் அடிமைத்தனமுமே.

இந்தியா பிரித்தானிய வல்லாதிக்கத்தில் அடிமை நாடாக இருந்தபோது அடக்குமுறைச் சட்டங்களின் அணிவகுப்பு தொடங்கிற்று. சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அதிகாரக் கைமாற்றம் நிகழ்ந்த பிறகும் அடக்குமுறைச் சட்டங்களின் பயணம் முடிவடையவில்லை. அது இன்றளவும் தொடர்கிறது.

ஒரு சட்டம் நியாயமானதாகவும், முறையானதாகவும், இயற்கை நீதியின்பாற்பட்டதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்பது சட்டத்திற்குரிய இலக்கணமாகும். இவ்வாறான சட்டங்கள் அவற்றால் பாதிக்கப்படுவோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய வாய்ப்பை வழங்கும். ஆனால், அடக்குமுறைச் சட்டங்கள் இந்த இலக்கணத்திற்கு உட்படுவதில்லை. எனவேதான் அவற்றைக் கறுப்புச் சட்டங்கள், ஆள்தூக்கிச் சட்டங்கள் என்கிறோம்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் முதல் கறுப்புச் சட்டமாகக் கருதப்படுவது ரௌலட் சட்டமாகும். முதல் உலகப் போரின் முடிவில் வளர்ந்த விடுதலை எழுச்சியை அடக்கி ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது இச்சட்டம்.

1919ஆம் ஆண்டில் இந்த ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமிர்தசரஸில் ஒரு பொதுக் கூட்டத்துக்காகத் திரண்டிருந்த மக்கள் மீது வெள்ளை ஆட்சியின் அதிகாரி ஜெனரல் டயர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்தார்கள். இதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை. இந்தப் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் “சுட்டேன், சுட்டேன், சுட்டுக் கொண்டே இருந்தேன், துப்பாக்கியில் தோட்டாக்கள் தீரும் வரை சுட்டேன்” என்று திமிராய்க் கூறினான்.

ஜாலியன் வாலாபாக் தொடர்பாக லண்டனில் நடைபெற்ற நீதி விசாரணையில் “அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?” என்று கேட்ட போது, ஜெனரல் டயர் பதிலளித்தான்:

“பாஞ்சால மக்களிடம் உளவியல் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தினேன்”.

ஜெனரல் டயர் சொன்னதன் பொருள் மக்களிடம் அச்சமூட்ட வேண்டும் என்பதே. துப்பாகிச் சூட்டுக்கு மட்டுமல்ல, அதற்கு வழிகோலிய ரௌலட் சட்டத்திற்கும் இதே நோக்கம்தான். அடக்குமுறைச் சட்டங்கள் அனைத்தும் மக்களை அச்சுறுத்தி திகிலடையச் செய்வதற்காகவே!

‘சுதந்திர’ இந்தியாவில் அடக்குமுறைச் சட்டங்களான இந்தியப் பாதுகாப்பு விதிகள், இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (மிசா), கலவரப் பகுதிகள் சட்டம், ஆயுதப் படைகள் தனி அதிகாரச் சட்டம், பயங்கரவாதச் சட்டங்களான தடா, பொடா… இவை அனைத்தும் ரௌலட் சட்டத்தின் வழிவந்தவையே. பார்க்கப் போனால், இவை ரௌலட் சட்டத்தை விடவும் கொடுமையானவை.

இந்தியத் துணைக்கண்டத்தின் எந்தப்பகுதியும் அடக்குமுறைச் சட்டங்களிலிருந்து விலக்குப் பெற்றிருக்கவில்லை.இந்தியாவை ஆள்வது ’சமயச்சார்பற்ற” காங்கிரசுக் கூட்டணியா,இந்துத்துவப் பா.ச.க.கூட்டணியோ என்பதோ,மாநில ஆட்சியைக் கையில் வைத்திருப்பது இடதுசாரிகளா,வலதுசாரிகளா,”திராவிடக்” கட்சியா,”தேசியக்”கட்சியா என்பதோ இதில் எந்த மாற்றத்தையும் தருவதில்லை.மக்கள் எழுச்சியின் அளவைப் பொறுத்தே அடக்குமுறைச் சட்டங்களின் கடுமையைக் கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்கின்றார்கள்.

வடகிழக்கிலும்,காசுமீரத்திலும் செயல்பட்டு வரும் ஆயுதப்படைகள் தனி அதிகாரச்சட்டம் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படவில்லை-இதுவரை.

நாளை அவர்கள் நினைத்தால் தமிழ்நாட்டிற்குள்ளும் அது நுழைவதற்குத் தடை ஒன்றுமில்லை.இந்திய ஒருமைப்பாடு என்பது அடக்குமுறைச் சட்டங்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பே என்ற குற்றாய்வை உரிய விதத்தில் மறுப்பார் யாருமில்லை.

காசுமீரத்து மக்கள் ”ஆயுதப்படைகள் தனி அதிகாரச்சட்டத்தை’ (AFSPA)எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்து மக்கள் தேசப்பாதுகாப்புச் சட்டம் (NSA)போன்ற அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

&&&&&&

அடக்குமுறைச் சட்டங்களின் பாதிப்பு மட்டுமின்றி அந்தச் சட்டங்களை ஆளும் அரசுகளின் அணுகுமுறையும் நம்மை அழுத்திக் கொண்டிருக்கின்றது.தேசப் பாதுகாப்புச் சட்டம் ஓர் அடக்குமுறைச் சட்டமாக இருப்பதால் மட்டுமின்றி,அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறவர்களின் அடக்குமுறைத் தன்மையாலும் நம் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொளத்தூர் மணி,சீமான்,நாஞ்சில் சம்பத் ஆகிய மூவரும் வெறும் மேடைப் பேச்சுக்காகவே தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப் படுத்தப்பட்டார்கள்.அவர்கள் பேசிய பேச்சுக்கள் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பொது அமைதிக்கும் கேடு பயப்பதாகச் சொல்லி அந்தச் சட்டம் அவர்கள் மீது ஏவப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம் தனித்தனி வழக்குகளில் அவர்கள் மூவரையும் விடுதலை செய்ய ஆணையிட்டது.கருணாநிதி தலைமையிலான தி.மு.க.ஆட்சிக்கு உயர் நீதிமன்றம் அடுத்தடுத்துச் சூடு போட்டாற் போல் இந்தத் தீர்ப்புகள் அமைந்தன.

கொளத்தூர் மணியும்,சீமானும், நாஞ்சில் சம்பத்தும் பேசியதாகக் காட்டப்பட்ட பேச்சுக்களை உயர்நீதிமன்றம் நியாயப்படுத்தியதாக இதற்குப் பொருளில்லை.பேச்சுகள் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள் அப்படியேதான் நீடித்தன.ஆனால் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் படித் தடுப்புக்காவல் ஆணை பிறப்பித்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை.பேசப்படும் கருத்துகள் ஆட்சியாளர்களுக்கு உவப்பானவையாக இல்லாமற் போகலாம்.ஏன் ஒட்டு மொத்தச் சமூகத்திற்கே ஒவ்வாத கருத்துக்களாகவும் கூட போகலாம்.

இந்தக் கருத்துகளை வெளியிடுவது சில சட்டங்கள்ளின் படித் தண்டணைக்குரிய குற்றங்களாகவும் கூட இருக்கலாம்.ஆனால் இந்த ஒவ்வாக் கருத்துகளின் அடிப்படையில் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவ முடியுமா என்றால் முடியாது.உச்ச நீதி மன்றமும் உயர் நீதி மன்றங்களும் எத்தனையோ தீர்ப்புகளில் இதைத் தெளிவாக்கியுள்ளன.சட்டம் பயில்கிற ஒரு மாணவருக்கும் கூட எளிதில் புலனாகிற இந்த உண்மை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏன் விளங்கவில்லை?

அடக்குமுறைச் சட்டங்களின் தாக்குதலுக்குப் பழக்கப்பட்ட ஆளும்கட்சி, அடக்குமுறைச் சட்டங்களில் சிறைப்பட்டதைப் பெருமையாகக் காட்டிக்கொள்ளும் முதலமைச்சர்….அதே போன்ற அடக்குமுறைச் சட்டங்களை மற்றவர்கள் மீது வகைதொகையின்றி ஏவத் தயங்குவதில்லையே,ஏன்?

மாநில அரசில் ஒரு சட்டத்துறை இயங்குகிறது,கொழுத்த சம்பளத்தில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் வேலை செய்கிறார்கள்.சட்ட அறிவுரை சொல்வதற்கென்றே அரசுத்தலைமை வழகுரைஞர் போன்ற பலரும் இருக்கிறார்கள்.இவர்களில் யாரும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் படித்து அவற்றின் படிப்பினைகளை அரசுக்கு எடுத்துச் சொல்வதே கிடையாதா?

கடந்த 2009 ஆம் ஆண்டு,பிப்ரவரி 17 ஆம் நாள் திருநெல்வேலி வழக்குரைஞர் சங்கம் ஏற்பாடு செய்த பாளை வழக்குரைஞர் சங்கம் ஏற்பாடு செய்த சவகர் திடல் கூட்டத்தில் சீமான் பேசிய ஒரு மேடைப் பேச்சுக்காகத் தேசப் பாதுகாப்புச் சட்டச் சிறையில் அடைத்து உயர் நீதிமன்றத்தில் சூடுபட்ட அதே அரசாங்கம் மீண்டும் அதே போன்ற பேச்சுக்காக அதே சீமானை அதே தேசப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது என்றால் என்ன பொருள்?

இப்படியெல்லாம் நாம் தொடுக்கும் வினாக்களுக்கு ஒரேயொரு விடை தான் கிடைக்கிறது.அரசாங்க எருமைகளுக்கு மழை பொருட்டில்லை என்பதே.

&&&&&

சென்ற 10-7-2010 இல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.சிங்களப்படை தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டித்தும் இலங்கையில் தமிழ் இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.அமைத்துள்ள விசாரணைக் குழுவை எதிர்க்கும் நாடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்களைச் சீமான் மீதான தடுப்புக்காவல் ஆணை எடுத்துக்காட்டுகிறது.”வீழ்ந்து விடாத வீரம்;மண்டியிடாத மானம்;பிரபாகரன் வாழ்க! இலங்கைத்தமிழர்கள் வாழ்க! தமிழீழ நாட்டை அழித்துத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா ஒழிக! பிரபாகரன் வாழ்க!தமிழீழம் வாழ்க! தமிழர்களைக்கொலை செய்யும் ராஜபக்‌ஷே ஒழிக! தமிழர்களைக்கொலை செய்யும் இலங்கை அரசை ஆதரிக்கும் மத்திய அரசு ஒழிக! இந்திய ராணுவம் ஒழிக!சீனப்பேரரசு ஒழிக!

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் சீமான் இந்திய அமைதிப்படை இழைத்த கொடுமைகளை எடுத்துக்காட்டிக் கூட்டத்தினரை வன்முறைக்குத் துண்டினாராம்.
”தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் ஒரு சிங்கள மாணவன் கூட இந்த மண்ணில் படித்து உயிருடன் இலங்கைக்குப் போக மாட்டான்.”

சீமானுக்கு எதிரான தடுப்புக்காவல் ஆணையை நியாயப்படுத்த மிக முக்கியமாக எடுத்துக்காட்டப்படும் வாசகம் இதுவே.சீமானின் இந்த எச்சரிக்கையோடு உடன்படுபவர்களும் இருக்கலாம்,முரண்படுபவர்களும் இருக்கலாம்.ஆனால் கருத்துரிமையை உயர்த்திப் பிடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திப் பேசப்படும் கருத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.உடன் பட்ட கருத்துக்கு மட்டும் தான் உரிமை என்றால் அதற்குப் பெயர் கருத்துரிமை அன்று.

முரண்பட்ட கருத்துக்கும் உரிமை இருக்கும் போது தான் கருத்துரிமைக்குப் பொருள் கிடைக்கிறது.

இதை விடவும் முக்கியமான ஒரு கேள்வியைத் தோழர் சீமானைச் சென்ற முறை தேசப் பாதுகாப்புச் சட்டச் சிறையிலிருந்து விடுதலை செய்த பொழுது சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியது.சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்றால் அந்தப் பேச்சைக் கேட்டு நடந்த வன்செயல்கள் எவை?என்பதே அந்தக் கேள்வி.

இப்போதைய சீமான் பேச்சினால் எந்தச் சிங்கள மாணவன் கொல்லப்பட்டான்?அல்லது தாக்கப்பட்டான்?அப்படி எதுவும் நடைபெறவில்லை.நடைபெற வேண்டும் என்பது சீமானின் அல்லது நாம் தமிழர் கட்சியின் நோக்கமோ திட்டமோ அல்ல.தொடர்ச்சியான தமிழக மீனவர் படுகொலை என்னும் வினைக்குச் சீமானீன் உணர்ச்சிமயமான எதிர்வினையே அது.இப்படித்தான் பகுத்தறிவுள்ள எவரும் அதைப்புரிந்து கொள்வார்கள்.அரசாங்க எருமைகளிடம் பகுத்தறிவை எதிர்பார்ப்பதற்கில்லையோ?

சரியோ,தவறோ பேசப்படும் ஒரு கருத்தினால் தேசப்பாதுகாப்புக்கே ஆபத்து வந்துவிடும் என்றால் அந்த தேசம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்க முடியாது.

(தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் நிலவும் பாசிச ஆட்சியில் கருத்துரிமைக்கு சாவு மணி அடித்து விட்ட போக்கை அம்பலப்படுத்தும் ‘’கல்லறையில் கருத்துரிமை” நூலில் இருந்து தோழர் தியாகு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்திருக்கிறோம். ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒட்டி தமிழகத்தில் கருணாநிதி நடத்திய பாசிச தர்பாரை அம்பலப்படுத்தும் இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டியது.)

நூல் -கல்லறையில் கருத்துரிமை.

விலை- 50, கிடைக்குமிடம்., சமூக விழிப்புணர்வு பதிப்பகம்.,68,எல்டாம்ஸ் சாலை,தேனாம்பேட்டை,,சென்னை- 600018- பேசி- 9488576166
Exit mobile version