Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அச்சேறாத ஒரு மடல் : சி. சிவசேகரம்

குமுதம் தீரா நதியில் ‘ கைலாசபதியை மெச்சி அ. முத்துலிங்கம் எழுதிய பண்பாடான நீண்ட குறிப்பும் திருமதி கைலாசபதியுடனான அவரது உரையாடலின் ஒரு பகுதியும் வெளிவந்தன. கைலாசபதியுடன் அரசியல் உடன்பாடற்றவருமான முத்துலிங்கம் கைலாசபதியின் ஆளுமையைச் சிலாகித்து எழுதியதைத் தாங்கிக் கொள்ள இயலாமல் ஒக்டோபர் தீராத நதியில் முகம்மது என்பவர் வலிந்து கைலாசபதியைத் தாக்கி அவர் சாதித் தடிப்புடையவர் என்று கூறி நிலவிலே பேசுவோம் சிறுகதை பற்றிக் குறிப்பிட்டதோடு கைலாசபதி தனக்கு வேண்டியவர்களையும் தன் கட்சிக்கு உடன்பாடானவர்களையும் மட்டுமே ஊக்குவித்தார் என்றும் எழுதியிருந்தார். இவற்றை மறுத்து நான் பிரதி எடுத்துக் கொள்ளாமல் தீரா நதிக்கு எழுதிய மடலில் பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தேன்.
 

‘நிலவிலே பேசுவோம்’ என்கிற கதை கைலாசபதி சிறுவயதினராக இருந்த போது வந்தது. அக்கதையில் வருகிற பெரிய மனிதர் அவராக இருந்திருக்க இயலாது. அக்கதையை வலிந்து அவருடன் தொடர்பு படுத்தியவர் எஸ். பொன்னுத்துரை. விஜயபாஸ்கரன் இலங்கைக்கு வந்தபோது கைலாசபதி வீட்டில் அவருக்கு விருந்தளித்த போது பேச்சுத்துணைக்கு மேலும் ஒருவராக தேவன் அழைக்கப்பட்டிருந்தார். விருந்தின் பின்பு இடதுசாரிகளைச் சீன்டி விடுகிற விதமாக நீங்கள் எல்லாருமிருக்க ஏன் என்னை அழைத்தார் என்று தேவன் கேட்ட பின்ணனியில் டொமினிக் ஜீவா அதற்கு சாதிய நோக்கங்கற்பித்துப் பேசியதையே பொன்னுத்துரை தனது பொய்ப்பிரசாரத்திற்கு வாய்ப்பாக்கிக் கொண்டார். டானியல் அதைப்பற்றி எந்தவிதமான கவலையுங் காட்டவில்லை. ஏனென்றால் கைலாசபதி வீட்டிற்கு சாதி வேறுபாடின்றி எல்லாரும் போய் வருகிறவர்கள் என்ற உண்மை அவருக்குத் தெரியும். கைலாசபதி வீட்டு உபசரிப்புப் பேதம் பாராட்டதது என்றும் அவருக்குத் தெரியும். கைலாசபதி ஜீவா டானியல் இருவரையும் சேர்த்து அழைத்தால் இருவரும் மோதுவார்கள். விருந்தாளிக்கு சங்கடம் ஒருவரை விட்டு மற்றவரை அழைத்தால் அது வேறொரு பிரச்சினை. எனவே கட்சிமட்டத்திலுள்ளவர்களைச் சந்திக்க வேறு வாய்ப்புகள் இருந்த விஜய பாஸ்கரனுக்குக் கட்சி சாராத ஒரு படைப்பாளியை கைலாசபதி அறிமுகம் செய்ய முற்பட்டார். இதற்கு அப்பால் போய் கைலாசபதிக்குச் சாதிய முத்திரை குத்துகிற தேவை பொன்னுத்துரைக்கு இருந்த காரணம் அவரது தனிப்பட்ட வன்மமும் இடதுசாரி எதிர்ப்புமேதான். தனது தமிழக உறவுகளை இவ்வாறான வக்கிரங்கட்குப் பொன்னுத்துரை பயன்படுத்தத் தவறவில்லை.

நிலவிலே பேசுவோம் விடயம் மட்டுமன்றிப் தன்மீதான பல்வேறு அவதூறுகளையும் கைலாசபதி அறவே புறக்கணித்தார். அவ்வாறான தனிப்பட்ட தாக்குதல்கட்கு அவர் பதில் கூறுவது அவற்றை கௌரவிப்பது ஆகும் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்து வந்தது. எனவே நிலாவிலே பேசுவோம் அவரைப்பற்றியதல்ல என்பது அவரது காலத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கதையை எழுதிய என். கே. ரகுநாதன் இரண்டு மூன்று ஆண்டுகள் முன்னரே அதைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியதால் கைலாசபதி பற்றிய அந்த அவதூற்றை மூன்று தசாப்தங்கட்குப் மேலாகப் பரப்பப் பொன்னுத்துரைக்கு வாய்ப்பிருந்தது. 1990களில் குற்றச்சாட்டை பரப்பிய மு. பொன்னம்பலம் போன்ரோரை மறுத்து நான் எழுதியிருக்கிறேன். அதற்கு முன்பும் பின்பும் பிறகும் எழுதியிருந்தனர்.

எனினும் கைலாசபதியை நிந்திப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களை நிறுத்த இயலவில்லை. அவர்களது யோக்கியம் அப்படி.
கைலாசபதி தனக்கு நெருக்கமானோரையும் கட்சிக்கு நெருக்கமானோரையும் மட்டுமே ஊக்குவித்தார் என்பதைப் பொய்ப்பிக்க முத்துலிங்கமே போதுமான சான்று. அவரை விட சிரித்திரன் ‘சுந்தர்’ முதலாகப் பலரைக் குறிப்பிடலாம் தினகரனில் அவர் பொறுப்பிலிருந்த இரண்டாண்டுகளில் அவர் ஈழத்து எழுத்தாளர்களை ஊக்குவித்தளவு வேறெந்த பத்திரிகை ஆசிரியரும் தனது முழு வாழ்நாளிலும் செய்ததாகக் கூறுவது கடினம். கைலாசபதி தனது நிலைப்பாடுபற்றி எவருக்கும் கருத்துக் குழப்பம் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாகவே இருந்தார் அதனாலேயே அவர் சிலரால் வெறுக்கப்பட்டார். அதே வேளை அவரை ஏற்காதோராலும் அவர் மதிக்கப்பட்டார்.
  என்னுடைய சொந்த அனுபவத்தைக் கூறுவதனால் நான் அவரை 1976 வரை சந்திக்கவில்லை. அதன் பிறகு கூட ஓரிரு சந்திப்புகளே நடந்தன. எனினும் என்னைச் சந்திக்க முதலே ‘கழனி’ சஞ்சிகையில் புனைபேரில் வந்த என் கவிதையை எழுதியது யாரென்பது விசாரித்து நான் என்று கேள்விப்பட்டபோது கடித மூலம் அதை உறுதிப்படுத்திய பின்பே அதைப்பற்றி கட்டுரை ஒன்றில் படைப்பின் அடிப்படையில் அக்கவிதை பற்றி ஒரு குறிப்பை எழுதினார். முகம் தெரியாத படைப்பாளிகளை தேடி விசாரித்து அறிவது அவரது அக்கறையாக இருந்து வந்துள்ளது. கைலாசபதி பற்றி தீரா நதிக்கு அக்கறை இல்லை. அது குமுத நிறுவனத்தின் போலி இலக்கிய முகம் கைலாசபதி பற்றிய குறிப்பு அங்கு வந்த காரணம் அங்கே ஒழுங்காக எழுதுகிற முத்துலிங்கம் தான். கைலாசபதி பற்றிய அவதூற்றை பிரசுரிக்க கூசாத தீரா நதிக்கு அதற்கான என் பதிலைப் பிரசுரிக்க அக்கறை இல்லை. இவ்வாறு தமிழகத்தில் பொன்னுத்துரை பரப்பிய பொய்கள் பரவி நிலைக்கத் தீரா நதி போன்ற வியாபார ஏடுகளும் உடந்தையாகின்றன. தமிழகத்தில் இருந்து வரும் ஈழத்து அக்கறையுள்ள இலக்கிய ஏடுகளின் கவனமெல்லாம் புலம்பெயர்ந்த தமிழரின் கையிலுள்ள பணத்தின் மீது தான் என்பது நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது. நாம் விழித்துக்கொள்வது எப்போது.

Exit mobile version