Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அக்ஷன் பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை விசாரணைகள் அர்த்தமற்றவை:சட்டத்தரணிகள் வெளியேற்றம்.

07.11.2008.

மூதூரில் அக்ஷன் பாம் ஊழியர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் ஒழுங்குவிதிகளுக்கு புறம்பானவையெனவும் அர்த்தமற்றவை எனவும் கூறி சிவில் சமூக அமைப்பும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களுக்கான சட்டத்தரணிகளும் வெளியேறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சிவில் சமூக அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை அக்கறையுடன் கவனித்து வந்த சிவில் சமூக அமைப்பு படையினர் சார்பாகவும் அதிரடிப்படை சார்பாகவும் ஆஜரான தனிப்பட்ட வழக்கறிஞர்களால் சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அலட்சியப்போக்குகள் தொடர்பாக நாம் பெரிதும் ஆச்சரியப்பட்டோம்.மேலும் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை, சுதந்திரம் ஆகியவை பற்றிய பாரதூரமான சந்தேகங்கள் எழுந்து அதன் நம்பகத் தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செய்மதிமூலமான சாட்சியமளித்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இடைநிறுத்தியதன் மூலம் ஆணைக்குழுவின் அடிப்படை விதியான சுதந்திரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சகல சாட்சிகளை ஆதாரங்களையும் விசாரணை செய்யும் வாய்ப்பு இல்லாமையால் விசாரணையை மேலும் முன்னெடுத்தல் அர்த்தமற்றதாகிவிட்டது.

மேலும், சாட்சியங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை தடுப்பதற்கும் ஆணைக்குழு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

இதனால் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி ஒருவர் சுதந்திரமாகவும் ஆக்கபூர்வமாகவும் சாட்சியமளிப்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வழக்கறிஞர்களாக செயலாற்றுவது சுதந்திரத் தன்மை பற்றியும் பக்கச் சார்பின்மை பற்றியும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அத்துடன் மனித உரிமை மீறல்கள் குறித்து அரசின் மீது குற்றம் சாட்டப்படும் பொழுது சட்டமா அதிபர் திணைக்களம் அரசினைப் பாதுகாக்க ஆணித்தரமாக எத்தனிக்கின்றது.

அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தை விசாரணைகளிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதி எத்தனித்தமை இதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கை கடற்படை லெப்டினற் ஒருவர் சாட்சியமளிக்கும் போது ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு பிரதியை முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

மேலும், ஆணைக்குழுவில் அங்கம் வகித்த ஆணையாளர் ஒருவரை பதவி விலகச் செய்வதற்கு ஜனாதிபதி முறையற்றரீதியில் செல்வாக்கினை பயன்படுத்தியுள்ளார்.

இதற்குப் பின்னர் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டிருந்த எட்டு ஆணையாளர்களில் மூவர் தொடர்ச்சியாக பதவி விலகினர்.

ஆனால், இப்பதவி விலகல்கள் தொடர்பாக பகிரங்கமாக விளம்பரப்படுத்தவோ அல்லது அவைபற்றி விளக்கம் கொடுக்கப்படவோ இல்லை.

ஆணைக்குழு மீதான இவ்வாறான நேரடித் தலையீடு மற்றும் மாறுபட்ட கொள்கைகளால் அதன் நம்பகத்தன்மையும் சட்ட பூர்வத்தன்மையும் எதிர்மறையாகவே பாதிக்கின்றது

இரண்டு வருடங்களைக் கடந்த நிலையில் கடந்த நான்காம் திகதி இவ்வழக்கு முடிவடைந்திருக்க வேண்டும்.

ஆனால், மேலும் 6 மாதங்களுக்கு நீடித்துள்ளது. இந்த ஆறு மாதங்களிலும் ஜனாதிபதி ஆணைக்குழு முக்கியமான எதனையும் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிவில் சமூக அமைப்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மனித உரிமைகள் இல்லம், இன்போம், சட்டம் மற்றும் சமூக நிதியம், இலங்கையின் தாய்மாரும் மகள்களும் அமைப்பு,இலங்கை சட்ட வல்லுநர் தேசிய ஆணைக்குழு, ரைற்ஸ் நௌகலெக்டிவ் டெமோகுறசி ஆகிய அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

அத்துடன் இவ்வமைப்பின் சார்பில் சட்டத்தரணிகளான ஷெல்றின் அகிலன், வி.எஸ்.கணேசலிங்கம் பவானி பொன்சேகா, நிமல்டா பெர்னாண்டோ, வனிற்றா ஞானராஜ் மற்றும் சுதர்சன கமகே, பியந்த கமகே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களுக்கான சட்டத்தரணிகளும் சாட்சிகள் தடுப்புப் பிரிவின் குறைப்பாடுகள், சர்வதேச விசாரணைகள், சுயாதீன விற்பன்னர்கள் குழுவினரின் வெளியேற்றம், செய்மதி மூலமான சாட்சியமளிப்பு இரத்துச் செய்யப்பட்டமை, சட்டமா அதிபரின் எதிர்மறையான செயற்பாடுகள் மற்றும் ஆணையாளர்களின் இராஜிநாமா போன்ற விடயங்கள் குறித்து தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்புகள் மற்றும் சாட்சிகள் சார்பாக சட்டத்தரணிகள் கே.எஸ். இரட்ணவேல் மற்றும் எஸ்.எஸ்.எம். சம்சுதீன் ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன், தாமும் நேற்று வியாழக்கிழமை முதல் இவ்விசாரணைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

Exit mobile version