சகிப்புத் தன்மைக்கு விருது பெற்றவர் எனக் கூறிவரும் ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில காடையர்களால் யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி கட்சியின் வேட்பாளர்களது வெற்றியை சகித்துக் கொள்ள இயலாமல் நேற்றைய தினம் நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஈ.பி.டி.பி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சகிப்புத் தன்மைக்கும் அகிம்சைக்கும் வன்முறைக்கும் எதிராக விருது பெற்றுள்ளதாக சுவரொட்டிகள் மூலமும் விளம்பரங்களின் மூலமும் பறைசாற்றி வரும் ஆனந்தசங்கரி தனது இளம் பருவத்தை ஞாபகப்படுத்தி அக்கால கட்டத்தில் தான் மேற்கொண்ட அடாவடித்தனங்களைத் இத் தேர்தல் காலத்தில் காடையர்களைக் கொண்டு அரங்கேற்ற நினைக்கிறார் போல் தோன்றுகிறது.
இத்தகைய தேர்தல் வன்முறைகளையும் அடாவடித்தனங்களையும் ஈ.பி.டி.பி. வன்மையாகக் கண்டிப்பதுடன் எதிர்வரும் மாநகர சபைத் தேர்தலை வன்முறைச் செயற்பாடுகளற்ற அமைதியான தேர்தலாக நடாத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்வதற்கான சுதந்திரம் இதுரையில் புலித்தலைமையால் மறுக்கப்பட்டு வந்துள்ளநிலையில் தற்போது அந்தநிலை மாற்றமடைந்து எமது மக்கள் தங்களது பிரதிநிதிகளை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கும் நிலையில் புலித்தலைமையின் பாணியில் எமது வெற்றியை சகித்துக் கொள்ள இயலாத ஆனந்தசங்கரி போன்றவர்கள் காடையர்களை விலை கொடுத்து வாங்கி வன்முறைகளில் ஈடுபடுத்துவது எமது மக்களின் சுதந்திரத்தைத் மீண்டும் தட்டிப் பறிக்கும் செயலாகும் என்பதை நினைவூட்ட விரும்புவதாக ஈ.பி.டி.பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.