அவுஸ்திரேலியா அகதிகளுக்கு வழங்கும் பணத்தால் நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது என்று திட்டமிட்ட பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் வெளி நாட்டவர்கள் மூன்றாம்தரப் பிரசைகளாகக் கணிப்பிடப்படுகிறார்கள். உள்ளூரில் தொழிலாளர்கள் நவீன அடிமைகள் போல வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வெளியான புள்ளி விபரங்கள் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும், பணப்பற்றாக்குறைக்கும் யார் காரணம் என்பதை தெளிவாகக் கூறுகிறது.
2013 ஆம் ஆண்டில் ஒரு வீதமான அமெரிக்கர்களின் மொத்த வருமானம் 1.8 ரில்லியன் டோலர்கள். வேலையற்றோருக்கான பண உதவித் தொலை, ஓய்வூதியம் உட்பட சமூக உதவித் தொகைக்காக அரசு ஒதுக்கியுள்ள மொத்தப் பணத்தொகை 860 பில்லியன்கள் மட்டுமே. இத்தொகையை விட ஒருவீதமான பணக்காரர்களின் வருமானம் இரண்டு மடங்கிற்கும் அதிகமானது. மருத்துவ உதவித் தொகை 304 பில்லியன்கள் மட்டுமே.
முதல் 400 பணக்காரர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு 2.29 ரில்லியன் டோலர்கள். இத்தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 270 பில்லியன்கள் அதிகமானதாகும்.
பல்தேசிய வியாபாரங்களின் கொள்ளைக்காக நாடுகள் யுத்தப் பிரதேசங்கள் ஆக்கப்படுகின்றன. இந்த யுத்தப் பிரதேசங்களிலிருந்து தப்பிவரும் அகதிகளை மீண்டும் அதே பிரதேசங்களை நோக்கி விரட்டியடிக்கும் பல்தேசிய வியாபாரிகளுக்கு எங்கிருந்து பணம் குவிகிறது?
இந்தியா, இலங்கை, ஆபிரிக்க நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளிலிருந்து எண்ணை, கனிமங்கள் போன்ற மூலவளங்கள் சுரண்டப்படுகின்றன. மலிவான உழைப்புச் சுரண்டப்படுகின்றது. குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதே நாடுகளில் சந்தைப்படுத்துகின்றனர். வறுமைக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் சண்விச் போன்ற உணவுப் பண்டங்களை மற்றும் குடிபானங்களைக் கூட ஐரோப்பிய- அமெரிக்கப் பல்தேசிய நிறுவனங்களே சந்தைப்படுத்துகின்றன.
தேனிர் கோப்பி போன்ற குடிபாங்களைக்கூட பல்தேசிய வியாபார நிறுவனங்களே தயாரித்து வழங்கவேண்டிய பரிதாபகரமான நுகர்வுக் கலாச்சாரம் உருவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சுரண்டப்படும் பணத்திற்கான வரிப்பணத்தையும், வருமான வரியையும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பின்னணியில் செயற்படும் பணக்காரர்கள்செலுத்துவதில்லை. 7.6 ரில்லியன் டோலர்கள் வரிப்பணம் வரிகட்டத் தேவையற்ற சிறிய தீவுகளில் பதுக்கப்பட்டுள்ளது.
ஆக, அகதிகளாலோ, வேலையற்றோராலோ, வறியவர்களாலோ பணம் சுரண்டப்படவில்லை. வரிகட்டவேண்டிய பண முதலைகள் வரிப்பணத்தைக்கூட விழுங்கி ஏப்பம் விடுகின்றனர்.
தமது மூலதனச் சுரண்டலுக்காக நாடுகளை யுத்த வலயங்களாக்கும் பல்தேசிய நிறுவனங்கள் அகதிகளை உருவாக்குகின்றன. அவர்கள் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்கள் ஊடாக மேலைத்தேச மக்களின் எதிர்ப்புணர்வைத் திசைதிருப்புகின்றன. இறுதியாக தாம் உருவாக்கிய அகதிகளை மீண்டும் தமது யுத்தப்பிரதேசங்களுக்கு அனுப்பி அழிக்கின்றன.