இனச்சுத்திகரிப்பினுள் தமிழ் மக்கள் வாழும் அதே வேளையில் அரசியல் தலைமைகள் அதனை வியாபாரமாக்கிக் கொண்டன. உலகம் முழுவதும் அகதிகள் விதைக்கப்பட்டனர். இலங்கை அரச பாசிசத்தின் கொலைக் கரங்களிலிருந்து தப்பிச்சென்றவர்கள் இந்தோனேசியா, மலேசியா, வியட்னாம். இந்தியா போன்ற நாடுகளிலும் ரோகோ,பெனின்,தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் அனாதரவாக விடப்பட்டனர். இவர்களின் அனாதரவான நிலை குறித்து தமிழ்த் தலைமைகள் கவனத்தில் கொள்ளவில்லை.
அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கூறும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனம் UNHCR உலகம் முழுவதும் சிதைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளைக் கண்டுகொள்வதில்லை. கடந்தவாரம் இந்த நிறுவனத்தால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மலேசியாவிலிருந்து இலங்கை அரசின் கொலைக்கூடத்திற்கு நாடுகடத்தப்பட்டனர்.
இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்ததை நடத்தி அகதிகளை விடுவிப்பதற்கோ, மலேசிய அரசு மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ UNHCR எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் உலகம் முழுவதுமுள்ள அகதிகளைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட அகதிகளை மீள அழைக்குமாறு கோரியும் சமூக உணர்வுள்ளவர்களின் இலாப நோக்கற்ற போராட்டத்தின் அவசியம் உணரப்படுகிறது.
இந்த நிலையில் லண்டனிலுள்ள அலுவலகத்தின் முன்பதாக 06.06.2014 அன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து அகதிகளுக்கான போராட்டக்குழுவினால் இனியொரு இணையத்தின் ஆதரவுடன் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முகவரி:
UNHCR (UN Refugee Agency)
Strand Bridge House
138 – 142 Strand
London
WC2R 1HH
காலம்: 06.06.2014 (வெள்ளி) நேரம்: மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை.
-அகதிகளுக்கான போராட்டக்குழு