அவுஸ்திரேலியாவின் அடிமை நாடு. ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளால் அடிமைப்படுத்தப்பட்ட நாடு பப்புவா நீயூ கினியா என்ற அழகிய கடல் சூழ்ந்த நாடு.
உலகில் அதிக கனிம வளங்கள் கொள்ளையிடப்படும் நாடுகளில் பப்புவா நியூ கீனியாவும் ஒன்று. காலனியாதிக்க நாடுகள் பப்புவா நியூ கினியாவின் மக்களைக் குழுக்களாகவே பேணி வந்தன. நவீன உலகின் காற்றுக்கூட உட்புகாதவாறு மூடப்பட்டு அழிக்கப்பட்ட நாடு அது.
2011 ஆம் ஆண்டில் உலகில் அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்று. அதே வேளை உலகின் ஆகக் குறைந்த தனி நபர் வருமானம் கொண்ட நாடுகளிலும் ஒன்று. பப்புவ நியூ கினியாவின் அதிகார வர்க்கம் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறது. அந்த நாட்டின் கனிம வளத்தை அவுஸ்திரேலியா கொள்ளையடித்து வருகிறது. மறுபக்கத்தில் பப்புவா நியூ கினீயா ஆதிமனித வரலாற்றை ஆய்வு செய்யும் மையமாக மனிதவள ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட பப்புவா நியூ கினியா வின் மக்கள் மத்தியில் பூட்டப்பட்ட சிறைகளில் ஈழத்தமிழ் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடலும் காடுகளும் சூழ்ந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் கூடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள அகதிகளுள் ஈரான், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அரச பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிவந்தவர்களும் அடங்குவர்.
1000 அகதிகளை விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவுஸ்ட்திரேலியாவை நோக்கி அகதிகளாக வந்தவர்கள். அவர்களது விருப்பிற்கு மாறாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அடைத்து வைத்துள்ளதை ஐக்கிய நாடுகள் நிறுவனமும் ஊதியம் வாங்கிக்கொண்டு மனித உரிமை எனக் கொக்கரிக்கும் அமைப்புக்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றன. கொலைஞர்களின் கரங்களில் மனித உரிமை ஒப்படைக்கப்பட்டிருப்பதன் உருத்திரிந்த வடிவமே இச் சம்பவங்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பு அடைத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளிடையே ஏற்பட்ட கைகலப்பு முற்றியதில் இரத்த ஆறே ஓடியிருக்கிறது. ஒரு அகதி கோரமாகக் கொலை செய்யப்பட்டார். 77 பேர் காயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அரச பயங்கரவாதிகள் தாம் அகதிகளை மட்டுப்படுத்திவிட்டோம் என மார்தட்டிக் கொள்கின்றனர். அவுஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தீவிர வலதுசாரி பாசிஸ்டுக்களின் எழுச்சி மனித குலத்தின் உடனடி அச்சுறுத்தலாக முன்னெழுகிறது.
விரிவாக: