வதந்தியைப் பரப்பும் தகவல்களை நீக்க சமூக இணையதளமான ஃபேஸ்புக், கூகுள், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. “வன்முறைகளை உருவாக்கும் வகையில் செய்திகளை தொடர்ந்து பரப்புவோரின் அக்கவுண்ட் முடக்கப்படும்’ என்றும் ஃபேஸ்புக் எச்சரித்துள்ளது. அசாமில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் வாழும் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக இணையதளம் மற்றும் செல்போனில் வதந்திகள் பரவின. இதைத் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வரும் 250-க்கும் மேற்பட்ட இணையதளங்களை அரசு தடை செய்தது. மேலும், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களிடம் இதுபோன்ற வதந்திகளை தடை செய்ய வேண்டுமென்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது: சமூக அமைதியைக் கெடுக்கும் விதத்திலான செய்திகள், படங்கள், பேச்சுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட்டதெனில் அது நீக்கப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஃபேஸ்புக் ஊழியர்கள் வன்முறையைத் தூண்டக் கூடிய செய்திகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றனவா என்று 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு லண்டனில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பரப்பும் விஷமமான செய்திகளை விழிப்புடன் ஃபேஸ்புக் நிறுவனம் கண்காணித்து வருகிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசுடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர். யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஃபேஸ்புக் பயன்படுத்துவோரை அந் நிறுவனம் கேட்டுக் கொண்டது. இதேபோல் கூகுள், டுவிட்டர் ஆகிய இணைய தளங்களும் தங்கள் இணையதளங்களில் பரப்பப்படும் வன்முறைகளை உண்டாக்கும் வதந்திகளைத் தடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளன.