பொங்குவது யார்?

pongalமக்களை ஒடுக்கியவர்கள் தாங்கள் திருந்திவிட்டது போல நாடகமாடுகிறார்கள். தவறுகளைச் சுயவிமர்சனம் செய்துகொள்வது போல ஏமாற்றுகிறார்கள். மறுபக்கத்தில் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் தலைமைகள் தாம் ஒரு போதும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மாட்டோம் என அடித்துக் கூறுகிறார்கள்.

தமிழர்களைச் சாரிசாரியாகக் கொன்றுகுவித்த இலங்கைப் பாசிச அரசும் மேற்கு நாட்டு ஏகாதிபத்தியங்களும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதற்காகவே தாம் உழைத்ததாகவும் கூறிக்கொள்கிறார்கள். ஊழல் அற்றதாகத் தோன்றும் அரசும், சில உரிமைகளும் வழங்கப்பட்டால் இலங்கையில் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள். போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தெரிந்தெடுத்துத் தண்டிக்கப் போகிறோம் என்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் மக்களைச் சூறையாடுவதற்கே திட்டமிடுகிறார்கள் என்பதில் என்ன சந்தேகம்? மக்களை சாரி சாரியாகக் கொன்று போட்ட கொலையாளிகளிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்ப்பது?

இவை அனைத்தையும் மீறி உலக அதிகாரவர்க்கம் அனைத்தும் இலங்கையில் மையம் கொண்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னை நாள் பிரதமரும் போர்க்குற்றவாளியுமான ரொனி பிளேயரின் இரண்டாவது தாய் நாடு போன்று இலங்கை ஆகிவிட்டது. உலக நாணைய நிதியமும், உலக வங்கியும் இலங்கையைச் சுற்றி வருகிறது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸ்வயர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார்.

நீண்ட பயணத்தின் பின்னர் யாழ்ப்பாணம் சென்றடைந்த அமைச்சர், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்திருக்கிறார். யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்து மகிழ்ச்சியடைந்தத்தாக பிரித்தானிய அரச இணையம் கூறுகிறது. அனைத்திற்கும் மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து பொங்கல் வாழ்த்து வேறு கூறுகிறார். இலங்கையில் சமாதானம் ஏற்பட்டு இனங்கள் அனைத்தும் நல்லிணக்கத்தோடு வாழும் இந்தப் பொங்கல் தொடர்பாக மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார்.

முன்னெப்போதும் இலங்கை கண்டிராத அளவிற்கு மூலதனக் கொள்ளை ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதே இவர்கள் அனைவரும் இலங்கையைச் சுற்றி வருவதற்கான காரணம்.

சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை அழிக்கப்பட்டு, தமது அடிமைகளின் கைகளில் மக்களின் தலைமை ஒப்படைக்கப்பட்டதையிட்டே அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் பொங்க வேண்டிய நேரம் தான் இது!

மறு பக்கத்தில் தம்மை பழமை வாதிகளாகவும், அடிப்படைவாதிகளககவும் உலகத்திற்குக் காட்டிக்கொள்ளும் தமிழர்களின் புலம்பெயர் வியாபாரிகள் தொடர்ச்சியான அழிவிற்கு வித்திட்டு வருகிறார்கள்.

சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை இன்னும் பிரிவினைக்கான ஆயுதமாகவே பயன்படுத்தும் இப் புலம்பெயர் பிழைப்புவாதிகள் பொங்கலையும் விட்டுவைக்கவில்லை. பொங்கல் பானையிலிருந்து புலிக்கொடி மேலெழ தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லண்டனில் தனது சுற்றை ஆரம்பித்துவிட்டது.

உழவர்களின் நாளான பொங்கல் ஒடுக்கப்படும் மக்களின் விழா. ஒடுக்கும் கயவர் கூட்டங்கள் பொங்கலையும் அழிப்பதற்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.