எது தமிழ்ப்புத்தாண்டு? : வி.இ.குகநாதன்

பொதுவாக சனவரி ஒன்றில் ஆங்கிலப்புத்தாண்டைப் புதுவருடமாக உலகளாவியரீதியில் மக்கள் கொண்டாடிவருகின்றபோதும் ஒவ்வொரு இனமும் தனக்கென தனியான ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தினையும் நடாத்திவருவதானது அவர்களின் தனித்துவத்தினையும், பண்பாட்டினையும் பேணிவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.  இந்தவகையில் தமிழரிற்கெனவும் ஒரு புத்தாண்டு கொண்டாடப்படவேண்டும் என்பதில் யாரிற்கும் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அப்புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்பதிலேயே குழப்பம் காணப்படுகிறது. இன்று ஈழத்திலும்சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர்தேசங்களிலும் சரி தமிழர்களில் பலர் சித்திரையிலேயே தமிழ்புத்தாண்டு என நம்பவைக்கப்பட்டுள்ளனர். இதனைப் பற்றிய ஒரு சிறிய ஆய்வாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டுமுறை:

சித்திரைப்புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது.  இக் கணிப்பீட்டின்படி சுக்கில, விரோதி, துன்மதி போன்ற அறுபது ஆண்டுகள் கணிப்பிடப்பட்டு சுழற்சிமுறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி இப்போது நடைபெறுவது துர்முகி ஆண்டாகக்கருதப்படுகிறது.  இத்தகைய கணிப்பீட்டு முறைக்கு அடிப்படையாக ஒரு புராணக்கதை கூறப்படுகிறது

சித்திரைப்புத்தாண்டு பற்றிய புராணக்கதை:

அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார். கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள்.  இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில்  ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.

தைப் புத்தாண்டு கணிப்பீட்டுமுறை:

ஆதித் தமிழர்கள் காலத்தினை பருவகாலங்களை அடிப்படையாகக்கொண்டு ஆறு பிரிவுகளாகப்பிரித்திருந்தனர். அவையாவன

1.இளவேனில்- தை,மாசி

2.முதுவேனில்- பங்குனி, சித்திரை

3.கார்காலம்- வைகாசி,ஆனி

4.கூதிர்காலம்-ஆடி,ஆவணி

5.முன்பனி- புரட்டாசி, ஐப்பசி

6.பின்பனி- கார்த்திகை,மார்கழி

இந்தப்பகுப்பினடிப்படையில் இளவேனில் காலத்தினை ஆண்டின் தொடக்கமாகக்கொண்டு தையிலேயே வருடப்பிறப்பினைக்கொண்டாடி வந்துள்ளார்கள். இப்போது சிலர் சித்திரையே இளவேனில் காலம் எனக் கூறலாம், ஆனால் தாயகத்தின் காலநிலையினைப் பொறுத்தவரையில் சித்திரை இளவேனிற்காலம் என்பதற்கு பொருந்தாது, மாறாக தையே  இளவேனில் காலத்திற்கும் வருடத்தொடக்கத்திற்கும் சிறப்பாகப்பொருந்தும்.   இதற்கான ஆதாரத்தினை  நாம் சங்க இலக்கியங்களான நற்றிணை,குறுந்தொகை, புறநாநூறு என்பனவற்றில் காணலாம். ( உதாரணம்- தைத்திங்கள் தண்கயம் படியும்-நற்றிணை, தைத்திங்கள் தண்கயம் போல்- புறநாநூறு). இவற்றினடிப்படையிலேயே தமிழர்களிடம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற முதுமொழி இன்றும் நடைமுறையிலுள்ளது.

இவ்வாறு தமிழர்களால் ஆதிமுதல் கொண்டாடப்பட்டு வந்த தைத்திருநாளானது கி.பி முதலாம் நூற்றாண்டளவில் பார்ப்பனியர்களின் மதரீதியான ஊடுருவல் மூலமாக சித்திரைக்கு மாற்றப்பட்டது. அதற்குப் பின்னரே தமிழர்களிடம் இந்தப் புதுவருடக்குழப்பம் ஏற்பட்டது.

குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு:

இக் குழம்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலை அடிகளார் தலமையில் 500 அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக்கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பார்ப்பனிய ஊடகங்களால் இச் செய்தி இருட்டடிப்புச் செய்யப்பட்டது. பின்பு 2006 இல் கருணாநிதியின் ஆட்சியில் தமிழக அரசால் தைத்திங்களே புத்தாண்டாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்பு (மீண்டும்  ஒரு பார்ப்பன ஆட்சியில்) ஜெயலலிதா ஆட்சியில்2011 இல் சித்திரையாக மாற்றப்பட்டது ஒரு வரலாற்றுச் சோகமேயாகும்.

புலிகளின் தை புதுவருடப்பிரகடனம்;

இக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்றுச் சோகமாக புலிகளின் அழிவிற்குப்பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை. புலிகளின் தியாகத்தினை வைத்து பிழைப்பு நடாத்திவரும் தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது புலம் பெயர் அமைப்புக்களோ இதில் எந்தவித அக்கறையுமின்றியிருப்பது அவர்களின் பிழைப்புவாதத்தினை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்துகிறது.

அறிவியல் பொருத்தப்பாடு:

வரலாறு, சொந்த விருப்பு வெறுப்புகளிற்கப்பால் அறிவியல்ரீதியாக தைத்திருநாளா அல்லது சித்திரைக் கணிப்பீடா பொருத்தம் எனப்பார்ப்போம். முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக்கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை  மறுபடியும் வருவதனால் குழப்பகரமானவை. மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (உதாரணமாக சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).

இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது.மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்கு சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக்கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.

மூன்றாவதாக சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்று த்தொன்மையானதாக க்காணப்பட, மறபுறத்தில் சித்திரை வருடப்பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.

நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால்  எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருந்தும். இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.

முடிவாகக்கூறின் தைத்திருநாளினை தைப்பொங்கலாக மட்டும் சுருக்காமல் தமிழரின் புத்தாண்டாகவும் கொண்டாடுவதே பொருத்தமானது. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.

“ நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”- பாவேந்தர் பாரதிதாசன்

-தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்-

 

 

7 thoughts on “எது தமிழ்ப்புத்தாண்டு? : வி.இ.குகநாதன்”

 1. தமிழனின் புத்தாண்டினை வெறும் பொங்கலாகச் சுருக்கிவிட்டு தங்களின் வருடத்தினை தமிழனின் தலையில் சுமத்திய ஆரியர் உண்மையிலேயே சூழ்ச்சித்திறன் மிக்கவர்கள், தமிழர்கள் ஏமாளிகள். இழந்த புதுவருடத்தினை மீட்டெடுப்போம்.

 2. தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில் தவறு இல்லை. ஆனால் தை மாதம் மற்றும் திருவள்ளுவர் வருடம் என்பன எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்ற விபரத்தையும் தெரிவித்தால் நலம். இப்போது ஆரியர் புகுத்திய கணித முறையில் 60 ஆண்டுக் கணக்குப்படி 10வது மாதத்தின் பிறப்பு தான் தை மாதமாகக் கணக்கிடப்படுகிறது.
  அத்துடன் இந்த சமய சாத்திரங்களின் படி சூரியன் 10 வீடு செல்லும் (மகரம் – சாத்திரப்படி இந்தியாவின் ராசி) நிகழ்வாகவும் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

  1. 1.திருவள்ளுவரின் பிறப்பானது தமிழ் அறிஞர்கள் குழுவினால் பொதுயுகத்திற்கு 31 ஆண்டுகள் முன்னர் என முடிவு செய்யப்பட்டது.
   திருவள்ளுவரின் காலத்தினை அவர்கள் திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துக்களினடிப்படையில் (சமண-புத்த நெறிகளின் செல்வாக்கு, வணிக சமூகம் அக்காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கு,போன்ற பல காரணங்கள்) தீர்மானித்தனர். அதனை தமிழக அரசும் பிற்காலத்தில் 1981 இல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
   2. தமிழர்கள் முதலில் காலத்தினை கட்டுரையில் குறிப்பிட்டபடி முதலில் ஆறு பருவ காலங்களாகப்பிரித்திருந்தனர்.இதில் இளவேனிற்காலத்தின் தொடக்கமானது பிற்காலத்தில் வந்த தை மாதக்கணிப்புடன் ஒத்துப்போனது.
   3.இராசிக் கணிப்பீடானது புவிமையக் கொள்கையினை (சூரியன் பூமியினைச் சுற்றிவருவது என்ற கருதுகோள்) அடிப்படையாகக் கொண்டதால் தவறானது.

   1. திரு குகநாதன் அவர்களே
    என்று தமிழ் ஆண்டு தொடங்கியது என்பது பற்றிய தகவலுக்கு நன்றி. எவ்வாறு தை முதல் நாள் கணக்கிடப்படுகிறது? எதனடிப்படையில் ஆண்டு காலப் பகுதி (உம் இன்றைய கலண்டரில் 365 நாட்கள் ஒரு வருடமாகும்.) கணக்கிடப்படுகிறது?
    இன்று இது இந்து மத கணக்கீடாகிய பஞ்சாங்கம் மூலம் தான் நடக்கிறது.
    எனவே விஞ்ஞான முறையாக கணக்கீடு ஒன்றை அறிமுகம் செய்தால் தைப்பொங்கல் நாளை சரியாகக் குறிக்க முடியும். (இது சூரியனையோ சந்திரனையோ அல்லது இரண்டினையுமோ வைத்துக் கணிப்பிடப்படலாம். இது 100 வீதம் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. ஒரு கணிப்பீட்டு முறை வேண்டும். அவ்வளவே.
    அது சரி “இளவேனிற்காலத்தின் தொடக்கமானது பிற்காலத்தில் வந்த தை மாதக்கணிப்புடன் ஒத்துப்போனது.” என்கிறீர்களே. அப்படியானால் பெயர் மட்டும் எப்படி தைப் பொங்கலானது?

 3. பயணத்தினைப் பொறுத்தது. இந்துக் கோயில்களிலும் அதுவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழரில் இப்போது பெரும்பான்மையினரும். முன்பு முற்றுமுழுதாகவும் இந்துக்களே . எனவே சித்திரை இறைவனால் அருளப்பட்டது

 4. தைப்பொங்கல் என்ற பெயர் பிற்காலத்திலேயே வந்தது.முன்பு அறுவடையுடன் தொடர்புடைய பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது.இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது.மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது.இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. மற்றையது சங்ககாலத்தில் கூறப்பட்ட “தை” என்பதனை சரியாக இப்போதைய ஆங்கில (January )மாதத்துடன் ஒத்துப்போனது எனக்கூறமுடியாது, ஏனெனில் ஆங்கிலேயர் கூட முன்பு பத்து மாதங்களுடைய ஆண்டினையே கணிப்பிட்டனர். பிற்காலத்தில் குறிப்பாக சொல்வதானனால் 1939 இல் திருவள்ளுவர் ஆண்டானது ஆங்கிலத்திகதி January 1 அன்றினை தை முதலாகக் கொண்டு 365.25நாட்களுடன் கணிப்பிடப்படுகிறது. இதற்கும் பஞ்சாங்கக்கணப்பிற்கும் தொடர்பில்லை. இது தொடர்பாக வேறு ஒரு கட்டுரையில் விரிவாகப்பின்பு பார்க்கலாம்.

 5. ஆங்கிலத்திகதி January 14 = தமிழ் தை 1 என்பதே சரி. முதல் கருத்தில் தவறாக january 1 என பதிந்துவிட்டேன்.

Comments are closed.