நிலப்பறிப்பிற்கு எதிரான கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்: அனைதாகளாகினர்

மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வை நடத்தி முடித்த விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட்ட குழுவினர் அங்கு மக்கள் திரள் திரளாக அணிதிரண்டுள்ளதாக புழகாங்கிதம் அடைந்துள்ளனர். விக்னேஸ்வரன் சுன்னாகம் நீரால் ஏற்பட்ட கறையக் கழுவுவதற்கு எழுக தமிழைப் தனக்குத் தேவையான அளவிற்குப் பயன்படுத்திக்கொண்டார். ஏனைய கட்சிகளைச் சார்ந்தவர்களும் தமக்கான வாக்குகளை நிகழ்விற்கு வந்த மக்களை வைத்துக் கணித்திருப்பார்கள். இனிமேல் எழுக தமிழ் இல்லை. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இலங்கை பேரினவாத- நவ தாராளவாத அரசின் ஆட்சிக்கு எதிரக எழுக தமிழ் எழுப்பாமலேயே மக்கள் தன்னெழுச்சியாகப் பல்வேறு எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர். எழுக தமிழை நடத்தும் வாக்கு வங்கி அரசியல் தலைவர்கள் யாரும் அந்தப் போராட்டங்களையெல்லாம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

தவிர, மாணவர்களின் இலவசக் கல்வியைத் துடைத்தெறியும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பக்கம் எழுக தமிழ் குழு எட்டிக் கூடப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் தமது கருத்துக்களைக்கூட அவர்கள் கூறவில்லை. இலங்கை அரசையும் அதன் பின்னணியில் செயற்படும் அமெரிக்க ஏகபோக அரசையும் பலவீனப் படுத்திவிடக் கூடாது என்பதில் எழுக தமிழ் தெளிவாகவிருக்கிறது போலும்.

சுய நிர்ணைய உரிமையுடன் கூடிய சமஷ்டி என முழங்கிய விக்னேஸ்வரனுக்கு சுய நிர்ணைய உரிமை குறித்த தெளிவு கிஞ்சித்தும் கிடையாது என்றாலும், சுன்னாகத்தில் அழிவை ஏற்படுத்திய மலேசிய நிறுவனத்தைக் காப்பாறுவதில் மட்டும் தெளிவாக இருக்கிறார்.

விக்னேஸ்வரனின் ஏனைய சகாக்களான கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் விக்கி மற்றும் ஐங்கரநேசன் துணையுடன் நடத்தப்பட்ட ‘கட்டமைக்கப்பட்ட’ அழிவாகக் கருதப்படும் சுன்னாகம் அழிவு தொடர்பாகப் பேசியது கூடக் கிடையாது.

கேப்பாபுலவில் மக்களின் வாக்குப்பலம் பாராளுமன்றக் கட்சிகளை ஈர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, அப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆங்காங்கு சிங்கள மக்கள் போராடியுள்ளமை தமிழ் இனவாதிகளை அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம்.

இலங்கை அரசின் ஊது குழலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை இப் போராட்டம் தமது எஜமானர்களுக்கு எதிராகப் பலமடைவதை விரும்பவில்லை என்பதால் முளையிலேயே கிள்ளியெறிய முற்படுகிறது.

மக்களின் குடியிருப்புக்களைக்கூட விடுதலை செய்வதற்கு இலங்கை அரச படை தயாரில்லை. தமது குடியிருப்புக்கள் என மக்களை உறுதிப்படுத்துமாறு கேட்கிறார்கள். பெரும்பாலான கேப்பாபுலவு பகுதி காணிகள், அரச உத்தரவாதம் பெற்றவையே தவிர, உறுதிகள் இல்லாதவை. இவ்வாறான சிறிய சட்டச் சிக்கல்களைக் கூட மக்கள் சார்பில் பேசுவதற்கும், மக்களின் போராட்டத்தை விரிவாக்குவதற்கும் வாக்குப் பொறுக்கிகள் தயாரில்லை.

நினைவு நாட்களையும், ஐ.நா பயணத்தையும் மட்டும் நடத்தினாலேயே போதிய அளவு பணம் திரட்டிக்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துவைத்துள புலம்பெயர் அமைப்புக்கள் கேப்பாப் புலவு மக்களின் நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை.