திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படை முகாம்! மூச்சுவிடாத தேசியங்கள்!! : வியாசன்

US_Navyதெற்காசியாவின் தெற்கு மூலையின் சந்தியாகக் கருதப்படும் இலங்கை மீண்டும் உலக ஏகாதிபத்தியங்களின் ஆடுகளமாக மாறி வருகிறது. ஆசியா பிவோட் ஆசிய நாடுகளை இராணுவமயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் புதிய திட்டம். இதற்கான ஈர்ப்பு மையமாக இலங்கை மாறி வருகின்றது. அமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு |America’s Pacific Century| என்ற கோட்பாட்டை முன்வைத்து ஆசிய நாடுகளை இராணுவமயப்படுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் புதிய வெளி நாட்டுக் கொள்கையாக முமொழிந்த ஹில்லாரி கிளிங்டன் இன்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆக, எதிர்வரும் அரசியல் நாள் காட்டியில் அமெரிக்காவின் அரச பயங்கரவாத்திற்கு இலங்கையும், அங்கு வாழும் உழைக்கும் மக்களும், தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும் பலியாவதற்கான உச்சபட்ச சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்காவின் மிகப்பெரும் கடற்படைக் கப்பல் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் நோக்கத்தை முன்வைத்து அந்த நாட்டில் நங்கூரமிட்ட சம்பவம் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி நடைபெற்றது. ஏழாவது கடற்படையின் தளபதி தமது வருகை தொடர்பாகக் கூறுகையில் ‘ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் சமாதானத்தை நிறுவும் நோக்கத்தில் இலங்கை உடனான இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளை இறுக்கப்படுத்திக்கொள்கிறோம் என்றார்’.

புலம்பெயர் நாடுகளில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இலங்கை இராணுவத்தைத் தண்டிப்பதே தமது ஒரே நோக்கம் என மேடை மேடையாக தமிழர்களின் தலைமைகள் முழங்கிக்கொண்டிருக்கும் போது இலங்கையில் இராணுவத்திற்கு அமெரிக்கா வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேசத்திடம் முறையிடப் போவதாக அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தார். அமெரிக்காவின் முன்னை நாள் துணை ராஜாங்கச் செயலாளர் ரிச்சாட் ஆர்மிதேஜ் இன் வழி நடத்தலில் இயங்கும் பேர்ள் என்ற தமிழ் அமைப்பும் அவுஸ்திரேலியாவிலிருந்து நிமலன் கார்த்திகேயனும் விக்னெஸ்வரனைக் கையாண்டுகொண்டிருக்க அமெரிக்கா எதிர்ப்பின்றி தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. அடுத்த ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்திற்குச் சென்று அமெரிக்காவிடம் பதினாறாவது தடவையாக முறையிடுவதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தனர்.

மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாகத் தலையிட்ட அமெரிக்கா இன்று அந்தப்பிரதேசம் முழுவதையுமே யுத்த களமாக மாற்றியுள்ளது. இலங்கை யுத்த களமாக மாறுவதற்கும் அமெரிக்க ஆயுதங்களின் நச்சுக் காற்றின் ஊற்று மூலமாக உருவெடுப்பதற்கும் இன்னும் அதிக நாட்கள் இல்லை.

உலகில் எங்கு அமெரிக்கா தலையிட்டாலும் அங்கு எதிர்ப்புகளும் எழுச்சிகளும் ஏற்படுவது வழமை. உலகின் கொல்லைப்புறங்களில் முகவரி தெரியாமலிருந்த நாடுகள் கூட அமெரிக்க இராணுவத்தை ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அணு ஆயுதங்களைப் பயன்படுத்திக்கூட வியற்னாம் யுத்தத்தை அமெரிக்காவால் வெற்றிகொள்ள முடியவில்லை. லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா எபோதுமே தனது இராணுவ வெறியைச் செயற்படுத்த முடியவில்லை.

உலகின் பல நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்திருக்கிறது. அங்கெல்லாம் எதாவது ஒரு மூலையில் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு ஆரம்பித்து அது மக்கள் எழுச்சியாக மாற்றமடையும். வியட்னாம், நிக்கரகுவா போன்ற குட்டி நாடுகள் கூட அமெரிக்க ஆக்கிரமிப்பை அடியோடு தகர்த்திருக்கின்றன. அணு ஆயுதங்களை எதிர்கொண்ட வியட்னாமிய மக்களின் போராட்டம் அமெரிக்க இராணுவப் பயங்கரவாதிகளை நாட்டைவிட்டு துரத்தியது. ஆர்மிதேஜ் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்களை எதிர்கொண்ட அமெரிக்க அரச பயங்கரவாதத்திடம் வெற்றிபெற்றது நிக்கரகுவா மக்களின் போராட்டம்.

தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள் போன்றவற்றை அரணாகப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க அரசு மக்களைச் சாரி சாரியாகக் கொன்று குவிக்கத் துணை சென்றது. அதே அமெரிக்க அரசைப் பயன்படுத்தி போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாக தமிழர்களின் தலைமைகள் இன்னும் நாடகமாடிக்கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமான தமிழ்த் தலைமைகள் இன்னொரு பெரும் அழிவிற்கான அத்தனை வழிகளையும் திறந்துவிடுகின்றனர். அமெரிக்க இராணுவம் தங்கியிருந்த அத்தனை நாடுகளிலும் படுகொலைகளும், இரத்தக் களரியும் வழமையான நிகழ்வு. தவிர பாலியல் தொழிலாளிகளைத் தோற்றுவிப்பது போன்ற அதி உச்ச சமூகச் சீரழிவுகளுகு அமெரிக்க இராணுவம் காரணமாக இருந்திருக்கின்றது. பாலியல் தொழில் நாட்டின் வருமானத்தின் ஒரு பகுதியாக மாறுமளவிற்கு தாய்லாந்தை மாற்றியமைத்த ‘பெருமை’ அமெரிக்காவையே சாரும்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகும் வாய்புள்ள ஹில்லாரி கிளிங்டன், மத்திய கிழக்கிற்கு அடுத்ததாக ஆசியாவை மையப்படுத்தி அமெரிகாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்க வேண்டும் எனத் தனது புதிய வெளியுறவுக் கொள்கையை முன்வைக்கிறார். ஆசிய பிவோட் என்ற அமெரிக்காவின் ஆசியாவை இராணுவ மயப்படுத்தும் கோட்பாட்டின் மூல கர்த்தாக்களுள் ஒருவர். மத்திய கிழக்கைச் சுற்றியே தமது செயற்பாடுகள் அமைந்திருந்தாகவும் அது ஆசியாவை நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்றும் கூறும் ஹில்லாரியின் வெளியுறவுக் கொள்கை இலங்கையில் நடைமுறைப்ப்படுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்கால் அழிவிலும் அதிகமான சேதங்களை ஏற்படுத்தவல்ல அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியம் பேசும் வாக்குப் பொறுக்கிகளும் கண்டுகொள்வதில்லை.

சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்படுவதற்கான பேச்சுக்கள் இலங்கை அரசுடன் நடத்தப்படுகின்றன எனக் கூறியமைக்கு இலங்கை அரசியல்வாதிகள் எந்தப் பதிலும் கூறாமல் மௌனித்துப் போயிருந்தனர். தமிழ் அரசியல் வாதிகள் தமது தேசத்தின் கொல்லைப்புறத்தில் ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிடப் போகிறது என்றும் மிகப்பெரும் அழிவுகள் ஆரம்பமாகப் போகிறது என்றும் குரல்கொடுக்கவில்லை. மக்களின் இரத்தம் குடிக்கும் காட்டேரிகளைப் போல மூச்சுவிடாமல் கோளைத்தனமாக தமது கூடுகளுக்குள் பதுங்கிவிட்டனர். இவர்களுக்கு உலக அரசியல் தெரியாமலிருப்பது வியப்பிற்குரியதல்ல. தமது சொந்த நிலத்தின் எல்லையில் அன்னிய உலகையே அழிக்கும் அன்னிய இராணுவம் குடியேறுவதற்கான அரசியல் வெளியை ஏற்படுத்திக்கொடுக்கும் வரலாற்றுத் துரோகத்தைக் கண்டு எதிர்கால சந்ததியாவது இவர்களைத் தண்டிக்கும். தங்களுக்கு என்று கட்சிகளும் அவற்றின் இடைச் செருகல்களில் தேசியம் என்ற வார்த்தையும் நுளைக்கப்பட்டால் வாக்குப் பொறுக்கிப் பாராளுமன்றம் செல்லப் போதுமானது என எண்ணும் இவர்கள் எந்தக் கூச்சமுனின்றி பிணங்களை வைத்து வியாபாரம் நடத்தும் பிரகிருதிகள்.

அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இலங்கை சென்ற போது அங்கு உரையாற்றிய அமெரிக்கத் தூதுவர் இலங்கை ‘சர்வதேசத்தின்’ எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். சர்வதேசம் என்று தமிழ்த் தலைமைகளும் அவர்களும் அழைத்துக்கொள்வது உலகின் அதிகார மையங்களை ஆள்பவர்களையே தவிர மக்களை அல்ல. இலங்கையில் யாப்பு மாற்றத்தை ஏற்படுத்தப்படுகிறது என்றும் நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்றும் அவர் அங்கு உரையாற்றிய கையோடு யாழ்ப்பாணம் ஜெட் லிங் நட்சத்திர விடுதியில் வடக்கின் ‘தேசியவாதிகளை’ அழைத்து விருந்து வைத்தார். அழைப்புக் கிடைததுமே அனைத்து அரசியல் வாதிகளும் விழுந்தடித்துக்கொண்டு அமெரிக்கத் தூதுவரின் தரிசனம் பெறச் சென்றுவிட்டனர்.

அமெரிக்காவும் அதன் துணை நாடுகளும் ஏற்படுத்திய அழிவிற்கு எதிராகவும் இனிமேல் நம்மீது திணிக்கப்படும் அழிவிற்கு எதிராகவும் எந்தத் தமிழ் அரசியல்வாதிகளும் துரும்பைக்கூட அசைத்ததில்லை. கருதளவிலாவது மக்களை அணுக அவர்கள் தயாரில்லை.

மேற்கில் மூன்றாவது உலகப் போருக்காகத் திட்டமிடும் அமெரிக்காவும் அதன் துணை அதிகார மையங்களும் தெற்காசியாவில் இலங்கையை இராணுவ மயப்படுத்துவது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கும் தேசிய அரசியலுக்கும் நிரந்தர அழிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தரகு அரசிற்கு எதிராகவும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் அரசியல் மட்டுமே மக்கள் சார்ந்ததாக அமையும்.