உதய சூரியன் சின்னமும் பணமும் கொள்கைக்கு அப்பாற்பட்டது!

ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி ஆகிய வாக்குக் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் கூட்டு முறிவடைந்தமைக்குக் கொள்கை அளவிலான காரணங்கள் கிடையாது என ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் செயற்படும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்ற கட்சியும் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் பொதுவான தேர்தல் சின்னமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியனை ஏற்றுக்கொள்வது தொடர்பான முரண்பாடே கூட்டு முறிவடைந்தமைக்கான காரணம் என்று கூறும் பிரமச்சந்திரன்த ற்காலிகமாக அச்சின்னத்தை ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களை நிராகரிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் ஆட்சி செலுத்திய காலத்தில் இந்திய அரசின் நேரடி முகவராக இலங்கையில் செயற்பட்டவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி. தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டாகவே ஆரம்பிக்கப்பட்டது. இக் கூட்டணியை நிராகரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவரும் மகிந்த ராஜபக்ச மீன்பிடித்துறை அமைச்சராக பதவி வகித்த போது அந்த அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் உம் இணைந்துகொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமர் குழுவினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பின்னதாக உருவாக்கினர்.

தமிழீழ விடுதலப் புலிகளின் காலத்தில் இந்திய அரசினதும், இலங்கை அரசினதும் பாதுகாப்பிலிருந்த ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி  பெருந்தொகைப் பணத்தை வங்கியில் வைப்பிட்டிருக்கும் கட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும் உதய சூரியன் சின்னமும், வைப்பிலிருக்கும் பணமும் கொள்கைரீதியான பிரச்சனைகளுக்கு அப்பால் பட்டது என்பது வாக்கு வங்கி அரசியலில் இயல்பானதே.