சுய நிர்ணைய உரிமைக்கு எதிராகச் செயற்படும் கூட்டமைப்பும் புலம்பெயர் அமைப்புக்களும்

sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தாம் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் அடிப்படையிலேயே அவர் அக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதன் மறுபக்கத்தில் தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையான சுய நிர்ணைய உரிமையையும் சம்பந்தன் சார்ந்த கட்சி ஏற்கனவே நிராகரித்துள்ளது.

சுய நிர்ணைய உரிமை என்பது ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்வதற்கான உரினையாகும். அந்த உரிமை வழங்கப்பட்டால் ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக்கொள்ளலாம். இல்லையெனில் இணைந்து வாழ விடும்பினால் கூட்டாட்சி அமைத்துக்கொள்ளலாம். சுய நிர்ணைய உரிமை மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1945 ஆம் ஆண்டில் 2ம் உலகப் போரின் பின்னர் அங்கீகரித்துள்ளது. அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவது ஜனநாயகமாகவும் பிரிந்து செல்வது மட்டும் தான் ஒரே தீர்வு என்பது பிரிவினைவாதமாகவும் கருதப்படுகின்றது.

தமிழீழம் ஒன்றே தீர்வு என்பது பிரிவினை வாதம். அதனை விடுத்து பிரிந்து செல்லும் உரிமையைக் கோருவது ஜனநாயகம்.

இன்றைய அரசியல் சூழலில் பிரிந்து செல்லும் உரிமைக்கான கோரிக்கை இலங்கையில் எந்தக் கட்சியினாலும் அல்லது அரசியல் அமைப்பினாலும் முன்வைக்கப்படவில்லை. அக் கோரிக்கையைப் பிரிவினைவாதமாக மாற்றும் முயற்சியில் ஏகாதிபத்தியச் சார்பு புலம்பெயர் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. புலம்பெயர் குழுக்கள் தமிழீழம் ஒன்றே முடிந்த முடிபை முன்வைத்து தமிழர்களைப் பிரிவினை வாதிகளாகக் காட்ட முயல்வது சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிக்கும் முயற்சியாகும்.