அரசு சட்டவிரோதமாகத் தடுத்துவைத்துள்ள அரசியல் கைதிகள் பேரினவாதத்தின் பலிகடாக்கள்

tamilinmaesகொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது. இக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் வெறும் சந்தேகத்தின் பேரிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல கைதிகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கே முரணான வகையில் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் சந்தேகத்தின் பேரில் ஒருவரை 18 மாதங்கள் வரை விசாரணையின்றிச் சிறைவைக்க அனுமதிக்கிறது. சில அரசியல் கைதிகள் 1997 ஆம் ஆண்டிலிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரி – ரனில் அமெரிக்க அடியாள் அரசு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நடத்தும் நாடகத்திலும் இச் சட்டவிரோத நடவடிக்கை தொடர்கின்றது.

ஐக்கிய நாடுகளில் சபையிலிருந்கு உலகம் முழுமைக்கும் புதிதாக மனிதாபிமானம் கற்பிக்கும் அரசு தனது முதல் நாள் ஆட்சியிலிருந்து இச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சட்டத்தரணிகள் குழாம் ஒன்றையே பாராளுமன்றத்திற்கும் மாகாண சபை ஆட்சிக்கும் அனுப்பி வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்கிறது.

இந்த நிலையில் தம்மை விடுவிக்கக் கோரி சாகும் வரைக்கும் உண்ணா நிலைப் போராட்டத்தைக் கைதிகள் கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகின்றனர். இந்த நிலையிலும் இலங்கை அரசு மூச்சுவிடக்கூட முயலவில்லை.

சில அரசியல் கைதிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைச் சிறைச்சாலைகள் சித்திரவதைகளுக்கு மட்டுமல்ல, சாரி சாரியான மனிதப் படுகொலைகளுக்கும் பேர் போனவை.

இதுவரைகாலமும் மௌனமாகவிருந்த பிழைப்புவாதக் கட்சிகள் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்த முற்படுகின்றனர்.

சந்தேகத்தின் பெயரில் குற்றங்கள் சுமத்தப்படாமல் சிறைவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை சிங்களப் பேரினவாத ஊடகங்கள் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் சட்டவிரோதமாகச் சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு அரசுக்கு எதிரான அபிப்பிராயத்தை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை.

சிங்கள மக்களுக்கு உண்மை அறியும் உரிமையை மறுப்பதே பேரினவாத அரசியலின் இருப்பிற்குக் காரணம். அந்த உரிமையை மறுப்பதன் ஊடாகவே தமிழ் இனவாத அரசியலும் சாத்தியமாகிறது. இரண்டும் இணைந்து அழிவுகளையே ஏற்படுத்துகிறது. அரசியல் கைதிகளும் இவை இரண்டிற்கும் பலியானவர்களே. சுயநிர்ணைய உரிமையை மறுக்கும் பேரினவாத அரசியலும் அதற்கான போராட்டத்தை அழித்த இனவாத அரசியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.