Tag Archives: மாவோயிஸ்டுக்கள்

ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்கள் : வரவர ராவ்

வரவார ராவ்(Varavara Rao) ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) (மாவோயிஸ்டுக்கள்) இன் ஆதரவாளரகவும் பல தடவைகள் அவர்களின் வெளிப்படையான குரலாகவும்  செயற்படுபவர். இலக்கிய விமர்சகர், கவிஞர், அரசியல் பேச்சாளர் என்ற பல்வேறு தளங்களில் செயற்படும் வரவர ராவ் தெலுங்கு இலக்கிய விமர்சகர்களுள் முதன்மையானவர். புரட்சிகர இயக்கங்களோடு கடந்த நாற்பது வருடங்களாகச் செயற்பட்டு வருகிறார். பரந்துபட்ட மக்கள் ஆதரவைப் பெற்றவர்.

பேராசிரியராகவும், அதிபராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றிய வரவர ராவ் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக தனது வாழ் நாளின் பாதிக் காலத்தைச் சிறையில் வாழ்ந்து முடித்தவர்.

மார்க்சிய அறிவியலில் ஆழமான பார்வையைக் கொண்ட வரவர ராவ், இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.

ஈழத்தில் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. வன்னிப் படுகொலைகள் குறுகிய நிலப்பரப்பினுள் ஒரு லட்சம் மனித உயிர்களை நவீன அழிவு ஆயுதங்களைக் கொண்டு கொடிய பேரினவாத அரசு அழித்துப் போட்ட அந்தக் கோர நிகழ்வை மனித குலம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. அதே வேளை இன்று உலகத்தில் காணப்படும் போராட்ட அமைப்புக்களில் ஒழுங்கமைக்கப்பட்டதும் பலம்பொருந்தியதுமாகக் கருதப்படும் இந்திய மாவோயிஸ்டுக்கள் தமது கொல்லைப்புறத்தில் நடைபெற்ற இந்த அழிவிற்கு காத்திரமான எதிர்ப்பை வெளிக்காட்டவில்லையே ஏன்?

இன அழிப்பிற்கு எதிராக மாவோயிஸ்டுக்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாவோயிஸ்டுக்களைப் பொறுத்தவரை இந்திய விஸ்தரிப்பு வாத அரசானது அயல் நாடுகளில் தலையிட்டு அழிவுகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றது என்பதை ஆரம்பத்திலிருந்தே கூறிவந்திருக்கிறார்கள். இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கையை ஆக்கிரமித்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசு, வன்னியில் நட்த்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னணியிலும் செயற்பட்டிருக்கிறது.

மாவோயிஸ்டுக்கள் இந்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.மாவோயிஸ்டுக்கள் இந்தியாவில் தடைசெய்யபட்ட தலைமறைவு இயக்கம். இந்த வகையில் இலங்கை இந்திய அரசுகள் வன்னியில் நடத்திய இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திலும் மாவோயிஸ்டுக்கள் தமது ஆதரவு அமைப்புக்கள் ஊடாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டங்கள் அவர்களுக்க்க் கிடைத்த தகவல்கள், தொடர்புகள், பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றினுள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதே உண்மை.

இன்று மக்களின் உடனடி எதிரி உலகமயமான நிலையைக் காண்கிறோம். ஏகாதிபத்தியங்களை அதன் முகவர்களுக்கு ஊடாக அன்றி நேரடியாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆக, உலகின் புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்களுடனான ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் அவசியமானதாகக் கருதவில்லையா?

நிச்சயமாக. மாவோயிஸ்டுக்கள் இதை நன்கு உணர்ந்துள்ளார்கள். பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் அதிகாரமும் உலகை ஆக்கிரமிக்கும் பொதுவான பிரச்சனைகளை ஒடுக்கப்படும் மக்கள் முகம் கொள்கிறார்கள். இவற்றிற்கு எதிரான உலகம் தழுவிய ஒருங்கிணைவு என்பது அவசியமானது.

புலிகளின் அழிவிற்குப் பின்னான சூழலை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

அங்கு ஒரு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள். இந்திய அரசிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாக அது முன்னெழும். தனி ஈழ அரசு அமைப்பதற்கான போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவேண்டும்.

ஏனைய புரட்சிகர இயக்கங்களின் ஆதரவோடும் புரிந்துணர்வோடும் ஒத்துழைப்போடும் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் இந்தியாவினதும் உலக நாடுகளதும் ஒத்துழைப்புடனேயே நடைபெற்றது. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமே. அந்த வகையில் ஈழப் போராட்டம் முற்போக்கானது. போராட்டம் விட்டுக்கொடுப்பின்றி பேரினவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய இன ஒடுக்குமுறை கூர்மையடைந்துள்ள ஒரு நாட்டில் சுய நிர்ணய உரிமைக்கான போராத்தில் மக்கள் இணைந்து கொள்வார்கள்.

இந்திய மற்றும் சர்வதேச பல்தேசிய நிறுவனங்கள் பேரினவாதத்தின் துணையோடு தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொள்ளையடிக்கின்றது. ஆக, இதற்கு எதிரான மக்களின் போராட்டம் உறுதியான அரசியல் தலைமையின் வழி நடத்தலில் எழுச்சிபெறும்.

சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்துபோகும் உரிமை என்பது பிரிவினைக்கான முழக்கம் என்றும் இதனால் பிரிந்து செல்லாத அல்லது பிரிந்துசெல்வதை நிராகரிக்கும் சுய நிர்ணைய உரிமை என்பதே எமது சூழலுக்கு சரியானது என புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி உட்பட இலங்கையின் இடது சாரிக் கட்சிகள் கூறுகின்றன.இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நீண்ட நாளைய நிலைப்பாடு இவ்வாறு தான் இருந்தது இது குறித்து உங்கள் கருத்து என்ன?

அது அவர்களின் கருத்தாக இருக்கலாம்.கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை சுய நிர்ணய உரிமை என்பதே பிரிந்து செல்லும் உரிமைதான். ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது அது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை நடத்துவது விடுதலைக்கான முன் நிபந்தனையாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் அதனைத் தலைமையேற்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தனியரசை அமைத்துக்கொள்வதற்கான போராட்டதை முன்னெடுக்கும் போதே அது ஒடுக்கும் தேசிய இனங்களுடானான இணைவைக் கூட ஏற்படுத்தும். வியட்னாம் இதற்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படலாம்.

ஆக, ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்களா?

ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டம் என்ற வகையில் மாவோயிஸ்டுக்கள் தமது ஆதரவை எப்போதும் வழங்கியிருக்கிறார்கள். இன்றும் பேரினவாத ராஜப்கச அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் என்ற வகையில் ஈழப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருந்ததால் தான் உலக நாடுகள் முழுவதும் இணைந்து அந்தப் போராட்டதை அழித்தன.

கடந்த காலத்தில் அதன் இயல்பு எவ்வாறு அமைந்திருந்தது என்ற விமர்சனங்களுக்கு அப்பால் எதிர்காலத்தில் அது எழுச்சி பெறுமானால் மாவோயிஸ்டுக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதற்குக் கிடைக்குமா?

நீங்கள் முன்னமே குறிப்பிட்டதுபோன்றே இன்று பொது எதிரிக்கு எதிரான உலகம் தழுவிய பொதுத்தளத்தில் புரட்சிகர இயக்கங்கள் பொதுவான வேலைத்திட்ட அடிப்படையில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது இன்றைய தேவையாகும். அந்தவகையில் அனைவரும் செயற்பாட்டுத் தளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் குறித்து?

தமிழீழ விடுதலைப் புலிகளை எமது விமர்சனங்களுக்கு அப்பால் ஏகாதிபத்திய எதிர்பு இயக்கங்கமாகவே பார்க்கின்றோம். அதன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் காரணமாகவே உலக நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழ விடுத்லைப் புலிகளை அழித்தன.

ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

முன்னையவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தை பரந்துபட்ட தளத்தில் முன்னெடுக்க வேண்டும்.

தொடரும்…