Tag Archives: பொருளாதாரம்

மைக்ரோ சொப்ட், சிஸ்கோ, இன்டல்: ஸ்னோடெனின் புதிய தகவல்கள்

NSA-Partnersஉலகத்தை ஆட்சி செய்யும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களை உளவுபார்க்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு மக்களை உளவுபார்த்து அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கும் நிறுவனங்களில் AT&T, Verizon, Microsoft, Cisco, IBM, Oracle, Intel, Qualcomm, Qwest and EDS போன்ற பல்தேசிய வியாபார நிறுவனங்களும் அடங்கும் என எட்வார்ட் சினோடென் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் அரசுகளின் முழுமையான ஆதரவோடும் பங்களிப்போடும் உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இந்த நிறுவனங்கள் தமது நாட்டு மக்களையே உளவு பார்க்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான நிறுவனங்களுக்காகப் உலகம் முழுவதும் போரைக் கட்டவிழ்த்துவிட்டு கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவிக்கும் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள் அதே நிறுவனங்களுடன் இணைந்து தமது சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்க்கின்றன.

உலகின் ஏகபோக முதலாளித்துவ நாடுகள் தம்மைச் சுற்றி இரும்புத் திரை ஒன்றை எழுப்பியுள்ளன. சாமான்ய மனிதன் அறிந்துகொள்ளத்தக்க நாளாந்த தகவல்களைக் கூட தமது இரும்புத்திரைக்குள் பூட்டிவைத்து சர்வாதிகாரச் சிறை ஒன்றை அவை எழுப்பியுள்ளன. இந்தத் திறந்தவெளிச் சிறைக்குள் தமது அடிப்படை உரிமைக்காகப் குரல்கொடுக்கும் அனைவரையும் உளவுபார்த்துக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை இந்த அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.

மிகவும் பலம் மிக்க பல்தேசிய வியாபார நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், இராணுவம், அதிகாரஅமைப்பு போன்ற அனைத்தும் இணைந்த ஆளும் அரசுகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் போராட முனையும் அனைவரைம் முளையிலேயே அழிக்கும் கண்காணிப்புப் பொறிமுறை ஒவ்வொரு மனிதனையும் திறந்தவெளிச் சிறைக்குள் பூட்டிவைத்திருக்கிறது.

போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் கூட்டம் ஐரோப்பாவில் உருவாகி வருகின்றது. அரசுகளைப் பொறுத்தவரை அவர்களை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் வந்தடைந்துள்ளன.

இவை அனைத்தையும் உடைத்துக்கொண்டு மக்கள் போராடத் தலைப்படுகிறார்கள். தம்மை ஆளும் முதலாளித்துவ அரசுகள் தமக்கானவை அல்ல, மில்லியன்களைக் கொள்ளையிடும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கானவை என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.’ஒளிந்து கொள்வதற்கு இடமில்லை’ என்ற தலைப்பில் கிளென் கிரீன்வால்ட் எழுதிய நூலில் ஸ்னோடென் வெளியிட்ட இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எங்களை மீண்டும் கியூபாவிற்கு அனுப்பிவையுங்கள்

கியுபா நாட்டின் அரசியலை ஏற்றுக்கொள்ளாத நூற்றுக்கணக்கானவர்களை 2011 ஆம் ஆண்டு ஸ்பானியஅரசு வரவேற்றது. கத்தோலிக்க திருச்சபை, கியுபா அரசு மற்றும் ஸ்பானிய அரசுகளிடையேயான உடன்பாட்டின் அடிப்ப

டையில் இவர்கள் ஸ்பானியாவிற்கு அழைத்துவரப்பட்டார்கள். அவர்களுக்கு ஸ்பானிய அரசு வேலையற்றோருக்கான உதவித்தொகையையும் வழங்குவதாக உறுதியளித்தது. பல ஆயிரக்கணக்கில் கியூபாவிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் சில நூற்றுக்கணக்கானவர்களே வெளியேறினர். இந்த வெளியேற்றம் கியூபாவிற்கு எதிரான பிரச்சாரமாக பல்தேசிய வியாபார ஊடகங்களில் வெளியாகியது. இவ்வாறு வெளியேறி ஸ்பா

னியாவில் குடியேறிய குடும்பங்களில் ஒன்று கில்பேர்டோ மார்டினேஸ் எனபவரது குடும்பமும் ஒன்றாகும். ஐரோப்பியப் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட இவர்களது குடும்பம், வாழ்வதற்கு வழியின்றி, வேலையற்று செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களின் உதவியுடன் வாழ்ந்து வந்தது.

 

evictions-of-cubansகியுபாவையும் அதன் அரசியல் பொருளாதாரத்தையும் ஏற்றுக்கொள்ளாத மார்டினேஸ் குடும்பம் வாழ்ந்து வந்த வீட்டை நோக்கி மே மாதம் 7ம் திகதி ஸ்பானியப் பொலிஸ்படை சென்றது. அவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு வாடகை வழங்காத குற்றத்திற்காக அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு நடுத்தெருவில் தள்ளப்பட்டார்கள். பணம்படைத்த வீட்டின் உரிமையாளருக்காக கனவுகளோடு ஸ்பெயினிற்கு வந்த கியூபக் குடும்பம் தெருவில் தள்ளப்பட்டது.
நகரங்களில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆயிரக்கணக்கானவர்களைக் காண்பது ஸ்பானியாவில் வழமையாகிவிட்டது.

இப்போது கியுப அரசியலையும் ஜனநாயகத்தையும் புரிந்து கொள்வதாக கில்பேர்டோ மார்டினேஸ் கூறுகிறார். இதுதான் ஸ்பானியா என கியூபாவிலிருக்கும் போது தெரிந்திருந்தால் தான் அங்கிருந்து வெளியேறியிருக்க மாட்டேன் என்கிறார். ‘இப்போது நான் கேட்பதெல்லாம் எமது குடும்பத்தை மீண்டும் கியூபாவிற்கு அனுப்பிவையுங்கள் என்பதே’ என மார்டினேஸ் உருக்கமாகக் கூறுகிறார்.

கியூபாவில் உலகின் மிகச்சிறந்த மருத்துவ வசதி, கல்வி வசதி உட்பட மற்றும் அ

னைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

நி.நே

 

மார்க்சியம் தேவை தானா? : இராமியா

karl-marxசோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் வீழ்ந்து விட்டன. சீனா சோஷலிசப் பாதையில் இருந்து மெதுவாக விலகத் தொடங்கி, இப்பொழுது முழுவதுமாக முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பி விட்டது. சோஷலிசப் பாதையை மறுத்து முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பிய பின், பொருளாதார வளர்ச்சியில் சீனா மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறது.

சோஷலிசப் பாதையைத் தக்க வைத்துக் கொள்ள, கியூபா, வடகொரியா, வியட்னாம் போன்ற நாடுகள் போராடிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் மார்க்சியம் தேவை தானா என்று முதலாளித்துவ அறிஞர்கள் வினாவை எழுப்புகின்றனர். அது மட்டுமல்லாமல் இனி மார்க்சியம் வெற்றி பெறாது என்றும், மார்க்சியத்தை நம்புசிறவர்கள் கானல் நீரை நம்புவதைப் போல் ஏமாற்றம் அடைவார்கள் என்றும் ஆருடம் கூறுகிறார்கள்.

இவர்கள் கூறுவது சரி தானா? சோவியத் ஒன்றியம் உலகிலேயே வலிமையான நாடாக அன்று இருந்தது. சோவியத் குடிமக்கள் என்றாலே மற்ற நாடுகளின் மக்கள் ஒருவித மரியாதையுடன் தான் நோக்கினார்கள். தன் தேவையை நிறைவு செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு உயர்தொழில் நுட்பங்களை அளிக்கவும் செய்தது.

இந்தியாவில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய பின் இரும்புத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்த பொழுது, அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகள் இரும்புத் தொழில் நுட்பத்தை, பணம் பெற்றுக் கொண்டு அளிப்பதற்கும் மறுத்தன. ஆனால் சோவியத் ஒன்றியம் அதே தொழில் நுட்பத்தை இலவசமாக அளித்து, இந்தியாவில் இரும்புத் தொழிற் சாலைகள் அமைய உதவியது.

இப்பொழுது சோவியத் ஒன்றியம் சிதைந்து, அதன் உறுப்பு நாடுகள் முதலாளித்துவப் பாதைக்குத் தள்ளப்பட்ட பின் ஏறபட்டுள்ள நிலை என்ன?

வேலை உத்தரவாதம் செய்யப்பட்ட அந்நாடுகளின் மக்கள், இப்பொழுது வேலை தேடி உலகெங்கும் அலைந்து கொண்டு இருக்கின்றனர். சோவியத் ஒன்றியத்தில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு இருந்த முதியவர்கள் தங்கள் தேவைகளுக்குச் செலவு செய்தது போக மீதம் இருந்த பணத்தில் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்து இருந்தனர்.

ஆனால் இன்று அவர்களுடைய ஓய்வூதியம் அவர்களுடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் போதவில்லை. ஓய்வூதியக்காரர்களை விட்டு விடுங்கள்; பணியில் இருப்பவர்களுக்கே அவர்களுடைய ஊதியம் போதாமல் தவிக்க வேண்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் முன்னணி நாடாகவும், மற்ற நாடுகளுக்கு உதவி புரியும் உயர்ந்த நிலையிலும் இருந்த நாடு, இன்று மூலப் பொருட்களை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டிய கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளின் நிலைமை இவ்வாறு என்றால், முதலாளித்துவ அறிஞர்களால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் பெற்றுள்ளது என்று புகழப்படும் சீனாவின் நிலைமை என்ன? முன்பெல்லாம் சீனாவின் அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டன. ஆனால் இன்று சீன நாட்டில் முதலீடு செய்பவர்களின் வசதியை முன்னிட்டு, மாண்டரின் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத 50%க்கும் அதிகமான சீன மக்கள் அம்மொழியைப் பயில வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள்.

அன்று உழைக்கும் மக்கள பெற்ற ஊதியம் அவர்களுடைய தேவையை நிறைவு செய்யப் போதுமானதாய் இருந்தது. இன்று அது போதவில்லை; அது மட்டுமல்ல, ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்பவர்கள் முதலாளிகளின் அடியாட்களால் தாக்கப்படுகிறார்கள்; சில சமயங்களில் கொலையும் செய்யப்படுகிறார்கள். அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களின் தாய் / தந்தை / மகன் / மகள் / மனைவி / கணவன் யாராவது கவல் துறையில் புகார் செய்தால் அவர்களும் தாக்கப்படுகிறார்கள். பணம் கிடைக்கும் என்பதற்காகவும், இலாபம் சம்பாதிக்கம் வழி என்பதற்காகவும் விதிகளை மீறுவது சீனாவில் பெருகி வருகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், மக்கள் செல்வர்களாக இருக்க முடிகிறது என்றும், சோஷலிச உற்பத்தி முறை மக்களை வறுமையில் வாட்டுகிறது என்றும் கூறி -இவற்றுக்கு – அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையும், கியூபா, வடகொரியா, வியட்னாம் நாடுகளையும் எடுத்துக் காட்டாகக் காட்டுகின்றனர். ஆனால் சோஷலிச நாடுகளில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்று சதித் திட்டம் போடுவதை மறைக்கின்றனர். இதைப் புரட்சி வீரர் ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு முறை எளிமையாக விளக்கினார். யாராவது கியூபாவில் ஒரு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று எண்ணினால், அவர்களுக்கு மிரட்டல் வரும் என்றும் அவ்வெண்ணத்தை அவர் கைவிடும் வரையில் அம்மிரட்டல் தொடரும் என்றும் இத்தகைய சூழலில் தான் சோஷலிச நாடுகள் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகின்றன என்றும் அவர் கூறினார்.

ஆனால் அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும், 2005ஆம் ஆண்டில் கத்ரினா சூறாவளியின் பொழுது, கியூபா தங்கள் நாட்டு மக்களில் ஒருவரைக் கூட உயிரிழக்காமல் பாதுகாத்தது மட்டுமல்ல; ஒரு வளர்ப்புப் பிராணி கூட உயிரிழக்காமல் கியூபா பாதுகாத்தது. ஆனால் செல்வச் செழிப்பு மிகுந்த, அனைத்து அறிவியல் தொழில் நுட்ப வசதிகளையும் தன் வசம் கொண்ட அமெரிக்காவோ, அதே சூறாவளிக்கு ஆயிரக்கணக்கில் தன் மக்களைக் காவு கொடுத்தது.

இவையெல்லாம் மக்கள் நலனுக்கு, சோஷலிச முறை தான் ஏற்றது என்றும், முதலாளித்துவ முறை மக்களின் நல்வாழவிற்கு ஏற்றதல்ல என்றும் தெளிவாகக் காட்டும் எடுத்துக்காட்டுகள்.

இப்படி எல்லாம் எடுத்துக் காட்டுகளுடன் பேசும் பொழுது, சில முதலாளித்துவ அறிவு ஜீவிகள், கருத்தியல் ரீதியில் பேச வேண்டும் என்று கூறுகின்றனர். மார்க்சும் லெனினும், தங்கள் மூலதனம் (Capital), ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம் (Imperialism – Moribund Capitalism) ஆகிய நூல்களில் கருத்தியல் ரீதியில் தெளிவாக விளக்கி இருப்பதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். இன்றைய கணினி, மற்றும் மின்னணு யுகத்தைப் பற்றிமார்க்சும் லெனினும் அறிய மாட்டார்கள் என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறை, அதாவது இலாபம் தரும் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வது என்ற அடிப்படை மாறாத வரையில் மார்க்சின், லெனினின் பகுப்பாய்வுகள் இன்றும் பொருந்தும் என்பதை வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கின்றனர்.

ஆனால் உண்மை நிலை மார்க்சியத்தின் தேவையை இன்னும் வலுவாக வலியுறுத்திக் கொண்டுள்ளது. மார்க்சின் காலத்திலும், லெனினின் காலத்திலும் – ஏன் – மாவோவின் காலத்திலும் தெரியாத, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் கேடும், புவி வெப்ப உயர்வும், இவ்வுலகம் உய்வதற்கு மார்க்சியத்தைத் தவிர வேறு தீர்வே இல்லை என்று கடைக்கோடி அறிவிலிகளும் புரிந்து கொள்ளும் விதத்தில் உரக்கக் கூவிக் கொண்டு இருக்கின்றன.

பொருள் உற்பத்தியின் போது பக்க விளைவாக திட, திரவ, வாயு மாசுக்கள் உமிழப்படுகின்றன. இந்த மாசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த செலவினங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. திட்ட முதலீட்டுடன் மாசுக் கட்டுப்பாட்டுச் செலவினங்களையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது, இலாப விகிதம் குறைந்து விடுகிறது. சில சமயங்களில் இலாபமே இல்லாமல் போய் விடுகிறது. இலாபம் வராது எனில் அத்தொழிலில் முதலீடு செய்ய முடியுமா? இந்நிலையில் ஒரு முதலாளி மாசுக் கட்டுப்பாட்டிற்காகச் செய் வேண்டிய செலவினங்களைக் குறைக்கவோ தவிர்க்கவோ முயல்கிறார். முதலாளியின் இம்முயற்சிக்கு ஆதரவு கிடைக்காத பகுதிகளில் (அதாவது நாடுகளில் அல்லது மாநிலங்களில்) முதலீடு செய்ய அவர் முன்வருவதில்லை. அப்படி ஆதரவு கொடுக்காத அப்பகுதி ஆட்சியாளர்கள், மூலதனத்தை ஈர்க்கத் தெரியாத மடையர்கள் என்று ஊடகங்கள் பரப்புரை செய்கின்றன.

சுற்றுச் சூழல் எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று நினைத்து, மாசுக் கட்டுப்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத பகுதிகளில் தொழில்கள் செழித்து வளர்கின்றன. அப்பகுதி ஆட்சியாளர்கள் மூலதனத்தை ஈர்க்கத் தெரிந்த அறிவாளிகள் என்று முதலாளித்துவ ஊடகங்களால் புகழப்படுகின்றனர். மொத்தத்தில் தொழில்கள் வளர்கின்றன என்றாலே சுற்றுச் சூழல் மாசு அடைவது என்பது தவிர்க்க முடியாதது என்று ஆகிவிடுகிறது. ஆகவே தான் வளர்ந்த நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ள பல தொழில்கள் வளரும் நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த முரண்பாடு முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத உட்கூறு ஆகும். ஆனால் சோஷலிச உற்பத்தி முறையில் தனி மனிதனுக்கு இலாபம் என்பதைக் கணக்கில் கொள்ளாமல், அனைத்து உழைக்கும் மக்களின பொது நலன்களே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் மாசுக்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது என்பது எந்தத் திட்டத்திலும் தவிர்க்க முடியாத உட்கூறாக இருக்கும். அதாவது இப்புவியில் சுற்றுச் சூழல் கேடு அடையாமல் இருப்பதற்கு மார்க்சியம் தவிர்க்க முடியாத ஒன்றாகத் தேவைப்படுகிறது.

இன்று புவி வாழ்வை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் இன்னொரு விஷயம், புவி வெப்ப உயர்வு ஆகும். மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்காக உற்பத்தி செய்யும் பொருட்களும், மற்றும் சேவைகளுக்காகப் பயன்படுத்தும் எரிபொருட்களும், இரசாயனப் பொருட்களும், கரியமில வாயு (carbon -di- oxide) பச்சை வீட்டு வாயுக்கள் (Green House Gases) மற்றும் பிற நச்சுக் கழிவுகளை உமிழ்கின்றன. இந்த நச்சுப் பொருட்கள் புவியின் வெப்பத்தை உயர்த்திக் கொண்டே போகின்றன. இப்படிப் புவியின் வெப்பம் உயர்வதால் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து நிலப் பரப்பு குறையும்.

நாளடைவில் நிலத்தில் வாழும் உயிரினங்கள் வாழ்வதற்குப் போதுமான நிலப் பரப்பு இல்லாமல போய்விடும். ஒருவேளை நிலப் பரப்பு சிறிதளவும் இல்லாமல் போகலாம். அப்போது மனித இனம் உட்பட நிலத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போய்விடும். அது மட்டுமல்ல; இப்போது உமிழப்படும் நச்சுப் பொருட்கள் நீரில் கரைந்து நீரும் அமிலத் தன்மை பெற்றுவிடும். அந்நிலையில் நீர்வாழ் உயிரினங்களும் மடிந்து விடும். அதாவது இப்புவியில் உயிரினங்களின் சுவடே இல்லாமல் போய்விடும். இன்றைய நிலைமை இப்பேரழிவை நோக்கித் தான் வேகமாகப் போய்க் கொண்டு இருக்கிறது.

இதைத் தடுத்து நிறுத்த முடியாதா? முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை ஆட்சி செய்யும் போது இப்பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியவே முடியாது. ஏனெனில் முதலாளித்துவ முறை அதிக இலாபம் கிடைக்கும் தொழில்களில் தான் மூலதனத்தையும் இயற்கை மூலாதாரங்களையும் ஈடுபடுத்து வேண்டும் என்று வழிகாட்டுகிறது. வழி காட்டுவது மட்டுமல்ல; கட்டாயப்படுத்தவும் செய்கிறது. புவி வெப்பத்தை உயர்த்தும் கழிவுகளை உமிழும் ஆயுத உற்பத்தி, வாகன உற்பத்தி, வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் தொழில்களை வளர்த்தல், நகரமைப்புத் திட்டத்தையும் அதன் வழியிலேயே செயல்படுத்தல் ஆகியவற்றால் தான் சந்தையில் மூலதனத்திற்கு இலாபம் கிடைக்கிறது. ஆகவே முதலாளித்துவ முறை ஆட்சி செய்யும் வரையில் இத்தொழில்கள் மேலும் மேலும் செழித்து வளரும். அதன் விளைவாகப் புவி வெப்பம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகும். அழிவுப் பாதையில் உலகம் இன்னும் வேகமாகச் செல்லும்.

ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கைவிட்டு விட்டு, சோஷலிச உற்பத்தி முறையை ஏற்றுக் கொண்டால், புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் தொழில்களை வெகுவாகக் குறைத்து விட முடியும். சோஷலிச ஆட்சி முறையில் போர்கள் தேவையாய் இராது எனபதால் ஆயுத உற்பத்திக்கு அவசியமே இல்லாமல் போய்விடும்.

உலகத்தை அழிவுப் பாதையில் இருந்து திருப்ப வேண்டிய அவசியத்தின் காரணமாக, அவசர அவசியத் தேவைகளுக்குத் தவிர மற்ற எல்லாப் பயணத் தேவைக்கும் பொதுப் போக்குவரத்து முறையையே பின்பற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டால், புவி வெப்ப உயர்வின் வேகத்தை நூற்றில் ஒரு பங்காகக் குறைத்து விட முடியும்,

மேலும் மரம் வளர்த்தலையும் விவசாயத்தையும் அதிக அளவில் மேற்கொண்டால் கரியமில வாயுவை உறிஞ்சி உயிர் வளியை (oxygen) வெளியிடும் செயல்கள் நடக்கும். இது ஏற்கனவே உயர்ந்துள்ள புவி வெப்பத்தைப் படிப்படியாகக் குறைக்கும். இந்த மரம் வளர்த்தலையும் , விவசாயத்தையும் முதலாளித்துவ முறை அட்சி செய்யும் வரை ஊக்குவிக்க முடியாது என்பது மட்டுமல்ல; அவற்றில் நஷ்டம் வருவது உறுதி என்பதால் அச்செயல்கள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும். கருத்தியல் ரீதியாக மக்களை மயக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மரம் நடு விழா கொண்டாடப்படுமே ஒழிய உண்மையில் தேவையான அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு மரங்கள் கூட வளர்க்கப்பட மாட்டாது.

ஆனால் சோஷலிச ஆட்சி முறையில் மக்கள் நலனே அடிப்படை என்பதால் பட்டினி கிடக்கும் மக்களுக்காகவும், ஊட்டச் சத்து இல்லாத மக்களுக்காகவும், விவசாயமும் மரம் வளர்த்தலும் வெகுவாக ஊக்குவிக்கப்படும். அதன் பக்க விளைவாக வெகுவாகக் கரியமில வாயு உறிஞ்சப்பட்டு, உயிர் வளி வெளியிடப்பட்டு புவி வெப்பம் குறையத் தொடங்கும். இவ்வுலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் வேகம் குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்த் திசையிலும் பயணிக்க வைக்க முடியும். அதனால் இப்புவியில் உயிரின வாழ்வு தொடர்வதை உறுதி செய்ய முடியும்.

இதுவரையிலும் உழைக்கும் மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது மக்களின் நல்வாழ்விற்காகவும் மட்டுமே மார்க்சியம் தேவை என்ற நிலைமை இருந்தது. ஆனால் இப்பொழுதோ, இப்புவியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்கே கூட மார்க்சியம் அவசியமான ஒன்றாக ஆகி இருககிறது.

மார்க்சியப் பகுப்பாய்வு தேவை தானா? : கோசலன்
திட்டமிடும் தத்துவங்கள் – எச்சரிக்கைக் குறிப்பு : சபா நாவலன்
மார்க்சியம், தேசியம், அடையாளம் : சபா நாவலன்

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்

உலகத்தில் இன்று என்ன நடைபெறுகிறது என்பது குறித்த குறைந்தபட்ச புரிதல் ஈழப்போராட்டத்தின் இராணுவரீதியான தோல்விலிருந்து தமிழக மாணவர் எழுச்சி வரைக்கும் மதிப்பீடு செய்வதற்கு அவசியமானது. இன்றைய தமிழக மாணவர் போராட்டஙகள் ஈழப் போராட்டத்திற்கும் இந்திய மக்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே முன்னுதாரணமாக உருவாகக்கூடிய சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ஐ.நா தீர்மானத்தோடும் ஜெயலலிதாவின் தீர்மானம் நிறைவேற்றி நாடகம் நடத்திய கையோடும் மாணவர் போராட்டங்கள் அது ஆரம்பித்த வேகத்தில் அழிந்துபோய்விடும் என்று அங்கலாய்த்த அதிகாரவர்க்கம் தோற்றுப்பானது.

thunisia_protestதுனிசியாவில் மையான அமைதியைக் கிளித்துக்கொண்டு மேலெழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டோம். அங்கு சாரிசாரியாக மக்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்தெல்லாம் நகரங்களுக்குப் படையெடுத்து போராடும் மக்களோடு இணைந்து கொண்டார்கள். துனிசியாவில் மூட்டிய நெருப்பு அரபு நாடுகள் முழுவதும் பரவியது. மக்கள் வெள்ளம் அரபு நாடுகளின் ஆயுதப்படைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இறுதியில் ஒரு சர்வாதிகாரிக்குப் பதிலாக மற்றோரு சர்வாதிகாரி பிரதியிடப்பட்டார்.

ஒடுக்குமுறை இயந்திரம் முன்னிலும் பலமாக்கப்பட்டது. இனக்குழுக்களிடையே மோதல்கள அதிகரித்தன. பல்தேசிய கொள்ளைக்காரர்கள் மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்காக முகாமிட்டுக்கொண்டார்கள்.

இதே போன்று,  அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவான தன்னெழுச்சியான போராட்டங்கள் அந்த அரசுகளைக் கேள்விகேட்டன. உலகில் போராட்டங்களை ஒடுக்கும் அமரிக்க அரசின் முற்றத்திலேயே வால் ஸ்ரீட் போராட்டம் தோன்றி உலகின் அதியுயர் அதிகாரத்தின் வேர்களை விசாரணை செய்தது. ஐரோப்பிய நாடுகள் முழுவதும் அப்போராட்டங்கள் பரவிப்படர்ந்தன. எழுச்சி முழக்கங்கள் என்பதற்கு அப்பால் மேல் வளர்ச்சியடைய முடியாமல் அப்போராட்டங்கள் அனைத்தும் செயற்பாடற்று செத்துப்போயின.

neo_liberalism1970 களில் ஆரம்பித்த உலக ஒழுங்கு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. நவ தாராளவாத உலகமயமாதல் என அறியப்பட்ட உலக ஒழுங்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்ட தசாப்தங்களுக்கு உள்ளாகவே அது மீட்சியடைமுடியாத நெருக்கடியைச் சந்த்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்தியாவிலும் லத்தீன் அமரிக்க நாடுகளிலும் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவித்த பின்னர் அந்த நாடுகளில் நவதாராளவாத உலகமயமாதல் தனது கோரக்கரங்களை இறுக்க ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாதவாறு ஊழல், சதி, போர் ஆகியவற்றை உலகமயமாக்கியது. பல் தேசிய நிறுவவனங்கள் அமரிக்காவிலும் ஐரோப்பாவிலுமிருந்து அந்த நாடுகளில் சென்று குடியேறிக்க்கொண்டன. அங்குள வளங்களையும் தொழிலாளர்களைம் ஒட்டச் சுரண்டின.

உள் நாட்டில் நேரடியாகத் தமக்குச் சேவையாற்றும் அரசுகளை மக்களின் எதிர்ப்பின்றி உருவாக்கிக்கொள்வதே பல்தேசிய நிறுவனங்களுக்காகச் செயற்படும் அமரிக்க ஐரோப்பிய அரசுகளின் பிரதான அரசியல் ஆயுதமாகத் திழழ்ந்தது. இதற்காக உள் நாட்டில் பொருளாதர பலம் மிக்க விரல்விடுக் கணக்கிடக்கூடிய பணக்கார வர்க்கத்தை உருவாக்கினர். இவர்கள் உள்ளூரில் மக்கள் எதிர்ப்பின்றிய ஏகாதிபத்திய சார்பு அரசு ஒன்று செயற்படுவதை ஜனநாயகம் எனக் கருதினர். உள் நாட்டைச் சந்தைப்படுத்தக் கூடிய சூழலில் வைத்திருப்பதைச் சமாதானம் என மக்களின் பொதுப்புத்தியாகினர்.
சந்தைப்படுத்தும் சூழல் என்பது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்கான சூழல் என்பதே.

imfஇத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக அமரிக்கா தலைமையில் பல இராட்சத நிறுவனங்கள் உருவாகின. உலக வர்த்தக மையம்(WTO), உலக நாணய நிதியம், உலக வங்கிIMF), வட அட்லான்டிக் உடன்படிக்கை அமைப்பு (NATO) போன்ற நிறுவனங்கள் நேர்த்தியான திட்டமிடலுடன் உலகை அமரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன.

பொருளாதார வார்த்தைகளில் சொல்வதானால், இந்தக் கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கம் என்பது மூன்றாம் உலக நாடுகளிலிருந்து குறைந்த விலையில் இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டி ‘உபரி உற்பத்தியை’ உறிஞ்சிக்கொள்வதாகும்.

இவ்வாறான சுரண்டலால் உருவாகக் கூடிய வறிய மக்களும் உழைப்பாளிகளும் ஒரு நேர உணவிற்கே கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வாழ்வதற்காகப் போராட ஆரம்பித்தனர். இவர்களது போராட்டம் சுதந்திட சந்தைக்கு அதாவது பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்குத் தடையாக அமைந்தது. இவர்களைது போராட்டங்களைத் தற்காலிகமாகத் உறங்கு நிலையில் வைத்துக்கொள்ளும் நோக்கோடு தன்னார்வ நிறுவனங்களை (NGO) மேற்குறித்த இராட்சத நிறுவனங்களின் பண வழங்கலின் கீழ் உருவாக்கினர். தன்னார்வ நிறுவனம் என்ற கருத்துருவாக்கம் பின்னர் விரிவாக்கப்பட்டு பல அமைப்பு வடிவங்களைப் பெற்றது.

இவை அனைத்திற்கும் அப்பால் மக்கள் தாம் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட ஆரம்பித்தனர். அவ்வாறான போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாகத் தோன்றிய போது பல வழிகளில் அழிக்கப்பட்டன.

ஈழத்தில் சந்தைப்படுத்தும் சூழலைத் தோற்றுவிப்பதற்காகவே விடுதலைப் புலிகளும் மக்களும் இரவோடிரவாக அழிக்கப்பட்டனர்.

தவிர, திட்டமிட்ட அரசியலோடு அரசியல் அமைப்புக்கள் தோன்றுவதை ஆரம்பத்திலிருந்தே அழிப்பதற்கு இந்த இந்த ராட்சத நிறுவனங்களின் உதவியோடும் அரசுகளின் நேரடிக் கண்காணிப்பிலும் புதிய முறைகள் கையாளப்பட்டன. மக்கள் போராடுகின்ற போது அப்போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் தடுத்தனர். போராட்டங்களைத் தாமே தமது உள்ளூர் முகவர்களுக்கு ஊடாகவும் சந்தர்ப்பவாத-பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு ஊடாகவும் கையிலெடுத்துச் சிதைத்தனர்.

otpor_until_victory_belgradஅரபு நாடுகளில் போராட்டங்களின் பின்னணியில் ஒட்பொர் (OTPOR) என்ற அமைப்பு செயற்பட்டது. அதே அமைப்புத் தான் வால் ஸ்ரீட் போராட்டத்தையும் கையகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் தடுத்தது. சில வேளைகளில் போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக தாமே போராட்டங்களை உருவாக்கி அழித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட போராட்டங்களை தோற்றுவித்து அழித்ததாக அமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் (NSA) பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒட்போர் அமைப்பு வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளது.

இனப்படுகொலைக்கு சகல வழிகளிலும் பின்புலத்தில் செயற்பட்ட அமரிக்காவே மனித உரிமைஅமைப்புக்களின் துணையோடு ஐ.நா போர்க்குற்ற விசாரணை குறித்த தீர்மானத்தையும் முன்வைத்தது .
இலங்கையில் ராஜபக்சவை இன்னொரு இனவாதியால் பிரதியிடும் முயற்சியை மேற்கொள்ளும் அமரிக்க அரசு அதற்கான முன் நிபந்தனைகளை இப்போதே உருவாக்க ஆரம்பித்துவிட்டது. திடீர் எழுச்சிகளை உருவாக்குவதும், புலம் பெயர் அமைப்புக்களை உள்வாங்கிக்கொள்வதும். தன்னார்வ நிறுவனங்களை நாடு முழுவதும் விதைப்பதும். இனவாதக் கட்சிகளை எழுச்சிக் கட்சிகளாக மாற்றுவதும் அவர்களின் உடனடிச் செயற்பாடுகள். அடுத்த தேர்தலுக்கிடையில் ராஜபக்ச அரசு அமரிக்கா எதிர்பார்பதற்கு மேலாக இலங்கையின் வளங்கள் முழுமையையும் சீனவிடமிருந்து பறித்தெடுத்து அமரிக்காவிற்கு வழங்கினால் எழுச்சிகள் நிறுத்தப்படும். இல்லையெனின் இலங்கையில் பேரினவாதம் எதிரியல்ல ராஜபக்சவே எதிரி என்று தேர்தலுக்கு முன்னதக அறிவிக்கப்படும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு அவ்வப்போது தோன்றும் திடீர் எழுச்சிகளுக்குப் பின்னணியில் ஒட்போர் போன்ற அமைப்புக்கள் செயற்படுகின்றனவா என்பற்கான ஆதாரங்கள் இன்னும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் அடிப்படை உரிமையான சுய நிர்ணைய உரிமையைக்கூட அங்கீகரிக்க முடியாத இனவாதக் குழுக்கள் திடீர் மாணவர் எழுச்சிகளைத் தோற்றுவிப்பதன் பின்னணி குறித்த அரசியல் அவதானமாக நோக்கப்பட வேண்டும்.

அரபு நாடுகளிலெல்லாம் அரசியலற்ற திடீர் தனெழுச்சிகளை உருவாக்கி அவற்றை அழிப்பதற்கு ஆட்சி மாற்றம் எனபது கருவியாகப் பயன்பட்டுள்ளது.

balachandtanசனல் நான்கு பிரபாகரனின் மகன் உயிரோடிருக்கும் படத்தையும் கொல்லப்பட்ட படத்தையும் வெளியிட்டபோது மனிதாபிமானிகளைக்குற்ற உணர்வுக்கு உட்படுத்தியது. இந்திய மற்றும் தமிழ் நாட்டுத்தொலைக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் அது குறித்த காட்சிகள் திரையிடப்பபட்டன.
ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று தேடித்தேடி வேட்டையாடிய ஜெயலலிதாவும் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்துவதற்கு நேரடி ஆதரவு வழங்கிய கருணாநிதியும் புதிய வேகத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச ஆரம்பிக்கின்றனர்.

துனிசியப் போராட்டத்திற்கு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட புறச் சூழலைப் போன்றே தமிழ் நாட்டிலும் போராட்டத்திற்கான சூழல் உருவாக்கப்பட்டது.

இவ்வேளையில் லயோலா கல்லூரி மாணவர்கள் தமது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கின்றனர்.

இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி இப்போராட்டத்தின் பின்புலத்தில் செயற்பட்டார் என்ற நம்பத்தகுந்த தகவல் பல் சந்தேகங்களை ஏற்படுத்தியது.

ஜெகத் கஸ்பர் போன்ற உயர் குடிப் பாதிரிகளுக்கு ஏகாதிபத்திய நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து விளக்குப் பிடித்துத் தேட வேண்டிய அவசியமில்லை. வன்னி இனப்படுகொலையில் இவர்களின் பங்கே இதற்குப் போதுமான ஆதரங்களை வழங்கியுள்ளன.

layolaலயோலாக் கல்லூரியில் ஜெகத் கஸ்பரால் தூண்டிவிடப்பட்ட போராட்டம், திராவிட இயக்கங்களின் சீர்திருத்தப் பாரம்பரியத்தில் வளர்ந்த தமிழ் நாட்டு மாணவர்களை குறித்த எல்லைக்குள் முடக்கிவிடவில்லை. அப்போராட்டம் அவருக்கு எதிரானதாகத் திரும்ப, அது கல்லூரி நிர்வாகத்தாலும் ஜெயலலிதா அரசாலும் அழித்துச் சிதைக்கப்பட்டது. பின்னதாக மாணவர் போராடங்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகத் தோன்றின. போர்க்குணம் மிக்க உணர்வுபூர்வமான போராட்டங்களாக தெருக்களில் மாணவர்கள் போராட ஆரம்பிக்கின்றனர். உலக மயம் உருவாக்கிய நுகர்வுச் சிந்தனைக்குள் முடங்கியிருந்த மாணவர்கள் தெருக்களில் புத்தகங்களையும் காவிக்கொண்டு போராட வெளிவந்தது ஆளும் வர்க்கம் எதிர்பார்க்காத அதிர்ச்சியை வழங்கியது.

திருஞான சம்பந்தர் என்ற பிராமணர் ராமேஸ்வரத்திலிருந்கு இலங்கையை நோக்கித் தேவாரம் பாடியதாக ஐதீகக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டிலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் வாழும் புலம்பெயர் நாடுகளை நோக்கித் தேவாரம் பாடும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ தன்னெழுச்சியான போராட்டங்களை பயன்படுத்திக்கொள்வதற்காக போட்டிபோட ஆரம்பித்த போது அது மாணவர்களிடையே பிளவுகளைத் தோற்றுவித்தது.

frontஇவ்வேளையில் ஏகாதிபத்தியத் தலையீட்டை நிராகரித்தும், போராட்டங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்வைத்தும் ‘ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் அமைப்பு’ எழுச்சி மிக்க போராட்டத்தை சென்னை விமான நிலையத்தில் நடத்தியது. தமிழகம் முழுவது இவ்வமைப்பினர் நடத்திய போராட்டங்கள் தொடர்கின்றன. தெளிவான உறுதியான முழக்கங்களோடு எதிர்காலத்திற்கான அரசியல் திட்டமிடலுடன் இம்மாணவர் அமைப்பு நடத்தும் போராட்டங்கள், அரபு எழுச்சிகள் கடத்தப்பட்டு அழிக்கப்பட்டது போன்றும், வால் ஸ்ரீட் வகைப் போராட்டங்கள் மடிந்துபோனது போன்றும் தற்காலிகத் தன்னெழுச்சிப் போராட்டங்களாக அன்றி உறுதியான வெகுஜன அரசியல் பலத்தோடு முன்னெடுக்கப்படுகின்றன.

ஈழத்தில் ஒடுக்கப்படும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், ராஜபக்ச என்ற மனித குல விரோதிக்கு அதிகபட்ச தண்டனை கோரியும் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்வைக்கும் அரசியலை ஒட்போர் போன்ற அமைப்புக்கள் கையகப்படுத்தி சீர்குலைக்க முடியாது. அவர்கள் தெளிவாகத் தமது அரசியலையும் அதன் தலைமையையும் முன்வைக்கிறார்கள்.

பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்த மறுகணமே அசைவின்றி நின்றுபோன போராட்டங்களைப் போலன்றி தெளிவான அரசியலை முன்வைக்கும் இவர்களின் உறுதி ஏகாதிபத்தியங்களால் கையகப்படுத்தி அழிக்கப்பட்ட போராட்டங்கள் போன்றதன்று.
ஈழத் தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் வெற்றி என்பது தமிழகத்திற்கு மட்டுமன்றி, ஈழத்திற்கு மட்டுமன்றி உலகத்திற்கே முன்னுதாரணத்தை வழங்கவல்லது.

தன்னார்வ நிறுவனங்களும் .புரட்சி வியாபார’ அமைப்புக்களும் போராட்டங்களை மிக இலகுவில் கையகப்படுத்தி அழிக்கும் புதிய ஏகாதிபத்திய அரசியலின் முன்பு அதற்கு எதிரான புரட்சிகர அரசியலை முன்வைப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில் தமிழக மாணவர்கள் அதற்கு முன்னுதாரணமானத் திகழ்கின்றனர்.

நன்கு திட்டமிடப்பட்ட ஏகாதிபத்திய அழிவு நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத இவர்களின் போராட்டத் தந்திரோபாயமும் உறுதியான நீண்ட மக்கள் போராட்ட அனுபவம் மிக்க அரசியல் தலைமையும் தமிழகத்தின் பிழைப்புவாதிகளையும் கூட மிரட்டியிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற போது தமிழகத்தில் இரத்த ஆறு ஓடப்போகிறது என்று படம்காட்டிய இந்த இனவாதிகள், எல்லாம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் திரும்பி வருவார் என போலி நம்பிக்கை வழங்கி மக்களைப் போராடவிடாமல் தடுத்தனர். திட்டமிட்ட நிறுவனமயப்பட்ட மாணவர்களின் எழுச்சியின் வெம்மை தாங்காது தெருவிற்கு வந்த இந்த இனவாதிகள் மாணவர் போராட்டங்களுக்க அரசியல் வேண்டாம் என வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர்.
உதிரிகளாக புலம் பெயர் தமிழர்களின் கடைகண் பார்வைக்காகவும், பொழுது போக்கு வியாபார விழாக்களையும், சினிமாக்களையும் விற்பனை செய்வதற்காகவும் ஈழ விடுதலை பேசும் பலர் மாணவர் போராட்டங்கள் குழுவாதத்திற்கு சிக்கியுள்லதாகக வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அழிக்கப்படும் மக்களின் அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்தும் புலம் பெயர் அமைப்புக்கள் மாணவர் போராட்டத்தின் போர்குணத்தை அறிந்ததும் மௌனித்துப் போயினர். புலம் பெயர் ‘தேசிய’ இணையங்கள் போராட்டங்கள் குறித்த செய்திகளை முற்றாகப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தப் புள்ளியில் உலகின் போராட்டங்களுக்கே முன்னுதாரணத்தை வழங்கிய தமிழக மாணவர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரிகளையும் நண்பர்களையும் இனம்காட்டியுள்ள்னர்.

ngoஐரோப்பிய நாடுகள் நிதி வழங்கும் தன்னார்வ நிறுவனங்களின் நேரடியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் பெரும்பாலானவை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு என்ற முடிவிற்கு வந்துள்ளன. ராஜபக்ச அரசிற்கு மாற்றாக சந்திரிக்கா தலைமையிலான அரசை இலங்கையிலுள்ள பல்தேசிய தரகுகளின் ஆதரவோடு நிலை நாட்டுவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அடிப்படை முழக்கமாகக் கொண்ட தமிழக மாணவர்களின் போராட்டங்களை இலங்கையில் வாழும் தமிழர்கள் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள்.

முப்பது வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக முதல் தடவையாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்த மாணவர்களின் குரல் சந்தர்ப்பவாத அரசியலால் சிதைந்துபோகாது பாதுகாக்கப்பட வேண்டும்.

2013 – இலங்கை குறித்து அமரிக்காவின் திட்டங்கள் என்ன ? : நிவேதா நேசன்

எப்பிஐ தலைவர்களைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தது

NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் : சபா நாவலன்

பாகிஸ்தானில் காத்ரியின் மக்கள் எழுச்சி – தங்கச் சுரங்கம் பின்னணியில் : சபா நாவலன்

PAKISTAN-UNREST-POLITICSஉலகம் முழுவதும் போராட்டங்களும் எழுச்சிகளும் நடைபெறுகின்றன என்றால் அதன் அடிப்படைக்காரணம், அதற்கான அரசியல் புறச்சூழல் காணப்படுகின்றது என்பதே. அதிகாரவர்க்கமும், பண முதலைகளும் தமது அப்பாவி மக்களைக் கொள்ளையிட்டு உலகம் முழுவதும் பணப்பதுக்கலில் ஈடுபடுகின்றனர். உழைப்பையும் மூலதனத்தையும் சொந்தமாக்கிக் கொள்கின்ற உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிறுவனங்களும் அவற்றைச் சார்ந்தவர்களுமே உலகில் ஒவ்வொரு மனிதனதும் வீட்டு நுளைவாசல் வரை வந்து கொள்ளையடித்துச் செல்லும் அளவிற்கு உலகம் அநாகரீகம் அடைந்துள்ளது. இவர்கள் விட்டுச் செல்கின்ற வறுமையும் மனித அவலமும் மக்கள் எழுச்சிகளைத் தூண்டுகிறது.

அந்த மகள் எழுச்சிகளைக்கூட மக்களை அவலத்துள் அமிழ்த்திய அதே குழுவினரே பயன்படுத்திக்கொள்கின்றனர். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஏகாதிபத்திய அரசுகள் அவர்களுக்கான எழுச்சிகளை திட்டமிட்டு நடத்துகின்றனர். எழுச்சிகளை நடத்துவதற்காக பயிற்சி வழங்கப்பட்ட புரட்சி வியாபார அமைப்புக்களையும், தன்னார்வக் குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். அரசுகளதும், பல்தேசிய நிறுவனங்களாதும் பண வழங்கல்களைப் பெற்றுக்கொள்ளும் அரசு சரா நிறுனனங்கள் என தம்மைத் தாமே அழைத்துக்கொள்ளும் தன்னார்வ நிறுனனங்களும் தனி நபர்களும் புரட்சியைத் திட்டமிட்டு புதிய பொம்மை அரசுகளை நிறுவிக்கொள்கிறார்கள். இவை அனைத்தும் பல்தேசியக் கம்பனிகளின் நலன்களுக்காகவும் அரவணைப்பில் இயங்கும் அரசுகளின் நலன்களுக்காகவுமே நடைபெறுகின்றன.

மக்களின் மேலோட்டமான அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளை முன்வைத்து புதிய குழுக்களும், திடீர் எழுச்சிகளும் தோன்றுகின்றன.

அவ்வாறான திடீர் மக்கள் எழுச்சிகளில் ஒன்றே பாகிஸ்தானில் இன்று உருவாகியிருக்கும் மக்கள் போராட்டமும்.

மக்கள் எழுச்சிகள் அனைத்தும் மக்களுக்கானவையோ அல்லது விடுதலை முற்போக்கானவையோ அல்ல. ஹிட்லர் உருவாக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிகளையும், போலந்தில் அமரிக்க கிறீஸ்தவ திருச்சபைகளின் பின்னணியில் வலேசா தோற்றுவித்த எழுச்சிகளையும், நமது காலத்தில் அமரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காக அரபு நாடுகளில் தோன்றிய எழுச்சிகளையும் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் பாரதீய ஜனதா போன்ற மத அடிப்படைவாதிகள் தோற்றுவித்த எழுச்சிகளைக்கூட நமது காலத்தில் பார்க்கிறோம்.

இன்று உலகம் முழுவதும் அங்குள்ள புறச்சூழலைக் கற்றுக்கொள்ளும் ஏகாதிபத்திய அரசுகள் தாம் சார்ந்த பல்தேசிய நிறுவனனங்களின் மூலதனச் சுரண்டலுக்காக எழுச்சிகளைத் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன.

தமது தேவைக்காக தேசிய இனப்பிரச்சனை, அடையாளம் சார்ந்த அரசியல், போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் ஏகாதிபதிய அரசுகள் திட்டமிட்ட திடீர் எழுச்சிகளையும் போராட்டங்களையும் பெரும் பணச்செலவில் நடத்திவருகின்றன.
பாகிஸ்தானிய அரசு பலோசிஸ்தான் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைய மறுத்து அதன் மீது இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பலோச்சிஸ்தானியர்கள் பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக சுயநிர்ணய உரிமைகோரிப் போராட்டம் நடத்திவருகிறார்கள். 2012 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் அமரிக்க செனட் சபையில் பலோச்சிஸ்தான் -Balochistan-மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் பாக்கிஸ்தான் அரசைக் கோருவதாகத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உட்பட்த்தப்பட்ட போது அதுகுறித்து கண்டுகொள்ளாது ராஜபக்ச அரசோடு உடன்படிக்கைகள் செய்துகொண்ட ஏகாதிபத்தியங்கள் பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக பலோசிஸ்தானை விடுதலை செய்யக் கோருகின்றன.

goldbalochistanபலோச்சிஸ்தானின் ஷாகாய் மாவட்டத்திலிருக்கும் ரெக்கொ டிக் – Reko Diq- என்ற சிறிய நகரம் அண்மைக்காலமாக உலகின் கண்களை உறுத்துகின்ற குவியப் புள்ளியாகக் காட்சிதந்தது. அமரிக்காவின் பலோச்சிஸ்தான் மீதான அக்கறையினதும் ஐரோப்பாவினதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினதும் மனித உரிமை அக்கறையினதும் பின்புலத்தில் ரெக்கொ டிக் காணப்பட்டது. உலகத்தின் மிகவும் தரமான தங்கச்சுரங்கம் ஒன்றை ரிக்கோ டிக் கொண்டிருப்பதுவே இதன் பிரதான காரணம்.

சிலி நாட்டின் எஸ்கடோடியா தங்கச் சுரங்கத்தில் பெறப்படும் தொகையை விட அதிகளவான தங்கத்தை பலோச்சிஸ்தானில் பெறமுடியும் என்று கணிப்பிடுகிறார்கள். எரிமலை குளிர்வடைந்த இடங்களில் ஒன்றான ரேக்கோ டிக் 12.3 மில்லியன் செப்புத் தாதுக்களையும் கொண்டுள்ளது எனக் கணிப்பிடப்படுகிறது.

தங்க வியாபாரம் மேற்கொள்ளும் மேற்கின் பல்தேசிய நிறுவனங்கள் அங்குள்ள தங்கத்தைச் சுரண்டி எடுப்பதற்காக அருவருக்கத்தக்க மோதலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றன.

கனடா நாட்ட்டைத் தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி நிறுனமன பாரிக் கோல்ட் -Barrick Gold mine- பலோச்சிஸ்தான் தங்கச் சுரங்கத்தில் தங்கம் அகழ்வதற்காக விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பலோச்சிஸ்தான் மாநில அரசும் பாகிஸ்தான் மத்திய அரசும் 2011 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நிராகரித்தன.

அதே வேளை பலோச்சிஸ்தானில் துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கும் ஏனைய அபிவிருத்திப் பணிகளும் சீனாவிற்கு வழங்கப்பட்டது.

மேற்குலக ஊடகங்கள் பாகிஸ்தான் தங்கம் அகழ்வதற்கு கனேடிய நிறுவனத்தை அனுமதிக்க மறுத்தது குறித்து இஸ்லாமிய அரசின் சர்வாதிகாரம் என்று பிரச்சாரங்களை ஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக ஒடுக்கப்படும் பலோச்சிஸ்தானியர்களின் மனித உரிமை மற்றும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைகள் போன்றவற்றைப் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்தன.

இதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத பலோச்சிஸ்தான் இன்று உலகின் கண்களை உறுத்தியது. இந்த நிலையில் தான் கனடாவில் வசிக்கும் கனேடியப் பிராஜா உரிமை பெற்ற பாகிஸ்தானியரான பணக்காரர் தாகீர் உல் காட்ரி முன்னிலைக்கு வருகிறார். பாகிஸ்தானிய அரசின் ஊழல், மக்களின் வறுமை ஆகிய சுலோகங்களை முன்வைத்து பாகிஸ்தானிய அரசியலில் தலையிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் பதின்நான்காம் திகதி நான்கு பல்லாயிரம் மக்களைத் திரட்டி திடீர் எழுச்சி ஒன்றை காட்ரி நடத்தினார்.

நாடாளுமன்றம் மற்றும் மாகாண அரசுகளைக் கலைக்க வேண்டும், தேர்தல் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக இஸ்லாமாபாத் அருகே தமது ஆதரவாளர்களுடன் தொடர் போராட்டத்தை காத்ரி நடத்தி வந்தார். இது தொடர்பாக அரசுக்கும் கெடு விதித்திருந்தார்.
இப்போது அரசு காத்ரியின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ள மக்கள் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

கனேடிய மில்லியனியரான காத்ரிக்கும் கனடாவின் பாரிக் கோட்ல் நிறுனதிற்கும் நெருங்கிய வியாபாரத் தொடர்புகள் நிலவிவந்தன. இத்தகவலை பல ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.

ஏகாதிபத்தியத்தின் அடியாளாக கனாவிலிருந்து ‘கடவுள்’ போலத் தோன்றிய காத்ரி தங்கச் சுரங்கத்தில் மேற்கு நிறுவனனங்கள் கைவைக்கும் வரைக்கும் அரசியலில் தலையிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் மேலாக இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் அந்த நாடுகளிலிருந்து சீன ஆதிக்கத்தை அகற்றுவதற்கு அமரிக்க ஏகாதிபத்தியம் அனைத்தையும் மேற்கொள்ளத் தாயாரகிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் அதிகாரவர்க்கதிற்கு எதிராகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றினால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் இனிமேல் அதிகாரவர்கம் சார்ந்ததாக மட்டுமே அமையும்.

இலங்கையிலும் இதேபோன்ற எழுச்சிகளையும் ஆட்சி மாறத்தையும் ஏற்படுத்தவும் புதிய பேரினவாதிகளால் ராஜபகசவைப் பிரதியிடவும் அமரிக்கா நேரடியாகவே முயன்று வருகிறது.

புதைமணலில் சிக்கியது இந்தியப்பொருளாதாரம்.!

இந்தியப் பொருளாதாரம் மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிப் பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட 36% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது ரிசர்வ் வங்கி. 7% அளவுக்கு உயர்ந்துள்ள பணவீக்கம் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 56, 57 ரூபாயாக வீழ்ச்சியடைந்து, மேலும் சரிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்புச் சரிவினால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள், குறிப்பாக இறக்குமதியாகும் எண்ணெயின் விலை உயர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதோடு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 19.6 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறது அரசு.

முந்தைய ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருந்து, கடந்த நிதியாண்டில் 6.5 சதவீதமாக வீழ்ந்து, இவ்வாண்டு ஏப்ரலில் 5.3% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிய சரிவாகும். நுகர்பொருள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 8.1%லிருந்து 4.6% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 2011-இல் 5.7 சதவீதமாக இருந்த தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் 0.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று அரசே கூறுகிறது.

இவையெல்லாம் அரசாங்கம் அறிவிக்கும் புள்ளிவிவரங்கள்தான். உண்மைப் பொருளாதாரமோ இதைவிடப் பலமடங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, அரிசி, காய்கறிகள், பால், முட்டை, சமையல் எண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 150%க்கு மேல் உயர்ந்து, உழைக்கும் மக்களின் உண்மை ஊதியம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உணவுப் பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 10.49% அளவுக்குத்தான் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரக் கணக்குக்காட்டி அரசாங்கம் காதிலே பூச்சுற்றுகிறது.

ஏதோ, இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பது போல ஆட்சியாளர்கள் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. தனியார்மயமும் தாரளமயமும் திணிக்கப்பட்ட பின்னர், விவசாயமும் சிறுதொழிலும் நசிந்து விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்த போதிலும், அதனைப் பொருளாதார நெருக்கடியாக ஆளுங் கும்பல் ஏற்கவில்லை. பங்குச் சந்தை சரிவு, ரூபாய் மதிப்புச் சரிவு, அந்நிய முதலீடு வீழ்ச்சி என்றதும் இப்போது பொருளாதார நெருக்கடி பற்றி அங்கலாய்க்கின்றனர். பணவீக்கம் பற்றி பேசுகிறார்களே தவிர, விலைவாசி ஏறியதைப் பற்றி பேசுவதில்லை. பெட்ரோல் விலையேற்றம் பற்றி பேசுகிறார்களே தவிர, வாடகை, போக்குவரத்து, மருத்துவம், கல்விக் கட்டணங்கள் கிடுகிடுவென அதிகரித்திருப்பதைப் பற்றி பேசுவதில்லை. இந்தியப் பொருளாதாரத்தின் தரம் தாழ்ந்துவிட்டதாக எச்சரிக்கும் ஸ்டேண்டர்டு அண்டு புவர், ஃபிட்ச் முதலான தர மதிப்பீட்டு நிறுவனங்களும்கூட, நாட்டின் தொழில் மற்றும் விவசாய நெருக்கடி பற்றி வாய்திறக்காமல், அந்நிய முதலீடு வீழ்ச்சியையும் நிதி நெருக்கடியையும் பற்றித்தான் பேசுகின்றன.

“தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கம் தயக்கத்தையும் ஊசலாட்டத்தைக் கைவிட்டு, அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் வகையில் உறுதியுடன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; வங்கி, காப்பீடு மற்றும் பென்சன் நிதிகளில் தனியார்மயத்தைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும்” என்கிறது, ஸ்டாண்டர்டு அண்டு புவர் எனும் தர மதிப்பீட்டு நிறுவனம். அந்நிய முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையின்மை நிலவுவதால், தாமதப்படுத்தாமல் நிதிச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்கிறார், அரசின் நிதித்துறை ஆலோசகரான கௌசிக் பாசு.

நிதிப் பற்றாக்குறையைப் போக்க அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக ஜி-20 மாநாட்டில் ஏகாதிபத்தியங்களிடம் அறிவித்த பிரதமர், அந்நிய முதலீட்டைப் பெருக்க அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம்; மானியங்களை மேலும் குறைப்போம் என்று உறுதியளித்துள்ளார். இதன்படியே, இந்தியாவின் அரசு பத்திரங்களில் அந்நிய அரசு நிதி நிறுவனங்கள், அந்நிய மத்திய வங்கிகள், காப்பீடு மற்றும் பென்ஷன் நிதி நிறுவனங்கள் 20 பில்லியன் டாலர் (ஏறத்தாழ ரூ.11 ஆயிரம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய தாராள அனுமதி, உள்கட்டமைப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் அந்நிய நாடுகளிலிருந்து திரட்டும் நிதிக்கான வரம்பு அதிகரிப்பு, நீண்டகால வைப்புள்ள உள்கட்டமைப்புப் பத்திரங்களில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 25 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய தாராள அனுமதி என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அந்நிய முதலீடுகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது மன்மோகன் அரசு.

ஆளும் கும்பல் முன்வைத்துள்ள தீர்வுகள் மீண்டும் ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளின் நலனைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே தவிர, நெருக்கடிக்குத் தீர்வாக உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்த திட்டம் ஏதுமில்லாததால், அது தவிர்க்கவியலாமல் மீண்டும் பொருளாதாரத்தை நெருக்கடிக்குத்தான் தள்ளும். உள்நாடுச் சந்தையை விரிவாக்கி வலுப்படுத்த வேண்டுமானால், புரட்சிகரமான முறையில் அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் வீழ்த்தப்பட்டு, நிலச்சீர்திருத்தமும் விவசாயத் துறையில் மாற்றங்களும் செய்வதோடு, அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் பெருமளவில் முதலீடும் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, முதலீடு பற்றாக்குறை என்ற வாதத்தை வைத்து அந்நிய நிதி மூலதனத்துக்குக் கதவை அகலத் திறந்து விடுவதுதான் ஆளும் கும்பல் முன்வைக்கும் தீர்வு. “குடிகாரனின் கைகால் நடுக்கத்தை நிறுத்த இன்னொரு பெக் ஊற்றிவிடு” என்ற குடிகாரச் சிகிச்சையைத்தான் ஆட்சியாளர்களும் முன்வைக்கின்றனர்.

நெருக்கடியிலுள்ள அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் மீண்டால்தான், அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரமும் மீள முடியும் என்ற நச்சுச் சுழலில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளதால், அங்கே தலைவலி என்றால் இங்கே பேதியாகிறது. ஐரோப்பிய பொருளாதாரச் சரிவை மீட்க விழையும் ஏகாதிபத்தியவாதிகள், அதன் சுமையை வளரும் நாடுகளின் தலையில் சுமத்துவதால், அதற்கு விசுவாசமாக இந்தியாவும் 1000 கோடி டாலர் நிதியுதவி வழங்கப் போவதாக மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

நான்காண்டுகளுக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதும், ஈராண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய பொருளாதாரம் குப்புற விழுந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்காமல் வலுவாக யானை போல உறுதியாக நிற்கிறது என்று உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்து ஆட்சியாளர்கள் பெருமை பேசினார்கள். ஆனால் இப்போது, உள்நாட்டுப் பொருளாதாரச் சரிவையும் தோல்வியையும் மூடிமறைத்து தப்பிக்கும் தந்திரமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரச் சரிவால்தான் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது என்று பழியை ஐரோப்பா மீது போட்டுத் தப்பிக்க முயற்சிக்கின்றனர்.

ஏற்கெனவே ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தின் நெருக்கடி முதலாளித்துவக் கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாக முற்றியிருக்கிறது. இந்தியாவிலும் தனியார்மயம்தாராளமயம் எனும் மறுகாலனியக் கொள்கை படுதோல்வியடைந்திருக்கிறது.

இந்தத் தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லும் யோக்கியதையோ, நாணயமோ இல்லாத மன்மோகன் சிங் கும்பல், ஐரோப்பிய வீழ்ச்சிதான் நம் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறி, ஐரோப்பாவுக்கு வேட்டி கட்டிவிடுவதற்காக நமது வேட்டியை உருவுகிறது.

நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிடும் இக்கொடிய மறுகாலனியத் தாக்குதலை எதிர்த்துப் போராடாவிட்டால், கிரீஸ் நாட்டுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும் ஏற்படும்.

__________________________________________
– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.
___________________________________________

இலங்கையில் சனத்தொகை மதிப்பீடும் வட கிழக்கில் சனத்தொகைக் குறைப்பும்

சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான புதிய தகவல்களின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 597 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியை தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஒருகோடியே 87 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக இருந்தது. 2012 மார்ச் 20 ஆம் நடத்தப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் அறிக்கை நேற்று (26) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு இருந்த மொத்த சனத் தொகையுடன் ஒப்பிடும் போது, தற்போது இலங்கையின் சனத் தொகையானது 7.9 வீதமாக அதிகரித்துள்ளது.
30 வருடங்களின் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் தற்போதைய சனத்தொகை 20,227,597 என குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுத்தத்தின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டில் யாழ். குடாநாட்டில் 20 சதவீதமான சனத்தொகை குறைப்பாடு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டின் சனத்தொகை 1981ம் ஆண்டு 734,000ஆக காணப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அது 583,000ஆக குறைந்துள்ளதென குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட – கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் பல்தேசிய நிறுவனங்களின் திட்டமிட்ட நிலப்பறிப்பும் நிகழும் நிலையில் சனத்தொகை மதிப்பீடு குறித்த பல கேள்விகள் எழுந்துள்ளன.

மூலதனத்தை வாசித்தல் பகுதி 4 : சபா நாவலன்

கார்ல்ல் மார்க்ஸ் அனைத்தையும் இயங்குவதாகவே கூறுகிறார். ஒன்றின் இயக்கம் நிறுத்தப்படுகின்ற நிலையை நோக்கி நகரும் போது புதிய ஒன்றின் உருவாக்கத்தைக் காண்கிறோம். பரிவர்த்தனை மதிப்பு என்பது கூடப் பொருளின் இயக்கத்தோடு தொடர்புடையது. ஒரு பண்டம் இன்னொன்றிற்குச் சமனாகப் பரிமாறப்படுகின்றது. பின்னர் அது மற்றொன்றோடு பரிமாறப்படுகின்றது. இவ்வாறு அது தொடர்ச்சியான இயக்கத்திற்கு உட்படும் போதே அந்தப் பண்டம் பரிவர்த்தனை மதிப்பு உடையதாகின்றது.

சமூகத்தின் ஒவ்வோரு கூறுகளிலும் இந்த இயக்கத்தை நாம் காணமுடியும். இலங்கையில் இனப்படுகொலை நடந்து முடிந்தபோது சமூகத்தின் இயக்கம் தடைப்பட்டிருந்தது. அந்த இயக்கம் தடைப்படும் போது சமூகம் புதிய சமூக மாற்றத்தை நோக்கிய இயக்கத்தை ஆரம்பிக்கும். இதை உணர்ந்து கொண்ட முதலாளித்துவ சங்கிலியின் உச்சத்திலிருந்த ஏகபோக நாடுகள் பல அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கின. அந்த அபிவிருத்தித் திட்டங்கள் இறுதியில் நாட்டைச் சுரண்டுவதற்கானவை என்றாலும். படுகொலைகளின் பின்னர் தடைப்பட்ட இயக்கத்தை மீளமைப்பதற்கான ஆரம்பமாக அவை அமைந்தன.

ஆக, பண்டங்களின் இயக்கம் என்பது பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குகின்றது. பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பு என்பது அதன் இயங்கும் திறனைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஒரு பண்டம் மற்றொன்றோடு பரிவர்த்தனை செய்யப்பட முடியாத நிலையை எட்டும் போது அதன் இயக்கம் அற்றுப் போகிறது. அதன் பரிவர்த்தனை மதிப்பும் அற்றுப் போகிறது.

10 ஆண்டுகளின் முன்னர் நான் வாங்கிய கணணி இப்போது பயனற்றதாகிவிட்டது மட்டுமன்றி அது விற்பனை செய்யமுடியாததாகிவிட்டது. அதனால் பரிவர்த்தனை உலகில் அது இன்னொன்றோடு பரிமாற இயலாத நிலையிலுள்ளது. அதன் இயக்கம் பரிவர்த்தனை உலகில் நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் மதிப்பும் அற்றுப்போய்விட்டது.

எனது கணனிக்கு பயன் மதிப்பு அற்றுப் போய்விட்டது மட்டுமன்றி, அதாவது அதன் பாவனைக்கு உரிய தரம் அற்றுப் போய்விட்டது. இதனால் எவ்வள குறைந்த மதிப்புள்ள பொருளுக்கும் அதனைப் பரிமாற்றிக்கொள்ள முடியாது. அதே வேளஒ எனது புதிய கணணியை வேண்டுமானால் இரண்டு கைத் தொலைபேசிகளுக்கு ஈடாகப் பரிமாறிக்கொள்ள முடியும். ஆக, பயன் மதிப்பு என்பது பண்டங்களின் தரத்தோடும் அதேவேளை பரிவர்த்தனை மதிப்பு என்பது அதன் அளவோடும் தொடர்புடையது. அதே வேளை பண்டங்களின் இந்த இரண்டு இயல்புகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

இப்போது பரிவர்த்தனை மதிப்பை அளவிடுவது எப்படி என்பது பிரதானமானதாகும். அந்த அளவீடு பொதுவான ஒன்றாக அமையவேண்டும். அந்த பொதுவான ஒன்று என்பது பயன் மதிப்பினால் உருவாக்கப்படுவது அல்ல. அனைத்துப் பண்டங்களினதும் பொதுவான இயல்பு என்பது மனித உழைப்பு என்பதே. எல்லாப் பண்டங்களும் மனித உழைப்பினால் உற்பதிசெய்யப்படுவதே. ஆக பண்டங்களின் மதிப்பை அளவிடுவதற்கு மனித உழைப்புப் பொதுவானதாக அமைகிறது. எனது கணனியை உருவாக்குவதற்கு தேவைப்பட்ட மனித உழைப்பின் அளவே அதன் பெறுமானமாகக் பிரதியீடு செய்யப்படுகிறது.

அடம் சிமித் பண்டங்களின் மதிப்பு என்பது குறித்த நேரத்தில் பண்டம் என்பது சமூகத்திற்குத் தேவைப்படுகின்ற அளவையும் அதன் வினியோகத்தையும் சார்ந்தே நிர்ணயிக்கப்படும் என மனித உழைப்பின் பெறுமானத்தை நிராகரிக்கின்றார். பணத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படும் சட்டரீதியான சூதாட்டமான பங்கு சந்தை வியாபாரம் அடம் சிமித்தின் கோட்பட்டை அடிப்படையாகக் கொண்டே உருவானது.

ரிகார்டோ போன்ற பல பொருளியலாளர்கள் மனித உழைப்பு என்பதே பண்டங்களின் மதிப்பு என்பதைக் குறிப்பிடுகின்றனர்.

டேவிட் ரிக்கார்டோவை கார்ல் மார்க்ஸ் முற்றாக நிராகரிக்கவில்லை. பண்டங்களின் மதிப்பு என்பது மனித உழைப்பே என்பதை ஏற்றுக்கொள்ளும் கார்ல் மார்க்ஸ், அந்த மனித உழைப்பு என்பது சமூக அளவில் தேவையான உழைப்பு என்கிறார். இந்த உழைப்பு என்பதே பண்டங்களில் உள்ளடங்கியுள்ள மதிப்பாகும். பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்பு என்பது மனித உழைப்பினாலான பண்டங்களின் மதிப்பினாலேயே உருவாகின்றது. நாம் பண்டங்களை வாங்கும் போது உழைப்பு என்பது அதனுள் அடங்கியிருபதைக் காணமுடியாது.

எனது கணணியை 300 இற்கு வாங்கிய போது அதனுள் உள்ளடங்கியிருக்கும் மனித உழைப்பக் காணவில்லை. அந்த உழைப்பே பரிவர்த்தனை மதிப்பாகப் பிரதிநிதித்துவப்படுததப்ட்டது.

இப்போது பண்டங்களைப் பொறுத்தவரை மூன்று முக்கிய இயல்புகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அவை, பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு மற்றும் மதிப்பு.
இங்கு பரிவர்த்தனை மதிப்பு என்பது பண்டங்களின் மதிப்பை வெளிப்படுத்துவதற்குத் தேவையான முறைமையாகக் காணப்படுகிறது.

பண்டங்களை நாம் ஒவ்வொரு நாளும் வாங்குகின்றோம், விற்பனை செய்கிறோம். மூலதனம் என்ற மிகப் பெரும் ஆய்வகத்தின் மூலைக் கல்லே பண்டங்கள். அதற்குள் மறைந்திருக்கும் மர்மமான பகுதி தான் மனித உழைப்பு உருவாக்கும் பெறுமானம் அல்லது மதிப்பு. பண்டங்கள் பரிவர்த்தனைக்கு உட்படக் கூடியதாகவும், ஒரு பண்டம் மற்றொன்றோடு அளவிடத் தக்கதாகவும் அமைவதற்கு மனித உழைப்பால் அளவிடப்படும் மதிப்பு என்பதே அடிப்படைக் காரணமாக அமைகிறது.

இந்த மனித உழைப்பால் உருவாகும் பண்டங்களின் பெறுமானம் என்பதே பரிவர்த்தனை மதிப்பால் பிரதியீடு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு பண்டங்களையும் வாங்கும் போது அவற்றில் பொதிந்துள்ள மனித உழைப்புத் தொடர்பாக ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பதில்லை. எதனால்? எமக்கு உடனடியாகத் தெரிவதெல்லாம் அதன் பரிவர்த்தனை மதிப்புத் தான். மனித உழைப்புத் தான் பரிவர்த்தனை மதிப்பாக பிரதியிடப்பட்டுவிட்டதே.
இங்கு மிக குறிப்பிடத் தக்க ஒன்று, மதிப்பு என்பது பரிவர்த்தனை மதிப்பால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறதே தவிர, மதிப்பு என்பது பரிவர்த்தனை மதிப்பிற்குச் சமனான ஒன்றல்ல. இரண்டும் வேறுபட்டவை. பண்டங்களை உற்பத்தி செய்வதற்கான உழைப்பு சக்தி அதிகரிக்கும் போது அதன் மதிப்பு அதிகரிக்கும். அதே வேளை பரிவர்த்தனை மதிப்பும் ஒப்பீட்டளவில் அதிகரிக்கும்.

மனித உழைப்பு என்ற பண்டங்களை உற்பத்தி செய்யும் செயற்பாடு சந்தைக்குப் போவதற்கு முன்பதாக அவற்றின் பெறுமானத்தை அல்லது மதிப்பை க் அளவிடுவதற்கான முறை.

உழைப்பின் அளவு எவ்வளவு என்பதில் இருந்தே பண்டங்களின் மதிப்பு உருவாகிறது. சரி, எவ்வளவு உழைப்பு என்றால் என்ன? அது பண்டங்களை உற்பத்தி செய்ய மனித உழைப்புத் தேவைப்படும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் காலம் என்பது உழைப்பின் உள்ளே அடங்கியிருக்கும் அடிப்படையகும் பிரதான காரணியாக அமைகிறது.

நம் சந்தித்த, இன்று அழிந்து கொண்டிருக்கும் நவ-தாராளவாதப் பொருளாதாரம் மனித உழைப்பை வேறு வகைகளில் கையாள்வதிலிருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. ஐரோப்பாவில் 7 யூரோக்களை ஒரு மணி நேர வேலைக்கு ஊதியமாகப் வழங்கும் ஒரு பல்தேசிய முதலாளி, இந்தியாவிலோ இலங்கையிலோ ஒரு யூரோக்களே ஊதியமாக வழங்குகிறார்.

ஆக, உழைப்பு நேரம் என்று மட்டும் மொட்டையாகக் குறிப்பிட முடியாது என்று கார்ல் மார்க்ஸ் அன்றே எதிர்வு கூறியிருந்தார்.

(தொடரும்…)

அடுத்த வாரத் தொடரில் முதலாவது பாகத்தின் முதலாவது அத்தியாயம் முடிவடையும். அத்தோடு முதலாவது அத்தியாயத்தின் முழுமையான மொழிபெயர்ப்பும் இணைக்கப்படும். முன்னைய தொடர்களில் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். இன்றை அவசியமானதும் அவசரமானதுமான மனித குலத்தின் தேவையான மூலத்தனம் குறித்த மீள் வாசிப்பு கூட்டு முயற்சியாக முன்னெடுத்தாலே முழுமை பெறும்.

முன்னைய பகுதிகள் :

மூலதனத்தை வாசித்தல் பகுதி 3 : சபா நாவலன்

மூலதனத்தை வாசித்தல் பகுதி 2 : சபா நாவலன்

மூலதனத்தை வாசித்தல் பகுதி 1 : சபா நாவலன்