Tag Archives: சாதி

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை (பாகம்2) : சபா நாவலன்

80களின் ஆரம்பத்திலிருந்து ஐரோப்பிய, அமரிக்க நாடுகளை நோக்கிப் புலம்பெயர்ந்த வடபகுதி, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் புலம்பெயர் நாடுகளில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். புலம்பெயர் நாடுகளின் நவ-தாராளவாத கலாச்சாரத்துடன் ஒட்டாத இவர்களின் கலாசாரம் தமது சொந்ததேசத்தில் சிறிதளவாவது ஏற்பட்ட மாற்றங்களைக்கூட உள்வாங்கிக்கொள்ளவில்லை.

சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும்.

Jaffnaபுலம் பெயர் ஐரோப்பிய நாடுகளில் ஏனைய சமூகங்களைப் போன்றே தமிழர்கள் தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். ஏனைய சமூகங்களுடன் குறைந்தபட்சத் தொடர்புகளைக்கூட பேணிக்கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் தமது கலாச்சார விழுமியங்களைப் பேணிக்கொள்வதற்காக பல பண்பாட்டுக்கூறுகளைப் பேணிக்கொள்கின்றனர். அவற்றினூடான தொடர்புகள் இலங்கையின் நான்கு தசாப்தங்களின் முன்னர் காணப்பட்ட அதே சமுக உறவுகளை மீண்டும் மீண்டும் மீழமைத்துக்கொள்கின்றனர்.

குடிபெயர்ந்த தமிழர்கள் மத்தியில், முதலாவது சந்ததி இப்போது தான் உருவாக்கம் பெற்றுள்ளது. அந்தச் சந்ததியை தமது கலாச்சார வட்டத்திற்குள் பேணுவதற்காகான பெரும் போராட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.

இன்று இலங்கையில் கூட அருகிப் போய்விட்ட பூப்புனித நீராட்டு விழா, மரபு சார்ந்த திருமணச் சடங்குகள் போன்றவற்றை மிகுந்த பொருட்செலவில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்கிறார்கள்.
30 வருடங்களின் முன்னிருந்த “யாழ்ப்பாணத்தை” ஐரோப்பாவில் மட்டும்தான் காணமுடியும்.

நான்கு தசாப்தங்களின் முன்னான யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட குறைந்தபட்ச முற்போக்கு ஜனநாயகக் கூறுகள் கூட அழிக்கப்பட்டு ஆதிக்கத சாதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட இறுக்கமான சமூகக்கட்டமைப்பு ஒன்று புலம்பெயர் நாடுகளில் தோன்று வளர்ச்சியடைந்து நிலைபெற்றுள்ளது.

ஆதிக்க சாதிச் சங்கங்கள்

கோவில்கள், ஊர்சங்கங்கள், தமிழ்ப் பாடசாலைகள் போன்ற அனைத்து சமூகக்கூறுகளுமே வேளாள மேலாதிக்கத்தின் கோரப்பிடிக்குள் உட்பட்ட சாதிச் சங்கங்களாகவே தொழிற்படுகின்றன. சாதிரீதியான ஒடுக்குமுறை என்பது நேரடியான வடிவமாக இச்சமூகக் கூறுகளுள் காணப்படாவிட்டாலும் அதன் மேற்கூறுகள் அனைத்தும் ஆதிக்கசாதி வெளாளர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதே.

kokuvil_sangilianயாழ்ப்பாணத்தில் வேளாள சாதிகளின் தலிபான்களை உருவாக்கிய கொக்குவில் இந்துக்கல்லூரி, யாழ் இந்துக்கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி போன்ற பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள் வெறும் சாதிச் சங்கங்களாகவே செயற்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த உதிரியானவர்கள் கூட இக்கட்டமைப்பினுள் அனுமதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாகக் கல்விகற்ற பாடசாலைகளின் சங்கங்களை இங்கு காணமுடியாது.

சாதியம் என்பது இந்தியா போன்று வரலாற்று வழிவந்த நிலப்பிரபுத்துவ தொழில் முறைகளின் அடிப்படையில் இலங்கையில் உருவாகவில்லை. இதனால் சாதிய ஒடுக்குமுறை என்பது பல சந்தர்ப்பங்களில் வெளித்தெரியாத சமூகத்தின் ஆழத்தில் புதைந்துகிடக்கும் புண் போன்றே இலங்கையில் காணப்படுகின்றது.

பழைய மாணவர் சங்கங்கள் போன்ற அமைப்புக்கள் சாதிய ஒடுக்குமுறையை நேரடியாக முன்வைப்பதில்லை. பதிலாக அதனை அமைப்புக்களாக நிறுவனமயப்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியினர் பழையமாணவர்களாகக் காணமுடியாத இப்பாடசாலைகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அடுத்த சந்ததியை தமது சாதி எல்லைக்குள் கட்டிவைத்திருப்பதற்கான வைத்திருப்பதற்கான முடிச்சுக்கள். சாதிப் பெயரை உச்சரிக்காத சாதிச் சங்கங்கள்.

புலம்பெயர் நாடுகளில் காணப்படும் இந்துக்கோவில்கள் ஆதிக்க சாதி வேளாளர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. அதன் விழாக்களை ஒழுங்கமைப்பவர்கள், நிர்வாக அமைப்பினர், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அனைவரும் சாதிய அமைப்பின் உச்சத்திலுள்ள வேளார்களே. இவர்கள் சாதியக் கட்டமைப்பைப் புலம்பெயர் நாடுகளில் பேணுவதற்கு தம்மாலான அனைத்தையும் செய்துமுடிக்கின்றனர்.

மாதம் ஒருமுறையாவது தமிழர்கள் தமது ஆதிக்க சாதிகளோடு ஒன்றுகூடி தமது ‘பெறுமானத்தைப்’ பறைசாற்றும் முரசங்களே கோவில்கள். அதன் விழாக்கள். அதனூடாக ஒழுங்கமைக்கப்படும் சமயச் சடங்குகள், விழாக்கள், வைபவங்கள் ஆதிக்க சாதியின் ஒழுங்கமைப்பைப் பாதுகாக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் முளைவிட்டிருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் சாதியக் கட்டமைப்பை பேணுவதற்கான மற்றொரு பிரதான நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. ஆரம்பத்திலிருந்து ஆதிக்கசாதி வேளாளர்களின் கலாச்சார மையங்களாகத் தோற்றம்பெற்ற பாடசாலைகள், அடுத்த சந்ததிக்கு சாதியத்தை அறிமுகப்படுத்தும் தொடர்பாடல் நிறுவனமாகச் செயற்படுகிறது. இங்கு வார இறுதி நாட்களில் ஒன்று கூடும் ஆதிக்க சாதியினர் தமது குழந்தைகளுக்கு தாம்சார்ந்த சாதியினரை அறிமுகம் செய்யும் பொது நிறுவனமாகவே இப்பாடசாலைகள் செய்ற்படுகின்றன.

templeஒவ்வொரு பாடசாலைகளிலும் இந்துக் கலாசார நிகழ்வுகள், சாமி வழிபாடுகள், யாழ்ப்பாணப் பெருமை போன்றன கற்பிக்கப்படுகின்றன. அங்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தும் போட்டில் இல்லங்கைளுக்கு யாழ்ப்பாணப் பாடசாலைகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணித்த வேளாளர்களின் பாடசாலைகளின் பெயர்களையே இந்த இல்லங்கள் காவித்திரிகின்றன.

பிரித்தானியா போன்ற பல் கலாச்சார நாடு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் நாடுகளில் இப்பாடசாலைகளுக்கு அரச நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இவற்றின் நிர்வாகிகள் ஒரு குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்களுமே. நிர்வாகக் குழுத் தெரிவிலிலிருந்து இந்த அமைப்பின் எந்த அங்கத்திலும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத ஆதிக்க சாதி ‘ஜனநாயகம்’ மட்டுமே காணப்படும்.

வன்னிப் படுகொலைகளின் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தோற்றம் பெற்றுள்ள மற்றுமொரு ஆதிக்க சாதி நிறுவனமாக உதவி அமைப்புக்கள் செயற்படுகின்றன. புலம்பெயர் நாடுகளில் சமூகத்தின் மேல்மட்டத்திலிருந்த அவ்வப்போது ஆங்கிலத்தில் உரையாடக்கூடிய நிலப்பிரபுத்துவ சிந்தனை படைத்த நபர்களால் உருவக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கள் தன்னார்வ நிறுவனங்களின் உதவிபெறும் அதே நேரத்தில் விழாக்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்து பணம் திரட்டி வன்னியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகக் கூறுகின்றனர். வடக்குக் கிழக்கு முழுவதும் சுற்றுப் பயணம் செய்யும் நிறுவனங்களும் இதில் அடக்கம்.

இந்த அமைப்புக்களின் நோக்கம், அவர்களின் விழாக்கள், தென்னிந்திய கலாச்சாரக் குப்பைகளைப் பணம் சேர்க்கிறோம் என்று புலம்பெயர் நாடுகளில் இவர்கள் குவிக்கும் ஈனச் செயல் அனைத்தும் மேலும் தெளிவாகப் பேசப்பட வேண்டும்.

சாதியத்தைக் காவிச்செல்லும் விழாக்கள்

தமது அடுத்த சந்ததிக்குச் சாதீயத்தைக் காவிச்செல்லும் மற்றொரு பிரதான ஊடகம் கலாசார விழாக்கள். பூப்புனித நீராட்டுவிழா, கோவில் திருவிழாக்கள், சங்கீத மற்றும் நடன அரங்கேற்றங்கள் போன்ற பெரும் பணச்செலவில் நடத்தப்படும் விழக்கள் ஒன்று கூடலுக்கான அரங்கமாகவும் சாதியத்தைக் காவிச்செல்லும் பிந்தங்கிய கூறுகளாகவும் செயற்படுகின்றன.

poopபெண் குழந்தைக்கு பருவ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது என்பதை தனது சாதிக்காரர்களுக்கு அறிவிப்பதற்காக பெரும் பணச்செலவில் விளம்பரங்களோடு விழாவெடுக்கப்படுகின்றது. சாமத்தியச் சடங்கு அல்லது பூப்புனித நீராட்டுவிழா என்றழைக்கப்படும் இவ்விழா சாதிய அமைப்பினைப் பேணுவதில் அதி முக்கித்துவம் பெற்றுள்ளது. இதனால்தான் இவ்விழா பெரும்பணத்தைத் தின்று தொலைக்கிறது.

மாற்றுச் சாதிகளில் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட இவ்வாறான விழாக்களுக்கு அழைக்கப்படுவதில்லை.

புலிகளின் அரசியல் மீது புலம்பெயர் தமிழர்கள் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்த 90களின் ஆரம்பத்திலிருந்து இந்த ஆதிக்க சாதிச் சங்க அமைப்புக்கள் அனைத்தும் புலிகளின் கூறுகளாகவே தொழிற்பட்டன. புலிகளின் போராட்டத்திற்கு ஆதிக்க சாதியினைச் சார்ந்த நிலப்பிரபுத்து சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட பின் தங்கிய அரசியலைச் செலுத்துவதற்கு இச்சாதிய அமைப்புக்களே பிரதான காரணமாகின. இவ்வாறன அமைப்புக்களால் உள்வாங்கப்படக்கூடிய நிலையிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இராணுவக் குழு முற்றாக அழிக்கப்படுவதற்கும் இந்த அமைப்புக்களின் உச்சத்திலிருந்த குறித்த ஆதிக்க சாதி பழமைவாதிகளும் காரணமானார்கள்.

இன்று காணப்படும் புலம்பெயர் யாழ்ப்பாண சமூகத்தின் பெரும்பகுதி ஆதிக்க சாதிச் சங்களாலும் அவற்றின் அரசியலாலும் ஒழுங்கமைக்கப்பட்ட பின் தங்கிய அழுகிய அருவருப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

தமிழ் இனவாதம்

இந்த ஒழுங்கமைப்பைப் பாதுகாப்பதற்கான தத்துவார்த மேல்பகுதியாக இந்துத்துவம் செயற்படுகின்ற அதே வேளை தமிழ் இனவாதமும் செயலாற்றுகின்றது. ‘ஆண்ட தமிழன்’ போன்ற இனவெறியைத் அடுத்த சந்ததிவரைக்கும் இழுத்துச் செல்லும் யாழ்ப்பாணத் தமிழர்கள் இலங்கை பாசிச அரசுடன் நேரடியாக தொடர்பற்றவர்களாக விம்பத்தைப் புனைந்து கொள்கின்றனர். இதன் மறுபக்கம் முற்றிலும் வேறானது. யாழ்ப்பாணத்தின் அனைத்து இலங்கை அரச கூறுகளோடும் நேரடியானதும் மறைமுகமானதுமான தொடர்புகளைபேணிவரும் இப் புலம்பெயர் அமைப்பின் தலைமைகள் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் வலிமையையும் கொண்டவை.

sri_lanka_genocideஇலங்கை அரசின் பாசிச இனவெறி இராணுவம் ஆட்சி நடத்தும் யாழ்ப்பாணத்தின் அனைத்து ஆதிக்க சாதி நிர்வாகக் கூறுகளோடும் தொடர்புடைய நெருக்கமான வலையமைப்பை இவர்கள் கொண்டுள்ளனர். சிறிய காணித்துண்டை வாங்குவதிலிருந்து உள்ளூர் அரசியலை ஒரு எல்லைவரை தீர்மானிப்பது வரை இவர்களின் ஆதிக்கம் காணப்படுகின்றது.

புலம் பெயர் நாடுகளிலிலோ அன்றி இங்கிருந்து இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் எல்லைவரை இலங்கையிலோ புலம்பெயர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகாரம் காணப்பட்டதில்லை. புலம்பெயர் நாடுகளிலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறை நிறுவவனமாகியிருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு அங்கங்களிலும் அது படர்ந்திருக்கிறது.

தமது சொந்த நலன்கள் மேலெழும் போது இனப்படுகொலை அரசின் கோரமுகம் வேளாள ஆதிக்க சாதிகளின் தலைமைகளுக்குத் தெரிவதில்லை. ‘தேசிய இணையம்’ என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அதிக இனவாதிகள் படிக்கும் வலைத்தளமொன்றில் தனது கொழும்பு வீட்டை மீட்பதற்காக புலம் பெயர் புலிப் பிரமுகர் ராஜபக்ச குடும்பத்தோடு பேச்சு நடத்தியது நியாயம் எனக் கட்டுரை வெளியாகியிருந்தது. சொத்தை இழப்பதற்குப் பதிலாகப் பேச்சு நடத்துவதில் என்ன தவறு என்று இறுமாப்போடு கேடிருந்தது. அதன் பின்னான மாவீரர் தினத்தில் அதே பிரமுகர் முக்கிய ஒழுங்கமைப்பாளரானார்.

தேசியம் என்பது ஆதிக்க சாதியை ஒழுங்மகைக்கும் பிழைப்பு வாதிகளின் ஒரு பக்க முகம். அதன் மறுபக்கத்தில் இலங்கை இனப்படுகொலை அரசுடனும் அதன் ஏனைய கூறுகளோடும் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

இவர்களின் ஆதிக்க சாதி வெறி புலிகள் வாழும் வரை நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. புலிகளின் அழிவின் பின்னர் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்த சாதிய முரண்பாடு புலம் பெயர் நாடுகளில் பிளவுகளை ஆழப்படுத்தியது. புலிகளின் பின்புலமாகச் செயற்பட்ட ஆதிக்க சாதித் தலைமைகள், புலிகளின் அழிவின் பின்னர் மேலோங்கிய சாதிய முரண்பாட்டில் சாதி ஒடுக்குமுறையின் முகவர்களானார்கள்.

புதிய சந்ததியின் மீதான ஒடுக்குமுறையும் இன அழிப்பின் பின்னான சாதிய ஒடுக்குமுறையும் தாழ்த்தப்பட்ட சாதிகள் மத்தியில் விரக்தியையும் வெறுப்புணர்வையும் தோற்றுவித்தது.

இதனைப் புரிந்துகொண்ட பிளவுவாத சக்திகள் அந்த விரக்த்தியின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்துகொண்டனர். வேளாள ஆதிக்க சாதி ஒழுங்கமைப்பின் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டவர்களுக்க் நிகரான இப்பிழவு வாதிகள் ஏகாதிபத்திய நிதியாலும், மகிந்த பாசிச அரசாலும் நேரடியாகக் கையகப்படுத்தப்பட்டவர்கள்.

ஆதிக்க சாதிச் சங்கங்களுக்கு எதிரான தாழ்த்தப்ப்ட்ட சாதிகளின் சங்கங்களாக தோற்றம் பெற்ற இச்சங்கங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதியான தலித்த்தியம், அடையாள அரசியல், பின்நவீனத்துவம் போன்ற சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் தத்துவங்களைப் பற்றிக்கொண்டன.

புலம் பெயர் நாடுகளில் சாதியக் கட்டமைப்பினாலும், இலங்கையில் இனச்சுத்திகரிப்பினாலும் பாதிப்படையாத விரல்விட்டெண்ணக்கூடிய மேல்மத்தியதர வர்க்கம் ஐரோப்பிய அமரிக்க சமூகங்களோடு வர்க்க அடிப்படையிலான தொடர்பைப் பேணிவந்தது. நிலப்பிரபுத்துவ சாதி அமைப்பைக் கடந்து ஐரோப்பிய அதிகாரவர்க்கத்தின் உயரணிகளோடு தம்மை அடையாளப்படுத்தும் இவர்களுக்கு ஆதிக்க சாதி சாதிய அடையாளம் அவசியமானதல்ல. இக்கூட்டத்தின் ஒரு பகுதியினர் தலித் அமைப்புக்கள் என்ற தாழ்த்தப்பட்ட சாதிச் சங்கங்களின் ஆதரவாளர்கள்.

நேரடியான அரச ஆதரவு தாழ்த்தப்பட்ட சாதிச் சங்கங்களின் தலைமை இவர்களிடமே காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சாதியினர் மத்தியிலான விரக்தியையும் வெறுப்பையும் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் இந்த அரசியல் பிழைப்புவாதிகள் இலங்கை இனப்படுகொலை அரசுடன் நேரடியான தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

ஒரு புறத்தில் மனிதகுல அவமானமான ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஏற்கனவே உறுதியான சமூக ஒழுங்கமைப்பினுள் புலம்பெயர் நாடுகளில் சாதியமைப்பைப் பேணும் அதே வேளை ஒடுக்கப்பட்ட சாதிகள் சார்ந்த தலித் கோட்பாட்டை வரித்துக்கொண்ட அமைப்புக்கள் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை போகின்றன. இலங்கை அரசின் அங்கங்களாகச் செயற்படுகின்றன.

தொடரும்..

முதல்பாகம் :

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை