Tag Archives: சபா நாவலன்

மூலதனத்தை வாசித்தல் பகுதி 3 : சபா நாவலன்

இன்று கார்ல் மார்க்சை எதிரிகளாக் கருதியவர்கள் கூட போற்றும் மூலதனம் என்ற ஆய்வு சமூகத்தினுள் அடங்கியிருக்கும் புதிரையும் அதனுள் அடங்கியிருக்கும் முடிச்சையும் அவிழ்ப்பதற்கு இன்றுவரைக்கும் ஒருவரும் செய்யாத பங்களிப்பைச் செய்தது. அவ்வாறான ஒரு ஆய்வு பண்டங்களில் (commodity – ஏனைய தமிழ் மொழிபெயர்ப்புக்களி சரக்கு என்றும் குறிப்பிடப்படுகிறது) இருந்து மிகவும் சலிப்புடையதாக ஆரம்பிக்கிறது. நூலின் முதலாவது பாகத்தை முழுமையாக வாசித்து முடிக்கும் வரை ஏன் பண்டங்களைப் பற்றியே எழுதிக்கொண்டு செல்கிறார் என்பது புரியாத புதிர் போலவே அமையும்.

முதல் பாகம் முழுமை பெற்றதும் உலகத்தின் ஒவ்வோர் அசைவையும் புரிந்துகொள்வதற்கான வெளி ஒன்று கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும். முதல் பாகத்தை கற்று முடிக்காமலேயே கார்ல் மார்க்ஸ் பண்டங்கள் குறித்து மட்டுமே எழுதிய முட்டாள் என்று விமர்சித்தவர்கள் பலர் உண்டு.

இதனை வாசித்துப் புரிந்து கொள்வது இலகுவான ஒன்றல்ல என்று தனது முன்னுரைகளில் குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ் ஏன் பண்டங்களில் இருந்தே ஆரம்பிக்கிறார் என்பதை அவரே ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறார். பண்டங்களை நாங்கள் நாள் தோறும் கொள்வனவு செய்கிறோம். நேற்று நான் வாங்கிய நூல் ஒரு விற்பனைப் பண்டம். அது அறிவுத் தேவைக்கானது. கடந்தவாரம் நான் வாங்கிய உணவுப் பொருட்களும் நுகர்வுப் பண்டம் தான். அது எனது அடிப்படைத் தேவைக்கானது. இதனால் பண்டம் என்பது உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவானது. வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இதனால் அது சிக்கலான முதலாளித்துவ அமைப்பு என்ற புதிரை அவிழ்க்கும் ஆரம்பப் புள்ளியாகிறது.

தமிழரோ, சிங்களவரோ, சீக்கியரோ, மலையாளியோ, ஒடுக்கப்பட்ட சாதியினரோ, பார்ப்பனரோ யாராயிருந்தாலும் பண்டங்களை நுகராமல் – கொள்வனவு செய்யாமல் – வாழமுடியாது. இது அனைவருக்குமான அடிப்படைப் செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது. அனைவருயும் இணைக்கும் ஒன்று.
ஆரம்பத்திலேயே அவர் குறிப்பிடுவது போல அவர் கருத்தில் கொள்வதெல்லாம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை குறித்து மட்டும் தான். சோசலிச உற்பத்தி முறையோ அல்லது ஏனைய சமூகங்களான நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையோ அவர் இங்கு கருத்தில் கொள்ளாதவை.

பண்டங்களிலிருந்து ஆரம்பிக்கும் இந்த ஆய்வில் எந்தப்பண்டம் தொடர்பாக அவர் பேசுகிறார் என்பதையும் ஆரம்பத்திலேயே கூறிவிடுகிறார். அது உனவுத் தேவைக்கான பண்டமாக இருக்கலாம். அல்லது வேறு தேவைக்கானதாகவும் இருக்கலாம். உதாரணமாக கால்பந்தாட்டமோ சினிமாவோ பார்ப்பதற்காக ரிக்கட் வாங்கிக் கொள்கிறோம்.

இங்கு கால்பந்தாட்டம், சினிமா போன்ற களியாட்டங்கள் பண்டங்களே. அவை விற்பனை செய்யப்படுகின்றன. மார்க்சைப் பொறுத்தவரை எவ்வகையான பண்டம் என்பது கருத்தில் குறித்து அவர் துயர்கொள்ளவில்லை. அது எதுவானாலும் சரி, பண்டம் குறித்தான ஆய்வே மேற்கொள்ளப்படுகின்றது.
எடுத்த எடுப்பிலேயே அவர் இந்த மூன்று விடையத்தையும் கூறிவிடுகிறார்.

1. பண்டங்கள் குறித்து ஆராயப் போகிறோம்.

2. முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றியே கருத்தில் கொள்ளப் போகிறோம்.

3. பண்டங்கள் மனிதத் தேவையை ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்கிறது.

முதலாவது பக்கத்தில் முதல், இரண்ட்டம் பராக்களில் இந்த மூன்றும் கூறப்படுகின்றது.

மூன்றாவது பரா ஆரம்பித்த உடனேயே உலகத்தில் எல்லோரையும் இணைக்கும் பண்டங்களின் சிக்கலான பகுதிக்கு மார்க்ஸ் சென்றுவிடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பண்டங்கள் ஏதாவது ஒரு தேவைக்காக எமக்குப் பயன்படுகிறது. உணவுத்தேவை, அறிவுத் தேவை, பொழுதுபோக்குத் தேவை என்ற எதுவாகவும் இருக்கலாம். ஏதோ ஒருவகையில் அது பயன்படுகிறது.

அதனால அதற்குப் பயன்பாட்டு மதிப்பு அல்லது பெறுமானம் என்ற ஒன்று உண்டு. பயன்ப்டுவதால் ஏற்படும் அந்த மதிப்பை அப்பது பெறுமதியை பயன் மதிப்பு(Use value) என்று கூறுகிறார். அதாவது பண்டங்களுக்கு பயன் மதிப்பு என்ற ஒன்று உண்டு என்கிறார். கணணி என்ற பண்டத்தை நாம் கொள்வனவு செய்கிறோம். அது எமக்குப் பயன்படுவதால் அதற்குப் பயன் மதிப்பு என்ற உண்டு. அது பழுதடைந்து இயக்கமற்றுப் போனால் அதன் பயன் மதிப்பு இல்லாமல் போய்விடுகின்றது.

“ஒரு பொருள் எவ்வாறு பயன்படுகிறது என்பதிலிருந்து அதன் பயன் மதிப்பு உருவாகிறது.” என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவதாக, முதலாளித்துவ சமூக அமைப்பு வடிவத்தில் பண்டங்களுக்கு மற்றுமொரு மதிப்பு அல்லது பெறுமானமும் உண்டு என்கிறார். அது பரிவர்த்தை மதிப்பு(Exchange value) என்று இரண்டாவது மிகப்பெரும் பண்டங்களின் இயல்பை முன்வைக்கிறார்.

அதாவது பண்டங்களுக்குப் பயன்மதிப்பு இருக்கவேண்டும் எனபது அடிப்படையானது. பின்னர் முதலாளித்துவ சமூகத்தில் அது இருக்கவேண்டும். அந்த நிலையில் பண்டங்களுக்கு பரிவர்த்தனை மதிப்பு என்ற ஒன்று உண்டு என்கிறார்.

‘நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளப் போகின்ற சமூக வடிவத்தில் -அதாவது முதலாளித்துவ சமூகத்தில்- பண்டங்கள் பரிவர்த்தனை மதிப்பைத் தன்னகத்தே கொண்டனவாகவும் அமைகின்றன’. என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இன்று உலகம் முழுவதும் பண்டங்கள் பரிமாறப்படுகின்றன. பணம் என்கிற அடிப்படை அளவுகோல் காகிதவடிவிலோ அல்லது மின்னியல் வடிவிலோ இந்தப் பரிவர்த்தனையை நடத்துகிறது. இது விரிவடைந்து உலகமயமான பரிவர்த்தனை, உள்ளூர் அளவிலான பரிவர்த்தனை எல்லாமே நடைபெறுகிறது.

ஐக்கிய அமரிக்காவில் 2008 இல் ஆரம்பித்த பொருளாதாச் சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புளோரிடாவின் புற நகர்ப் பகுதிகளில் அரை மில்லியனுக்கு விற்பனையான வீடு ஒன்றின் விலை இப்போது மூன்று லட்டம் தான் மதிப்புடையது. ஆக, இங்கு பரிவர்த்தனை மதிப்பு தேய்வடைந்து விட்டது. அதே வேளை அந்த வீட்டில் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் இருக்கும் வரை அதன் பயன் மதிப்பு தேய்வடையவில்லை.

பரிவர்த்தனை மதிப்பு காலத்திற்கும் இடத்திற்கும் மாறுபடும். அத்தோடு பண்டம் இன்னொரு பண்டத்தோடு பரிமாற்றம் செய்யக்கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே அது பரிவத்தனை மதிப்புடையதாகத் தோன்றும்.

(தொடரும்..)

பினவரும் அடிப்படை கருத்து பகுதி நான்கில் முடிவடையும் முதலாவது அத்தியாத்தில் அடங்கியுள்ளது:
பண்டங்கள் இரண்டு பண்புகளைக் கொண்டன:-
1. பயன் மதிப்பு
2. பரிவர்த்தனை மதிப்பு
3. பரிவர்த்தனை மதிப்பு என்பது பண்டங்களின் மதிப்பை வெளிப்படுத்துகிறது
4. பயன் மதிப்பு இருந்தால் மட்டுமே பண்டங்கள் மதிப்புடையவை ஆகின்றன.

மொழியாக்கம்:

மூலதனம் பாகம் -1 : பண்டமும் பணமும்

அத்தியாயம் -1 : பண்டம்

முதலாளித்துவ உற்பத்திமுறை ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினுடைய செழுமை என்பது பண்டங்களின் பெரும் குவியலாகக் காணப்படுகின்றது. அந்தச் செழுமையின் (wealth) அடிப்படை வடிவமாகப் தனியான பண்டம் தோற்றம் தருகிறது. அதனால் பண்டம் குறித்த பகுப்பாய்வு என்பது நமது விசாரணையின் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.
முதலில் பண்டங்கள் என்பது நமக்குப் புறத்தே உள்ள ஒன்று. தனது இயல்புகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு வகையில் மனிதனின் தேவைகளை நிறைவேற்றுகிற ஒன்று. இந்தத் தேவை இயல்பாகவே உணவுத் தேவையானாலும் சரி, அல்லது ஆடம்பரத்திற்கான தேவையாக இருந்தாலும் சரி எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இந்தத் தேவைகளை அவை எவ்வாறு திருப்திப் படுத்துகிறது என்பது குறித்தும் நாம் கவலையடையவில்லை. அவை வாழ்க்கைத் தேவைகளுக்கான சாதனங்களாக இருக்கலாம் அல்லது உற்பத்தித் தேவைக்கான சாதனக்களாக இருக்கலாம் அவைகுறித்து எமக்குக் கவலையில்லை.
இரும்பு காகிதம் போன்ற ஒவ்வொரு பயனுள்ள பண்டமும் தராதரம் மற்றும் அளவு என்ற இரண்டு நோக்கு நிலையில் இருந்து பார்க்கப்படலாம். அது பல்வேறு பண்புகளின் சேர்க்கையாகும். அதனால் பல்வேறு வழிகளில் பன்படத் தக்கதாகும்.பொருட்களின் வேறுபட்ட பயன்பாடுகளைக் கண்டறிவது வரலாறு செய்யும் வேலையாகும். இந்தப் பயனுள்ள பொருட்களை அளவிடுவதற்கு சமூக அங்கீகாரமுள்ள பொதுவான அளவுகளை நிறுவுவதும் வரலாற்றின் வேலை. இந்த அளவுகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. அவ்வாறு வேறுபட்டவையாக இருப்பதற்கு மூலகாரணம் ஒரு புறத்தில் பொருளின் இயற்கையான வேறுபட்ட தன்மையும் மறுபுறத்தில் வழமையும் ஆகும்.
ஒரு பொருள் எவ்வாறு பயன்படுகிறது என்பதிலிருந்து அதன் பயன் மதிப்பு உருவாகிறது. பயன்பாடு என்பது கற்பனையில் உருவான ஒன்றல்ல. அந்தப் பயன்பாடு பண்டத்தின் பௌதீகப் பண்புகளால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளாதால் பண்டத்திற்கு வெளியே அது இருக்கமுடியாது. இரும்பு, தானியங்கள், வைரம் போன்ற எல்லா பண்டங்களும் இறுதியில் பொருள் (material) சார்ந்தவை என்பதால் அதற்கு பயன் மதிப்பு என்ற ஒன்று உண்டு, அது பயனுடைய ஒன்று.
பயனுள்ள தராதரத்தினைப் ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் உழைப்பின் அளவிலில் பண்டங்களின் பண்பு சார்ந்திருக்கவில்லை. பயன் மதிப்பைக் (அல்லது பயன்படும் பெறுமானத்தை) கையாளும் போது, கணக்கில் இரும்பு, மீட்டர் கணக்கில் துணி, டசின் கணக்கில் கைக்கடிகாரம் போன்ற வரையறுக்கப்பட்ட அளவீடுகளைக் கருதிக் கொள்கிறோம்.
பண்டங்களின் பயன் மதிப்பு என்பது எமக்கு வியாபார அறிவையும் அதே வேளை பண்டங்கள் குறித்த சிறப்பான கற்கைக்கு உரிய அடிப்படையையும் வழங்குகிறது.
பயன்பாட்டிற்கு உட்படுத்துவதால் அல்லது நுகர்வதால் மட்டுமே பயன் மதிப்புக்கள் கிடைக்கின்றன. ஒரு சமூகத்தின் செழுமையின் எந்த வடிவமானாலும் சரி, அவை சமூகத்தின் செழுமைக்கான சாராம்சமாக அமைகின்றன.
நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளப் போகின்ற சமூக வடிவத்தில் அவை பரிவர்த்தனை மதிப்பைத் தன்னகத்தே கொண்டனவாகவும் அமைகின்றன.
முதற் பார்வையில் பரிவர்த்தனை மதிப்பு என்பது அளவுகளுக்கு இடையிலான உறவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப் படுகின்றது. அந்த உறவு என்பது நேரத்திற்கும் இடத்திற்கும் மாறுபடுவதாக அமைகின்றது. பாவனைக்குரிய ஒன்றின் மதிப்பு பாவனைக்குரிய இன்னொன்றின் மதிப்போடு விகிதாசார அடிப்படையில் பரிமாற்றம் செய்யப்படுவதாக அமைகிறது.
ஆக, பரிவர்த்தனை மதிப்பு என்பது தற்செயலானதாகத் தோன்றுவது மட்டுமன்றி, ஒப்பீட்டு முறையிலானதாகவும் அதனால் அது பண்டங்களின் உள்ளார்ந்த மதிப்பாகவும் தோன்றுகிறது. அதாவது, பரிவத்தனை மதிப்பு என்பது உள்ளார்ந்து பிரிக்க முடியாதவாறு பண்டங்களுடன் பிணைக்கப்பட்ட, வார்த்தைகளில் முரண்பாடுகளைக் கொண்டதாகத் தோன்றுகிறது.
இந்த விடையத்தை இன்னும் நெருக்கமாகப் பரிசீலிப்போம்…

——————————————————————————————————————————————–
ஆங்கிலம்:

The wealth of those societies in which the capitalist mode of production prevails, presents itself as \an immense accumulation of commodities,.1 its unit being a single commodity. Our investigation must therefore begin with the analysis of a commodity.
A commodity is, in the first place, an object outside us, a thing that by its properties satisfies human wants of some sort or another. The nature of such wants, whether, for instance, they spring from the stomach or from fancy, makes no difference.2 Neither are we here concerned to know how the object satisfies these wants, whether directly as means of subsistence, or indirectly as means of production.
Every useful thing, as iron, paper, &c., may be looked at from the two points of view of quality and quantity. It is an assemblage of many properties, and may therefore be of use in various ways. To discover the various uses of things is the work of history.3 So also is the establishment of socially-recognized standards of measure for the quantities of these useful objects. The diversity of these measures has its origin partly in the diverse nature of the objects to be measured, partly in convention.
The utility of a thing makes it a use value.4 But this utility is not a thing of air. Being limited by the physical properties of the commodity, it has no existence apart from that commodity. A commodity, such as iron, corn, or a diamond, is therefore, so far as it is a material thing, a use value, something useful. This property of a commodity is independent of the amount of labour required to appropriate its useful qualities. When treating of use value, we always assume to be dealing with definite quantities, such as dozens of watches, yards of linen, or tons of iron. The use values of commodities furnish the material for a special study, that of the commercial knowledge of commodities.5 Use values become a reality only by use or consumption: they also constitute the substance of all wealth, whatever may be the social form of that wealth. In the form of society we are about to consider, they are, in addition, the material depositories of exchange value.
Exchange value, at first sight, presents itself as a quantitative relation, as the proportion in which values in use of one sort are exchanged for those of another sort,6 a relation constantly changing with time and place. Hence exchange value appears to be something accidental and purely relative, and consequently an intrinsic value, i.e., an exchange value that is inseparably connected with, inherent in commodities, seems a contradiction in terms.7 Let us consider the matter a little more closely.
————————————————————————————————————————————————

பிரஞ்சு:

La richesse des sociétés dans lesquelles règne le mode de production capitaliste s’annonce comme une « immense accumulation de marchandises 1 ». L’analyse de la marchandise, forme élémentaire de cette richesse, sera par conséquent le point de départ de nos recherches.

La marchandise est d’abord un objet extérieur, une chose qui par ses propriétés satisfait des besoins humains de n’importe quelle espèce. Que ces besoins aient pour origine l’estomac ou la fantaisie, leur nature ne change rien à l’affaire 2. Il ne s’agit pas non plus ici de savoir comment ces besoins sont satisfaits, soit immédiatement, si l’objet est un moyen de subsistance, soit par une voie détournée, si c’est un moyen de production.

Chaque chose utile, comme le fer, le papier, etc., peut être considérée sous un double point de vue, celui de la qualité et celui de la quantité. Chacune est un ensemble de propriétés diverses et peut, par conséquent, être utile par différents côtés. Découvrir ces côtés divers et, en même temps, les divers usages des choses est une œuvre de l’histoire 3. Telle est la découverte de mesures sociales pour la quantité des choses utiles. La diversité de ces mesures des marchandises a pour origine en partie la nature variée des objets à mesurer, en partie la convention.
L’utilité d’une chose fait de cette chose une valeur d’usage. Mais cette utilité n’a rien de vague et d’indécis. Déterminée par les propriétés du corps de la marchandise, elle n’existe point sans lui. Ce corps lui-même, tel que fer, froment, diamant, etc., est conséquemment une valeur d’usage, et ce n’est pas le plus ou moins de travail qu’il faut à l’homme pour s’approprier les qualités utiles qui lui donne ce caractère. Quand il est question de valeurs d’usage, on sous-entend toujours une quantité déterminée, comme une douzaine de montres, un mètre de toile, une tonne de fer, etc. Les valeurs d’usage des marchandises fournissent le fonds d’un savoir particulier, de la science et de la routine commerciales 5.
Les valeurs d’usage ne se réalisent que dans l’usage ou la consommation. Elles forment la matière de la richesse, quelle que soit la forme sociale de cette richesse. Dans la société que nous avons à examiner, elles sont en même temps les soutiens matériels de la valeur d’échange.
La valeur d’échange apparaît d’abord comme le rapport quantitatif, comme la proportion dans laquelle des valeurs d’usage d’espèce différente s’échangent l’une contre l’autre 6, rapport qui change constamment avec le temps et le lieu. La valeur d’échange semble donc quelque chose d’arbitraire et de purement relatif ; une valeur d’échange intrinsèque, immanente à la marchandise, paraît être, comme dit l’école, une contradictio in adjecto 7. Considérons la chose de plus près.

மூலதனத்தை வாசித்தல் பகுதி 2 : சபா நாவலன்

மூலதனத்தை வாசித்தல் பகுதி 1

மூலதனத்தை வாசித்தல் பகுதி 2 : சபா நாவலன்

கார்ல் மார்க்சின் மூலதனம் என்ற நூலை நிராகரிப்பவர்கள் இன்று இல்லை. எது எவ்வாறாயினும் நூலின் முதலாவது பாகத்தின் ஆரம்பப் பகுதி முழுவதுமே பண்டங்களைப்(commodity) பற்றிப் பேசுவதிலேயே தொலைந்து போகிறது. வாசகர்களுக்கு இது புரியாத புதிர். உலகம் போற்றுகின்ற ஆய்வின் முதல்பகுதிகள் ஏன் இவ்வாறு சோம்பலாக ஆரம்பிக்கிறது என்பதை கார்ல் மார்க்ஸ் அதன் ஆரம்பத்திலேயே கூறினாலும் அதனை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது முதலாம் பாகதில் இரண்டு அத்தியாயங்களை முடித்த பின்னரே ஓரளவு தெளிவாகும்.

இன்று உலக ஒழுங்கு நேட்டோ அணியைப் புதுப்பிக்கும் புதிய வடிவில் உலக மக்கள் மீது திணிக்கப்பட்டு மக்கள் சாரி சாரியாக அழிக்கப்படும் நிலையில், முதலாளித்துவ உற்பத்தி முறையே எங்கும் காணப்படுகிறது. அதன் வடிவங்கள் வேறுபட்டாலும் அடிப்படை ஒன்றாகவே அமைகிறது. முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பப்புள்ளி பண்டங்களே என்கிறார் மார்க்ஸ்.

பண்டம் என்ற மிகச் சிறிய ஒன்றில் ஆரம்பித்து விருட்சமாக வளர்ந்து செல்லும் மிகப்பெரும் அந்த உழைப்பு உலகத்திற்குப் புதிய ஆய்வு முறை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.

மார்க்சிய ஆய்வு முறை என்பதற்கு மூலதனம் என்பது எமக்கு மத்தியிலுள்ள மிகப்பெரும் உதாரணம். பெரும்பாலும் மார்கிசியத்தைப் புரிந்துகொள்ளாதவர்களே அதன் ஆய்வு முறையையும் குறை கூறுகிறார்கள்.

முதலில் இரண்டு வேறுபட்ட தளங்களில் இது ஆரம்பமாகிறது. ஒன்று விசாரணைக்கான முறை என்பது. இரண்டாவது அதன் முடிவுகளை முன்வைப்பது என்பது. இந்த இரண்டுக்கும் இடையில் மார்க்ஸ் முற்றிலும் புதிய அணுகுமுறை ஒன்றைக் கையாள்கிறார். சமூகத்தில் நடக்கும் எமக்கு வெளித் தெரியும் அனைத்தையும் பகுப்பாய்விற்கு உட்படுத்தல் என்பதே இதன் முதல் படி. இதன் பின்னர் சமூகத்தின் ஆழத்தில் காணப்படும் அடிப்படைக் காரணிகளைக் கண்டறிதல்; இறுதியாக சமூகத்தின் மேற்பகுதிக்கு மீண்டு அதற்கான காரணங்களை முன்வைத்தல் என்பது இறுதியான படி நிலையாக அமையும்.

இந்த முறை இயற்கை விஞ்ஞானத்தில் யாருடைய மாற்றுக் கருத்திற்கும் இடமின்றிப் பயன்படுத்தப்படுகின்றது. எமக்கு சுகயினம் ஏற்படும் போது முதலில் அதனை மருத்துவர் அறிந்து கொள்கிறார். அதற்குரிய அடிப்படைக் காரணங்களை அறிந்துகொண்டு சுகயீனத்தின் தன்மையைப் புரிந்து கொள்கிறார்.

இந்த முறையை இலகுபடுத்துவதற்கு சமூகத்தை மேற்கட்டுமானம் மற்றும் அடிக்கோப்பு என இரண்டு பகுதிகளாக மார்க்சியம் வகைப்படுத்துகிறது.

சமூகத்தில் நாம் நாளந்தம் காண்கின்றவற்றிற்கும் அதன் அடிப்படைக் காரணிகளுக்கும் அதாவது மேற்கட்டுமானம் மற்றும் அடிக்கோப்பு ஆகியவற்றிற்கும் இடையேயான தொடர்ச்சியான தொடர்பு காணப்படும். ஒன்று மற்றொன்றைப் பாதிக்கும். இவை இரண்டுமே நிலயானவை அல்ல. ஒன்று மற்றொன்றைப் பாதிக்கும் வகையில் இயங்கிக்கொண்டே இருக்கும்.

மூலதனத்தைப் புரிந்துகொள்வதன் வழியாக கார்ல் மார்க்ஸ் இன் பகுப்பாய்வு முறமையையும் அறிந்து கொள்ளலாம். பெரியாரிலிருந்து அடையாள அரசியல் குறித்துப் பேசும் அத்தனை பேரின் எழுத்துக்களிலும் ஒரு பொதுமைப்பாட்டைக் காணலாம். ஒன்று மற்றொன்றை உருவாக்கும் அதனால் அது அப்படித்தான் என்பார்கள். கார்ல் மார்க்ஸ் ஆய்வுகளை முன்வைக்கும் போது ஒன்று மற்றொன்டோடு எவ்வாறு தொடர்புடையது என்றும் அந்தத் தொடர்புகளிடையே எவ்வாறு இயக்கம் காணப்படுகிறது என்றும் கூறுகிறார்.

இவ்வாறான தொடர்புகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவைகளிடையேயான தொடர்புகளும் இயக்கமும். அவை வெளியே இருந்து உருவாவதோ திணிக்கப்படுவதோ இல்லை. தனியானவை இல்லை. அவை உள்ளகத் தொடர்புகள்(inner relations). வெளியே இருந்து உருவாவதில்லை.
இவ்வாறான பகுப்பாய்வு முறையைப் புரிந்து கொள்வது மூலதனத்தைப் புரிந்து கொள்வதை இலகுவாக்கும்.

மூலதனம் பாகம் -1 : பண்டமும் பணமும்

அத்தியாயம் -1 : பண்டம்

முதலாளித்துவ உற்பத்திமுறை ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினுடைய செழுமை என்பது பண்டங்களின் பெரும் குவியலாகக் காணப்படுகின்றது. அந்தச் செழுமையின் (wealth) அடிப்படை வடிவமாகப் தனியான பண்டம் தோற்றம் தருகிறது. அதனால் பண்டம் குறித்த பகுப்பாய்வு என்பது நமது விசாரணையின் ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.

——————————————————————————————————————-

எனது குறிப்பு: முதல் பத்தியிலேயே கார்ல் மார்க்ஸ் ஒன்றைத் தெளிவாக்ச் சொல்கிறார். இனிவரும் பகுதிகளில் அவர் பகுத்தாராயப் போவதெல்லாம் முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறை என்பதே. 

இதற்கும் மேல் பண்டம் என்பது நமது நாளந்தத் தேவை. உணவுத் தேவைக்காகப் பண்டங்களை கொள்வனவு செய்கிறோம். உடை என்ற பண்டத்தைக் அத்தியாவசியமானதாக வாங்கிக்கொள்கிறோம்.

சினிமா என்ற பண்டம் மனிதனின் பொழுது போக்குச் சாதனமாக உருவாகியது. அங்கு கவர்ச்சியாக உடையணியும் பெண்கள் பாலியல் பண்டங்களாக விற்பனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஆக, மனிதனின் பல்வேறு தேவைகளை பூர்த்தியாக்கும் பண்டங்கள் அனைவருக்கும் பொதுக் காரணியாக அமைகிறது. இந்த உலகம் முழுவதுமே பண்டங்களின் தொகுப்பாகக் காட்சி தருகிறது.

இங்கு இன்னொரு முக்கியமான விடயமாம கார்ல் மார்க்சின் மொழியைக் காணலாம். நாம் ஒன்றைக் காணும் பொது இது இப்படித்தான் என்ற முடிந்த முடிபாக எமக்கு முன்னால் தெரிகின்ற அனைத்தையும் முன்வைக்கிறோம். அதன் மாற்றத்தை அல்லது இயக்கத்தைக் கருதுவதில்லை. மார்கிசின் மொழியில் ‘பண்டம் தோற்றம் தருகிறது’ என்று குறிப்பிடப்படுகிறது. தோற்றம் தருகிறது என்பதன் உள்ளர்த்தம் முற்றிலும் வேறானது. நாளை அது வேறு ஒன்றாக மாறலாம் என்பதே அது.

—————————————————————————————————
ஆங்கில மூலம்: The wealth of those societies, in which the capitalist mode of production reigns, presents itself as an “immense heap of commodities.”
The single commodity appears as the elementary form of this wealth. The analysis of the commodity will there-fore be the starting point of our investigation.

பிரஞ்சு மூலம்: La richesse des sociétés dans lesquelles règne le mode de production capitaliste s’annonce comme une « immense accumulation de marchandises . L’analyse de la marchandise, forme élémentaire de cette richesse, sera par conséquent le point de départ de nos recherches.
தொடரும்..

மூலதனத்தை வாசித்தல் பகுதி 1

மூலதனத்தை வாசித்தல் பகுதி 1 : சபா நாவலன்

பொருளாதார நெருக்கடி உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் மக்களை அழித்துக் கொண்டிருக்கின்றது. அழிக்கும் ஒரு சிறிய கூட்டமும், அழிக்கப்படுகின்ற இன்னொரு பகுதி மக்களுமாக உலகம் தெளிவாக இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுக்கொண்டிக்கின்றது. ஒடுக்கப்படுவோர் இப்போது அழிக்கப்பட வேண்டியவர்களாக சமூகப் பொதுப்புத்தி கட்டமைக்கப்படுகின்றது. புதிய அணி சேர்க்கைகள், அதிகாரவர்க்கத்தின் புதிய தந்திரோபாயங்கள், சமூகத்தைக் கையாள்வதற்கான அவர்களின் அழிவு அரசியல் எல்லாம் உலகம் தழுவிய மக்கள் மீதான யுத்தம் ஆரம்பிக்கப்படுவிட்டதை உணர்த்துகிறது.

முள்ளிவாய்க்காலில் மூன்றே நாட்களில் ஐம்பாதயிரம் மக்கள் துவம்சம் செய்யப்பட்டது குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் அதே கணத்தில் இன்னொரு அழிப்பு உலகின் மறு மூலையில் ஆரம்பிக்கப்படுகிறது.

இவை எல்லாம் தெளிவாகத் திட்டமிடப்பட்ட அழிவு அரசியல் ஒன்றினூடாக அதிகாரவர்க்கம் நிறைவேற்றுகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிறுபான்மையான இந்த அதிகார வர்க்கம் கட்டமைக்கின்ற புதிய அழிவு அரசியலுக்கு சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பலியாகின்ற உப கூறுகளைக் காண்கின்றோம். இவர்களின் திட்டமிடலைப் புரிந்து கொள்ளாமல் அழிவை எதிர்கொள்வது சாத்தியமற்றது.

இதற்கு எதிரான தெளிவான அரசியல் முன்வைக்கப்படுவதும் அதனைத் திட்டமிடுவதும், இதனை எதிர்கொள்வதற்கு அவசியமானதாகின்றது. ஒரு புறத்தில் தமது வியாபார இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சாரிசாரியாகக் கொலைகளைக் கூட நிறைவேற்றத் தயாரான அதிகார வர்க்கம், மறுபுறத்தில் பெரும்பான்மையாகப் பலம் மிக்க ஆனால் அரசியல் வழிமுறை இன்றிப் பலவீனமான மக்கள் என்ற தெளிவான வேறுப்பாட்டைக் காண்கிறோம்..

இவ்வாறான ஒரு கடந்துபோன சூழலிலேயே கார்ல் மார்க்ஸ் உலகப் புகழ் பெற்ற நூலான மூலதனத்தை எழுதினார்.

“நிதி முதலாளித்துவம் ஒவ்வொரு கோணத்திலும் இருந்து அடிவாங்கிக்கொண்டிருக்கின்றது இந்தக் கணத்தில் கார்ல் மார்க்ஸ் மகிழ்ச்சியடைந்திருப்பார்” என்று பிரித்தானியப் பத்திரிகை கார்டியன் அமரிக்காவில் பொருளாதாரம் 2008ம் ஆண்டில் அடிவாங்க ஆரம்பித்த போது தலையங்கம் எழுதியிருந்தது. “It is a moment Karl Marx would have relished. From every angle financial capitalism is taking a battering” (The Guardian).

“கார்ல் மார்க்ஸ் மிகச் சரியாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அபாயம் குறித்து ஆராய்ந்திருக்கிறார்” என்று இரண்டு வருடங்களின் முன்பதாக குறிப்பிட்டது வேறு யாருமல்ல. கன்டபரி கிறிஸ்தவ பிரதான மதகுரு ரோவன் வில்லியம்ஸ். மார்க்ஸை கிறீஸ்தவ மத நிறுவனங்கள் 20ம் நூற்றாண்டின் ஆபத்தான பிசாசு என வர்ணித்து 150 ஆண்டுகளின் பின்னர் தவிர்க்க முடியாமல் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் இது.

கடந்தவாரம் தோலிவியடைந்த பிரஞ்சு அதிபர் நிகோலா சார்கோசி என்ற அடிப்படைவாத வலது சாரி கார்ல்மார்க்சின் மூலதனம் நூலை படித்துக்கொண்டிருப்பது போன்ற படத்தை வெளியிட அனுமதி வழங்கினார். ஜேர்மனிய நிதி அமைச்சர் பியேர் ஸ்ரேன்புரூக் கால்ர் மார்க்ஸ் மறுபடி வந்துவிட்டார் என வருத்தப்பட்டுக்கொண்டார். உலகத்தில் வர்த்தக நிறுவனங்கள் எங்கெல்லாம் கொள்ளையிடலாம் எனத் தேடிக்கொண்டிருந்த பொருளியல் வல்லுனர்கள் கார்ல் மார்க்ஸ் ஐப் படித்திருந்தால் இன்றைய உலகத்தை பல வருடங்களின் முன்னமே புரிந்து கொண்டிருப்போம் என்கிறார்கள்.

நியூ யோர்க் ரைம்ஸ் கால் மார்க்சை மறுபடி இழுத்துவந்து அறிமுகப்படுத்துகிறது. உலகின் மேட்டுக்குடி ஊடகங்கள் எல்லாம் கார்ல் மார்க்ஸ் சொன்னதெல்லாம் சரி என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருந்தன.

ஜேர்மனியில் முன்னணி கல்வித்துறை வெளியீட்டாளர்களான டியெட்ஸ் வேஹ்ர்லாக் நிறுவனம் 2008 ஆம் ஆண்டில் அதிக விற்பனையான நூல் கார்ல் மார்க்சின் மூலதனம் என்று கூறுகிறது.

இவை அனைத்துக்கும் மத்தியில் மார்க்சியம் குறித்த வெறுப்பும் அது குறித்த தவறான பார்வைகளும் மூன்றாம் பலர் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் உலக நாடுகளில் அதிலும் போரையும் மனித அழிவையும் கடந்துசென்ற இலங்கை போன்ற நாடுகளின் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மத்தியில் மார்க்சியம் குறித்த வெறுப்புணர்வு திட்டமிட்டே விதைக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்டுக்களாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்ற கடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் மார்க்சியத்தின் உள்ளடக்கத்தை முற்றிலுமாக மாற்றத்திற்கு உள்ளாக்கிவிடுவதுண்டு.

இலங்கையில், தேசிய விடுதலைப் போராட்டம் “களைகட்டியிருந்த” 80 களின் ஆரம்பப் பகுதிகளில் மூலதனத்தை அதன் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளாமலே சோகமாக வாசித்துத் தொலைத்திருக்கிறோம். உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிவாரணியக – அதிலும் பெரிய மருந்துப்பொட்டலமாக – மூலதனத்தை கேள்விப்பட்டிருந்தோம். மிகவும் அரிதாகவே அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அப்போதெல்லாம் ஐம்பதிற்கு மேற்பட்ட விடுதலை இயக்கங்கள் முளைவிட்டிருந்தன. இன்றைய தன்னார்வ நிறுவனங்களைப் போல. ஈழப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)என்பதும் அவற்றுள் ஒன்று. அதன் தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட பாலசுப்பிரமணியம் என்பவரை அப்போது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சிவப்பு நிறத் தொப்பியும் இராணுவ உடையும் அணிந்து, சிறிய ரக இயந்திரத் துப்பாகியோடு அவர் தன்னைப் படம் பிடித்து அதனை ஒரு நூலின் அட்டைப்படமாக்கியிருந்தார். அந்த நூல் தான் ஈழ மார்க்சிஸ்டுக்களின் கொள்கைப் பிரகடனம் என்றார். மூலதனத்தை முற்றாகப் படித்து “ஞானம் பெற்றே” அந்த நூலை எழுதியதாக வேறு சொல்லிவைத்தார். தாம் தான் முதலில் கொம்யூனிச ஈழம் பற்றிப் பேசியதால் தம்மைக் கடந்தே எல்லா இயக்கமும் போக வேண்டி வரும் என்றார்.

மறு நாளே கோவில் ஒன்றின் முன்னால் தன்னுடன் ஆறுதலாகப் பேசுவதற்கு நாள் குறித்துத் தந்திருந்தார். மூலதனம் படிக்கும் ஆர்வத்தோடு தலங்காவற் பிள்ளையார் கோவிலுக்கு அவரைச் சந்திக்கச் சென்ற போது ஒரு வாகனத்தினுள் சில பெண்களைக் காண்பித்து தமது தோழர்கள் என்றார். ஆனையிறவு முகாமை அடித்துத் தகர்த்துவிட்டு மூலதனத்தில் எழுதியவற்றை பிரயோகித்து கம்யூனிச ஈழம் கட்டப் பொவொவதாகச் சொன்னார். மூலதம் பேசப்படவில்லை. சில காலங்களில் அவரது இயக்கத்திலிருந்த பெண்கள் கொடுமைப்படுத்தப் படுவதாக ஏனைய இயக்கங்களை நோக்கி ஓடிவந்தது எனக்குத் தெரியும்.

பாலசுப்பிரமணியம் இப்போது எங்கே என எனக்குத் தெரியாது. அவர் தோன்றிய காலத்தில் அவரைவிடப் பெரிய வியாபாரிகளால் விழுங்கப்பட்டுவிட்டார். ஆனால் இப்போது பல பாலசுப்பிரமணியங்கள் அழுக்கு மேடுகளிலிருந்து புழுக்கள் போல நெளிந்து வருகிறார்கள். இவர்கள் எதிர் கொள்ளப்பட வேண்டிய அளவிற்கு இன்னும் ஆபத்தானவர்களாக வளரவில்லை. ஆனல் மார்கிசியத்தின் அடிப்படைகளாவது சொல்லப்படாவிட்டால் ஏகாதிபத்தியங்களின் பாவனைப் பொருளாக பாலசுப்பிரமணியங்கள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

பாலசுப்பிரமணியத்தோடு மூலதனத்தை வாசித்தலுக்கு ஏற்பட்ட தோல்வியின் பின்னர், 80 களின் இறுதியில் அதனை மறுவாசிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

இன்னனும் அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. 90 களின் ஆரம்பத்தில் பிரஞ்சுப் பல்கலைக் கழத்தில் கணிதம் படித்துக்கொண்டிருந்த போது, பல்கலைக்கழகப் படிப்பகத்தில் தற்செயலாக பூரியரின் நூல் ஒன்றைக் காணக் கிடைத்தது. கணிதத்தில் பிரபலாமன பூரியர் தொடரை எழுதியவரின் நூல் என்று தவறாகப் புரிந்து கொண்டு வாசித்தால் கற்பனாவாத சோசலிசம் குறித்து எழுதிய சார்ள்ஸ் பூரியரின் நூல் நூல் என்ற அறிந்துகொள்ள நேரமெடுக்கவில்லை. பிரஞ்சு மொழியில் பல பக்கங்கள் முடியும் வரை படித்துமுடித்த நூல் என்றவகையில் நினைவில் நிற்பது மட்டுமல்ல பூரியர் மற்றும் புருதோன் குறித்து மார்க்ஸ் எழுதியவை இன்னொரு கோணத்தில் நினைவுக்கு வந்தன.
அவ்வப்பொது மூலதனத்தைப் பிரஞ்சு மொழியில் படிக்க முனைந்தும் புரிதல் கடினமானதகவே அமைந்தது. சில பாகங்களை வேறொரு கோணத்தில் அறிந்துகொள்ள முடிந்தது.

சில வருடங்களின் முன்னர் டேவிட் ஹார்வியின் “மூலதனத்தை வாசித்தல்” விரிவுரைகளைக் கேட்ட போது, மூலதனம் என்ற மனித குலத்தின் பொக்கிசத்தினுள் பொதிந்திருந்தவற்றை ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது. பின்னர் தமிழில் மூலதனத்தை வாசித்த போது 80 களில் இருந்த நிலையில் நான் இருக்கவில்லை.

ஆக, மூலதனம் குறித்த வாசிப்பையும் புரிதலையும் முழுமையாக முன்வைக்கும் முயற்சியே இது.

சமூகப் பற்றுள்ள அனைவரும் தவறுகளை விமர்சிக்கவும் சரியானவற்றைச் செழுமைப்படுத்தவும் இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மார்க்ஸ் தான் எழுதத் திட்டமிட்டிருந்தவற்றுள் எட்டில் ஒரு பகுதியையாவது எழுதி முடிக்க இயலவில்லை என்று பேராசிரியர் டேவிட் ஹார்வி கூறுகிறார். அந்தப் பகுதி மட்டுமே உலகின் இன்றை பல சிக்கல்களை ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னமே எதிர்வு கூறியுள்ளது என்பது தான் அதன் சிறப்பு.

-முதலாளித்துவ சமூக அமைப்பு.

-வர்க்கங்கள், உழைப்புசக்தி,உற்பத்தி

-பணச்ச்சுற்று

-உற்பத்தித் திறனற்ற வர்க்கம்.

-தனியார் மயமாக்கம்.

-கடன் பொறிமுறை

-அரசு.

-உழைப்புப் பிரிவினை

– சர்வதேச உழைப்புப் பிரிவினை.

– பரிமாற்றம்.

– வரி

– அரச கடன்.

– பொதுத்துறை கடன்.

– காலனிகள்.

– உலகச் சந்தையும் நெருக்கடியும்.

– ஏற்றுமதியும் இறக்குமதியும்

போன்ற விடயங்களை ஆராயப் போவதாக கார்ல் மார்க்ஸ் மூலதனத்தை எழுத ஆரம்பிக்கிறார்.

தனது வாழ்வின் நாற்பது வருடங்களை முழுமையாக மூலதனத்தை எழுதுவதற்காக அர்பணித்துள்ள கார்மார்க்ஸ் மூலதனத்தின் வறுமையே கொன்று போட்டது.

கார்ல் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த அத்தனை விடயங்களும் இன்னமும் யாராலும் முழுமையாக முடித்துவைக்கப்படவில்லை. கார்ல்மார்க்சின் மூலதனத்தைப் புரிந்துகொள்ள முயற்சிபவர்களே அருகிப்போயிருந்த சூழல் மாற்றமடைகிறது நம்பிக்கை தருவதாக உள்ளது.
திரிபுகளையும் அழிவுகளையும், சரணடைவுகளுக்கும் விட்டுக்கொடுப்புக்களுக்கும் அப்பால் முன்வந்து எதிர்கொள்ள புதிய முன்னேறிய சமூகப்பிரிவை கடந்த பத்தாண்டுகளின் உலக நெருக்கடி உருவாக்கியுள்ளது.

மூலதனத்தின் முதற்பாகத்தை விளங்கிக்கொள்வதே கடினமானது. ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று கூட புரிந்துகொள்ளக் கடினமானது. உற்பத்திப் பண்டம் குறித்தே முதல் பாகம் முழுவதும் பேசப்படுகிறது. தனது பிரஞ்சுப் பதிப்பின் முன்னுரையில் கார்ல்மார்க்ஸ் இது குறித்துக் கூறியுள்ளார்.
பிரஞ்சுப் பதிப்பைத் தொடராக வெளியட பதிப்பகத்தார் தீர்மானித்த போதே கார்ல் மார்க்ஸ் அதற்கான முன்னுரையை எழுதுகிறார். இதுவரை பொருளாதர ஆய்வுகளில் பயன்படுத்தாத பகுப்பாய்வு முறை பிரயோகிக்கப்படாமையால் ஆரம்பப் பகுதிகள் புரிந்து கொள்ளக் கடினமானவையாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார். ஆக, ஆரம்பப் பகுதிகளைப் படித்துவிட்டு நூலையே நிராகரிக்கின்ற தன்மை ஏற்படும் என எச்சரிக்கிறார்.
மூலதனத்தை மறு வாசிப்புச் செய்தல் குறித்த இந்தத் தொடரை எழுத முற்பட்ட போது ஆரம்பப் பகுதிகளை நிராகரிக்க முடியாதாயினும் இலகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை உருவானது.

மார்க்சிச ஆய்வு முறை குறித்த புரிதல் வாசிப்பதற்கு முன்னமே ஏற்பட்டிருந்தால் வாசிப்பு இலகுவானதாகும்.

ஆக, அடுத்த பகுதியின் ஆரம்பத்தில் மார்கசிய ஆய்வு முறை குறித்தும் அதன் திரிபுகள் குறித்தும் புரிதலில் இருந்து மூலதனதை வாசித்தல் குறித்து விரிவாக்கலாம் என நம்புகிறேன்..

தொடரும்……