Tag Archives: உலகச் செய்தி

முதன்முறையாக இந்தியாவைப் புரட்டிப் போட்டது மக்கள் சக்தி; பெப்சி, கொக்கக்கோலா விற்பனை மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன!

இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பெரு வர்த்தக நிறுவனங்களான பெப்சி மற்றும் கொக்கக்கோலா குளிர்பானங்கள் மக்களின் பலத்த எதிர்ப்பினால் விற்பiனைச் சரிவைச் சந்தித்துள்ளன.

இதற்கான எதிர்ப்பு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்கவேண்டுமெனப் போராடிய பீட்டா அமைப்புக்கெதிராக தமிழக இளைஞர்கள், பெண்கள் என தமிழகமே திரண்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

ஜல்லிக்கட்டினால் பன்னாட்டு நிறுவனங்கள் மீது மக்களுக்கு எழுந்த கோபத்தினால் ஜல்லிக்கட்டு போராட்டம் நிறைவுற்றதும், தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கொக்கக்கோலா போன்ற குளிர்பானங்களை அருந்துவதில்லையெனவும், அதற்குப் பதிலாக உள்நாட்டில் மக்களால் தயாரிக்கப்படும் பழங்களில் தயாரிக்கப்படும் பானங்களையே அருந்துவதாகவும் மக்கள் முடிவெடுத்தனர்.

மக்களின் இம்முடிவை அடுத்து தமிழ் நாட்டு வணிகர் சங்கங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களான பெப்சி, கொக்கக்கோலா குளிர்பானங்களை தாம் விற்பனை செய்யப்போவதில்லையெனவும் அறிவித்தனர்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராக எழுந்த மக்களின் கோப அலையானது, மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது. இதனையடுத்து பெப்சி, கொக்கக்கோலா நிறுவனங்களின் விற்பனையானது 5.3 வீதமாகச் சரியத் தொடங்கியுள்ளது.

அத்துடன், கர்நாடகாவில் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கொக்கக்கோலா நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அவ்வாறே ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாவட்டங்களிலும் மூடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கெதிராக எழுந்த மக்களின் கோபமானது, தற்போது அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்குத் தூண்டியுள்ளது

காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? : இதயச்சந்திரன்

port_in_hampanthiddaமுன்னாள் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் றூட் அவர்கள் ,கடந்த மாதம் வெளியாகிய அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் சீன-அமெரிக்க எதிர்கால உறவு குறித்து கட்டுரை ஒன்றினை வரைந்துள்ளார்.
அதில் சீனாவின் புதிய அதிபர் சி சின்பிங் உடன் ,ஆசியாவின் மூலோபாய ஸ்திரநிலைமை (Strategic stability ) குறித்த பொதுவான இணக்கப்பாட்டினை நோக்கி அமெரிக்காவால் நகர முடியுமென்கிற வகையில் அவரின் செய்தி அமைந்திருந்தது.

இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் உருவான யப்பானிய இராணுவமயம், பின்னர் சோவியத் யூனியனிற்கு மாற்றீடான மூலோபாய நகர்வுகள், இதன் நீட்சியாக யப்பான் மற்றும் தென் கொரியாவில் நிலை கொள்ளல் போன்றவற்றின் ஊடாக அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டாலும் , கிழக்கு மற்றும் தென் சீனக்கடற் பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை மிகவும் சிக்கலானது என்று கெவின் றூட் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
இருப்பினும் கிழக்கு ஆசியா போலல்லாது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவினுடைய மூலோபாய திட்டங்கள் வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும் .

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ,அதன் சீனாவிற்கான கனிமவள ஏற்றுமதி பொருண்மியரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆகவே அவுஸ்திரேலியாவின் சீனாவுடனான பொருளாதார நலன் சார்ந்த உறவு, அமெரிக்க -சீன மூலோபாய இணக்கப்பாட்டிலும், அவற்றிடையே உருவாகும் முரண் நிலையற்ற போக்கிலுமே தங்கியுள்ளது. இதனை கெவின் ரூட் ஆழமாகப் புரிந்து வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, சீனாவுடன் முழுமையான இருதரப்பு பொருளாதார உடன்படிக்கையை மேற்கொண்டுள்ள தைவானிற்கும், பரஸ்பரம் முதலீடுகளை குவித்துள்ள தென் கொரியாவிற்கும் இது பொருந்தும்.

ஆனாலும் ஆசியாவில் , அமெரிக்க நட்பு வட்டத்துள் வாழ்ந்து கொண்டிருக்கும் பல நாடுகள், உலகின் இரண்டாவது பொருண்மிய பலவானாகவிருக்கும் சீனாவோடு பலவீனமான இராஜரீக தொடர்பாடல்களைக் கொண்டிருந்தாலும், சந்தைப் பொருளாதார களத்தில் நெருக்கமான உறவோடுதான் இருக்கின்றன.

2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியினால் ,ஐரோப்பாவில் பல பாதிப்புகள் உருவாகின. இதன் எதிர்வினையாக அமெரிக்க ஆதரவு ஆசிய நாடுகளின் ஏற்றுமதியில் பின்னடைவுகள் ஏற்பட்டன. கையிருப்பிலுள்ள தங்கத்தை விற்று உள்நாட்டு -வெளிநாட்டுக் கடன்களை அடைக்க வேன்டிய இக்கட்டான நிலைக்கு சைப்பிரஸ் தள்ளப்பட்டிருப்பதை இப்போது காண்கிறோம்.

மேற்குலகின் பொருளாதாரத் தேக்கநிலை, சீனாவின் வளர்ச்சி வீதத்தை 7.6 ஆகக் குறைத்துள்ளது. தங்கத்தை விற்றுப் பிழைக்க வேண்டிய அளவிற்கு ஜப்பானும் தடுமாறுகிறது.

இந்நிலையில், சீனாவின் வளர்ச்சி ஆபத்தானதல்ல, அதுவொரு அமைதியான எழுச்சி என்கிற விவாதங்களில் இதுவரை ஈடுபட்டோரை ,கடந்த மூன்று மாத கால சீனாவின் பொருண்மியப் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

சீன பொருண்மியக் கட்டமைப்பில் சடுதியான மாறுதல்களைச் செய்த டெங் சியாவோபிங்கின் பிரபல்யமான வாசகமான, ‘ உனது பலத்தை மறைத்திரு. காலத்திற்காகக் காத்திரு ‘என்பதுகூட ,சந்தைப் பொருளாதாரத்தின் பலம் சந்தைகளோடு சார்புடையது என்பதனை நிராகரித்துவிட முடியாது.

திறைசேரியில் வைத்திருக்கும் ட்ரில்லியன் கணக்கான வெளிநாட்டு நாணயக் கையிருப்பா தனது பலமென்று சீனா நினைக்கிறது?. அல்லது மேற்குலகின் ஆதிக்கத்தில் இருக்கும் சர்வதேச நிதிக் கட்டமைப்புக்களுக்கு மாற்றீடாக ‘பிரிக்ஸ்’ (பிரிக்ஸ்) மூலம் புதிய நிதியியல் நிறுவனங்களை உருவாக்கும்வரை , அதற்கான காலத்திற்காகக் காத்திருக்கப்போகிறதா? என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

அதேவேளை இலங்கை குறித்தான சீனாவின் அணுகுமுறையில், இந்த காலத்திற்காகக் காத்திருக்கும் கொள்கை,எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது என்பதனை உற்று நோக்க வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி விவகாரம் ,உலக வல்லரசுகள் மட்டத்தில் ‘முத்துமாலைத் திட்டம்’ என்று பெரிதாகப் பேசப்படும் அதேவேளை, அரச இயந்திரத்தின் முக்கிய காப்பரணான படைத்துறையோடு சீனா கொண்டுள்ள நெருக்கமான செயற்பாட்டு மூலோபாய உறவு குறித்து அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது.

விடுதலைப் புலிகள் உடனான இறுதிப்போரில் வழங்கிய பாரிய படைக்கல உதவிகள், பூநகரி படைத்தள விரிவாக்கம், வன்னியில் இராணுவ குடியிருப்பு நிர்மாணம் என்பவற்றோடு தற்போது படைத்துறைக்கான பல்கலைக்கழக நிர்மாணிப்பிலும் சீனா ஈடுபடுகிறது.

உள்ளூரில் திரட்டப்படும் 202 மில்லியன் டொலர் நிதியில், 1986 இல் தரமுயர்த்தப்பட்ட கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் (KDU), போதனா வைத்தியசாலை ஒன்று உருவாக்கப்படுகிறது.

704 படுக்கைகளைக் கொண்ட இப்போதனா வைத்தியசாலை கட்டும் ஒப்பந்தத்தில், பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிசும், சீன நிறுவனமொன்றின் உபதலைவர் வாங் சிங்கே வும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராஜபக்ச முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

படைத்துறைக்கான சீனாவின் உதவும்கரங்கள் வைத்தியசாலைவரை நீண்டு செல்ல, சென்மதிநிலுவை(balance of payment) குறித்து என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் அரசு, ஜி.எஸ்.பி.பிளஸ் (GSP+) வரிச் சலுகையை சீனாவிடமிருந்து பெற முடியுமாவென்று எதிர்பார்க்கின்றது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி.பிளஸ் தடையால் பல ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அதில் முதலீடு செய்த பல கம்பனிகள் வங்காளதேசத்தில் குடிபுகுந்து விட்டன. மியன்மாரிலும் புதிய உற்பத்திக் களங்கள் விரைவில் திறக்கப்படுமென தெரிய வருகிறது.

தேயிலை சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ஈரான் மீதான அமெரிக்கத் தடை, வெளிநாட்டில் பணி புரிவோர் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சரிவு என்பன நாட்டின் பொருளாதாரத்தில் பாரியளவில் தாக்கங்களை ஏற்படுத்துவதால், மாற்றுவழிகளை தேட முயற்சிக்கிறது அரசு.

வருடாவருடம் அமெரிக்கா வழங்கும் நன்கொடைத் தொகையின் அளவு , இந்த வருடம் 20 சதவீதத்தால் குறைக்கப்படலாம் என்று செய்திகள் உலா வரும் நிலையில் ,இலங்கை அதிபர் விரைவில் சீனாவிற்குப் பயணம் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.

உறுப்பினர்களின் நுண்ணிய தகவல்களைத் திரட்டும் பேஸ்புக் நிறுவனம்

Facebook_like_thumbமுக நூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ் புக்கிற்கும் -face book-அமரிக்க மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. பேஸ் புக் நிறுவனம் மேலதிகமான தரவுகளை அதன் உறுப்பினர்கள் தொடர்பாகச் சேகரிக்க ஆரம்பித்துள்ளது. Datalogix என்ற நிறுவனத்துடன் தரவுகளைச் சேகரிக்கும் நோக்கில் பேஸ்புக் பங்குதாரதாக இருந்து வந்தது. இந்த வருட ஆரம்பத்தில் மேலும் சில தரவு தரகர்களிடம் (data brokers) தாம் தகவல்களைச் சேகரிக்கப் போவதாக பேஸ் புக் அறிவித்தது.

பேஸ் புக் நிறுவனத்தின் பேச்சாளரான எலிசபத் டயானா, தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கம் விளம்பரங்களுக்காகவே என்கிறார். விளம்பரதாரர்களின் விளம்பரங்களை தொடர்புடைய நபர்களிற்கு வழங்குவதற்காகவே இத்தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன என்றார்.

பேஸ் புக்கில் பெயர், பிறந்த திகதி, வசிப்பிடம், நண்பர்கள், ஆர்வம், பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஏனைய நிறுவனங்களிடமிருந்து பெறும் தரவுகளோடு இணைத்து உறுப்பினர்களின் தரவுகளை முழுமையாக்குவதே நோக்கம் என டயானா தெரிவிக்கிறார்.

சில்லரை வணிக நிறுவனங்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து விற்பனை செய்யும் நிறுவனமான Datalogix என்பதைத் தவிர Acxiom Corp, Ark., Epsilon , BlueKai Inc. என்ற மூன்று முக்கிய நிறுவனங்களுடன் பேஸ் புக் தகவல்களைத் திரட்டும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக்கின் நடவடிக்கைகள் குறித்து பல உரிமை நிறுவனங்கள் ‘கவலை’ தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் ஆர்வலர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான கருவியாக பேஸ்புக் பயன்படுத்தப்படுகின்றது.

உலகின் மின்னியல் உளவு நிறுவனம் போன்று செயற்படும் பேஸ்புக் நிறுவனத்தில் இப்போது ஈழப் போராட்டமும் நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத்தின் அவலச் சூழலிலிருந்து பேஸ்புக் புகழ்பாடும் பாடல் ஒன்று வெளியாகியிருந்தது.

பெப்பிலியான வர்த்தக நிலையம் மீதான தாக்குதல்! :முஸ்லிம் இடதுசாரி முன்னணி

pothupalasenaபெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார்.
பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மத வழிபாட்டு மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாசாரத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது திருத்தவோ யாரையும் அனுமதிக்க கூடாது.

எமது மதத்தையும், கலாசாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் பெருமகனுக்கும் உரிய கடமையாகும்.

இந்த நாட்டில் சிறுபான்மை என்றொரு சமூகம் இருக்க கூடாது. அப்படி இருந்தாலும் அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் மொழியையும், மதத்தையும், கலாசாரத்தையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற ஒருவித விதாண்டா வாதத்துடன் அப்பாவி சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இனவாதத்தை ஊட்டி வளர்க்க நினைக்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புகளை அரசாங்கம் உடனடியாக தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.

இல்லையேல் அன்று தொட்டு இன்றுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட முஸ்லிம் சமூகம் தங்களையும் சமூகத்தையும் மதத்தையும் பாதுகாத்துகொள்ள வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை தோன்றலாம்.

ஒரு நாடு ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக இருக்கும் பட்சத்தில் அங்கு வாழும் சிறுபான்மை சமூகம் மத, மொழி சுதந்திரம் உரிமையுடன் வாழ வேண்டும். அவ்வாறான நேரத்தில் அந்நாட்டின் மதிப்பும் அந்தஸ்தும் சர்வதேச மட்டத்தில் மதிக்கப்பபடும். உயர்வடையும், ஆனால் இங்கு நிலைமை வேறாக இருக்கிறது.

ஏற்கனவே மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்றெல்லாம் சர்வதேச மனித உரிமை சபையாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் குற்றம் சுமத்தப்பட்டு திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கள இனவாத அமைப்புகளும். குழுக்களும் அறிக்கைகள் விடுவதும். பேரணிகள் நடத்தி தாக்குதல்கள் நடத்துவதும் நாட்டிக் இறையாண்மையை பாதிக்கும் என்பதால் கண்டிக்கப்பட வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணு மின் உற்பத்தியை தொடங்கலாம் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து வழ‌க்குகளையு‌‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளதா‌ல் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை தொட‌ங்க எ‌ந்த தடையு‌ம் இ‌ல்லை.
அணு மின் உற்பத்தி உலகம் முழுவது அழிவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் அதற்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடிவருகின்றனர். உலகம் முழுவதும் உருவாகிவரும் அழுத்தங்கள் காரணமாக பல நாடுகளில் அணு மின் உற்பத்தி கைவிடப்பட்டது. மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களை கருத்தில் கொள்ளாமால் தமிழ் நாட்டு மாநில அரசும் மத்திய அரசும் அணு மின்நிலையத்தை தொடங்கி தம்மை நவ பாசிச அரசுகளாக அறிவித்துள்ளன.
கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்ததை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்குகள் தொடரப்பட்டன.

உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொறியாளர் சுந்தர்ராஜன், மீனவர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் பீட்டர் ராயன் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தன‌ர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படாதவரை, கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்ப‌ட்டது. கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து மனு‌க்களையு‌ம் த‌ள்ளுபடி செ‌ய்த ‌நீ‌திப‌திக‌ள், அணுஉலை தொட‌ர்பாக த‌மிழக அரசு போதுமான ஏ‌ற்பாடுகளை செ‌ய்து‌ள்ளது எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

கூடங்குளம் ஒடுக்குமுறை : தோழர் மருதையனுடன் – ஜீ.ரி.வி உரையாடல்
இடிந்தகரையிலிருந்து உதயகுமார்
கூடங்குளம் அணு மின்நிலையம் : இலங்கையில் மனித அவலத்திற்கான நச்சு விதை
சுனாமி எச்சரிக்கையால் உயிர் அச்சத்திற்கு உள்ளான கூடங்குளம் மக்கள்
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்கவில்லை – இலங்கை
உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..?: ஞாநி
புகுஷிமா அணு உலை விபத்து : உலக மயமாகும் கதிர்வீச்சு
அணு மின் உற்பத்தி – பேசப்படாத உண்மைகள் – மின் நூல்

கஷ்மீரில் இந்திய அரசின் சித்திரவதைகள் : சனல் 4 காணொளி இணைப்பு

கஷ்மீரில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசின் சித்திரவதைகளையும், மனிதப் படுகொலைகளையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் 11.06.2012 அன்று பிரித்தானியத் தொலைக் காட்சியான சனல் 4 இல் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சித்தரிக்கிறது. ஈழத்தை ஆக்கிரமிக்கும் இராணுவத்தின் தொகைக்கும் அதிகமாக கடந்த இரண்டு தசாப்தங்களாக கஷ்மீரில் அரச படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு புறத்தில் பாகிஸ்தானும் மறு புறத்தில் இந்தியாவும் ஆக்கிரமிக்க முயலும் கஷ்மீரின் விடுதலைக்காக அந்த தேசத்தின் மக்கள் விட்டுக்கொடுக்காத போராட்டம் நடத்துகின்றனர். சனல் 4 இன் ஆவணப்படம் பல தகவல்களைத் தொகுத்திருக்கிறது. சனல் 4 இன் அரசியல் நோக்கம் எதுவாயினும், ஐரோப்பாவில் இந்திய ஜனநாயகத்தை தோலுரித்துக் காட்டுவதில் இந்தக் காணொளி வெற்றிகண்டுள்ளது.

பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே இனிமேல் உயர் கல்வி

பிரித்தானியாவில் பல்கலைக் கழகப் கற்கைக் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதால் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 9 வீத்ததால் குறைந்துள்ளது. இலவசக் கல்வியாக இருந்த பல்கலைக் கழகக் கல்விக் கட்டணத்தை சிறிதுசிறிதாக அதிகரித்த பிரித்தானிய அதிகாரம் மக்கள் அறியாமலேயே கல்வி மேல்தட்டுவர்க்கத்திற்கான ஒன்றாக மாற்றியமைத்துள்ளது. பொருளாதர நெருக்கடியைக் காரணமாக முன்வைத்து கற்கைக் கட்டணம் மேலும் அதிகரிக்கபடும் என எதிர்வு கூறப்படுகின்றது. கல்வி என்பது அனைவருக்குமான ஒன்று என்ற நிலை இப்போது இல்லை என பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது.

அரசாங்கத்தினால் பயங்கரவதிகளாக அழைக்கப்படும் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்து சித்திரைவதை செய்வதை விடுத்து எந்த வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டுமென்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேந்திரம் கோருகிறது.

இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் அழைப்பாளர்களான தோழர்கள் இ.தம்பையா, டபிள்யூ .வீ சோமரத்ன விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்படப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதிகள் என்று அரசாங்கத்தால் அழைக்கப்படும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சில அரசியல் கைதிகள் எவ்வித குற்றச்சட்டுகளுமின்றி பல ஆண்டுகளாக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ; சிலர் வழக்கு விசாரணைகள் தொடரும் நிலையிலும் சிலர் வழக்கு விசாரனைகள் இல்லாமலும் மறியல் சாலைகளில் சிறை வைக்கப்படுள்ளனர். வேறு சிலர் நீதிமன்றகளினால் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமைகள், மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானதாகும்.

இதன் விளைவாக கைதிகள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் நடைப்பெற்ற போராட்டமும் கைதிகளின் விரக்தியினதும் அமைதியின்மையினதும் வெளிப்பாடே ஆகும்.

அரசாங்கம் கைதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக சிறைச்சாலை அதிகாரிகளை மீட்கும் நடவடிக்கை என்னும் பேரில் வவுனியா சிறைக்குள் இருந்த கைதிகளுக்கு எதிராக ஒரு ஆயுத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் கைதிகள் தொடர்ந்து துன்புறுத்தப்ப்ட்டும் வருகின்றனர்.

நீடித்த சிறை வைப்பும் துன்புறுத்தல்களும் கைதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்வையிலும் வழிவகுக்காது. மாறாக பிரச்சினைகளை மேலும் உக்கிரமடையச் செய்யவே உதவும்.

மூன்று வருடங்களுக்கு முன்பே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்த போதும், கைதிகள் உட்பட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அர்ததமுள்ள நடவடிக்கைகளை அரசங்கம் எடுக்கவில்லை.கைதிகளை பொருத்தவரையில் அனுதாபம் கொண்டதாக மக்களுக்கு காட்டிக்கொண்டு. அடையாளமாக ஒரு சிலரை விடுவித்துள்ளது.

எனவே அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வற்புறுத்தி ஜனநாயக, இடதுசாரி, புரட்சிகர ச்க்திகள், மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் இணைந்து பொதுவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருக்கின்ற போதும் அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தனியொரு தேசிய இனத்துக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க முடியாது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில், எங்களது மக்கள் ஐக்கியப்பட்டு செயற்ப்பட்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளனர். 1971, 1988 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது கைதானவர்களை விடுவித்து கொண்டது எடுத்து காட்டாகும்.

இ.தம்பையா, டபிள்யூ .வீ சோமரத்ன

அழைப்பாளர்கள்
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.