Tag Archives: இன்றைய செய்தி

தீர்வுக்காக 60 வருடங்கள் ஏமாற்றினோம் : பேரினவாத அமைச்சர்

தீர்வுக்காக 60 வருடங்கள் முயற்சித்தவர்கள் 6 மாத செயற்பாட்டில் பங்குகொள்ள முடியாதா? ௭ன்று சிங்கள பேரினவாத,மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் இணைந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டும் தயக்கத்திற்கு சிங்கள பேரினவாத அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களே இவை.

தன்னை மறந்து இந்த பேரினவாதி இதுவரை சிங்கள பேரினவாதம் மறைத்து வந்த ஓர் உண்மையை தன் வாயாலேயே அம்பலப்படுத்தியுள்ளார்.

ஏமாற்றப்பட்ட செங்கல்பட்டு முகாம் அகதிகள்

கடந்த மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அதிகாரிகள் அவர்களை யூன் மாதம் 5 ம் தேதிக்குள் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் வழக்கம் போல் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
சென்ற மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. அவர்களின் உடல் நிலை ஒருவர் பின் ஒருவராக மோசமடைந்தது.
முகாம் தமிழர்களை இந்த மாதம் 5 ஆம்தேதிக்குள் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் முகாம் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் தமிழக அரசு வழக்கம் போல் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. முகாம் தமிழர்களும் எவ்வளவோ நம்பிக்கையுடன் இருந்தனர். தாங்கள் விடுதலை ஆவோம் என்று நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டது தமிழக அரசு.
இப்போது விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
தமிழின வாதம் பேசும் ஜெயலலிதா பாசிச அரசும் அதற்கு வக்காலத்து வாங்கும் சீமான், வைகோ,நெடுமாறன் போன்ற சந்தர்ப்ப வாதிகளும் இது குறித்து மூச்சுக்கூட விடவில்லை. தமிழீழம் பெற்றுத் தருவோம் என மூலைக்கு மூலை மேடை போட்டு முழங்குகிறார்கள். புலம் பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்தவும் வாக்குப் பொறுக்கவும் இவர்கள் நடத்தும் நாடகத்தைநம்பி ஈழத் தமிழ் அகதிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் : தோழர் மருதையன்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரணதண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களுடைய பொதுக்கருத்தின் திரண்ட உருவமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளம், தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்பளித்தது. இது இறுதி வெற்றி அல்ல என்றபோதிலும், குறிப்பிடத்தக்க வெற்றி. தமிழுணர்வாளர்களும் பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் செய்த பரப்புரைக்கும் பரவலாக நடைபெற்ற போர்க்குணமிக்க போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான ஆதரவை உருவாக்குவதில் வைகோ, சீமான் போன்றோர் ஆற்றிய பங்கும், கருமமே கண்ணாக இருந்து இவ்வழக்கினைக் கொண்டு சென்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி போன்றோரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கவை.

ஏறத்தாழ உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அதேநேரத்தில், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோரைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்தோரே அதிகம். முந்தைய நாள் இதே பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, குடியரசுத்தலைவர் நிராகரித்த கருணை மனுவை அங்கீகரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும் அதற்கு ஆதாரம் காட்டினார். மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரமில்லை என்பதுடன் அதில் தனக்கு விருப்பமும் இல்லை என்பதை அவரது பேச்சு பளிச்சென்று காட்டியது.

முதல்வரைச் சந்திப்பதற்கு பேரறிவாளனின் தாயார் மற்றும் வைகோ உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வேலூர் சிறையின் தூக்கு மேடைக்கு பூசை போடப்படுவதையும் புதுப்பிக்கப்படுவதையும் வக்கிரப் பரவசத்துடன் வருணித்துக் கொண்டிருந்தது, தினமலர். ஜெயலலிதா கும்பலின் உறுப்பினர்களான பார்ப்பன பாசிஸ்டு சுப்பிரமணிய சாமி, சோ போன்றோர் நடைபெறவிருக்கும் நரகாசுரவதம் குறித்த தங்களது மறைக்கவொண்ணா மகிழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளிவந்தது ஜெயலலிதாவின் அந்தர்பல்டி அறிவிப்பு.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முந்தின நாள் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை மறுத்து முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பி.யு.சி.எல் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர். சுரேஷ் இது தொடர்பான அரசியல் சட்டத்தின் நிலையை அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மைமிக்க அதிகாரத்தையோ, இபிகோ பிரிவு 54 மற்றும் கு.ந.ச பிரிவு 433 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாகரீதியான அறிவுறுத்து கடிதம் பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மேலும், இந்திய ஒன்றியத்தின் மாநில மைய அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில், குடியரசுத்தலைவர் மேல் என்றும் ஆளுநர் கீழென்றும் (அதாவது மைய அரசு மேல், மாநில அரசு கீழ் என்று) கருதும் அதிகாரப் படிநிலை அணுகுமுறை பொருந்தாது என்பதே அரசியல் சட்டத்தின் நிலை. எனவே, குடியரசுத்தலைவர் நிராகரித்த மனுவை மீண்டும் குடியரசுத்தலைவர்தான் பரிசீலிக்க இயலும் என்ற கருத்து தவறு என்று அவரது கடிதம் விளக்குகிறது.

இவையெல்லாம் தமிழக அரசுக்கோ, ஜெயலலிதாவின் ஆலோசகர்களுக்கோ தெரியாததல்ல. சட்டப்பிரிவு 161 அம்மாவின் கருணைக்கரங்களைக் கட்டிப் போட்டிருப்பதனால்தான், தூக்கு தண்டனையை அம்மா ரத்து செய்யமுடியவில்லை என்று அ.தி.மு.க வைச் சேர்ந்த அடிமுட்டாளும்கூட நம்பமாட்டான். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா தமிழகத்தில் நடத்திவரும் அரசியலின் மையப்புள்ளியே புலி பீதியூட்டுவதுதான் . ராஜீவ் கொலைப் பழியை தி.மு.க.வின் மீது போட்டு, ராஜீவின் பிணத்தின் மீதேறித்தான் ஜெயலலிதா முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார். அன்று ஈழத்தமிழர்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை.

தடா, பொடா சட்டங்களை ஏவியதாக இருக்கட்டும், புலிகள் இயக்கத்தை வேரறுப்பதற்கு முனைந்து நின்றதாக இருக்கட்டும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியைக் சாடியதாக இருக்கட்டும் அனைத்திலும் ‘மாறாத கொள்கை உறுதி’யை பார்ப்பன பாசிச ஜெயலலிதா காட்டி வந்திருக்கிறார். ஒரு தாய் என்ற காரணத்தினால் நளினியின் மரண தண்டனையை அன்றைய தி.மு.க. அரசு ஆயுள்தண்டனையாக குறைத்தபோது, அதையும் எதிர்த்த இந்த அம்மையார்தான், “மூவரின் கருணை மனுவை நிராகரித்தவர் கருணாநிதி” என்ற உண்மையை இன்று உலகுக்கு அறிவித்து அவரது சந்தர்ப்பவாதத்தை சாடுகிறார்.

“எதுவும் செய்யமுடியாது” என்று முந்தின நாள் கைவிரித்து விட்டு, மறுநாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அம்மாவின் அந்தர்பல்டிக்கு அடிப்படை என்ன? மனிதாபிமானமோ, தமிழுணர்வோ 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் ஊற்றெடுத்துப் பெருகி சட்டமன்றத்தில் பாய்ந்துவிடவில்லை. தமிழக மக்களின் மனநிலை குறித்த அவரது மதிப்பீடுதான் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் விளைவாக முடிவிலும் மாற்றம் வந்திருக்கிறது.
முதலாவதாக, இம்மரணதண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் அவதானிக்கத்தக்கதொரு போர்க்குணம் இருந்தது. அமைப்பு சார்ந்த போராட்டங்கள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர்கள் வழக்குரைஞர்களின் போராட்டங்களும் ஈழப்போரின் இறுதி நாட்களில் தமிழகம் இருந்த நிலையை நினைவூட்டின. சமச்சீர் கல்விக்கான போராட்டங்களுக்காக தெருவுக்கு வந்து பழகிய மாணவர்களும், ஈழம் மற்றும் உயர் நீதிமன்ற போலீசு தாக்குதல் தொடர்பான பிரச்சினைகளில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கும் வழக்குரைஞர்களும் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கக் கூடிய சாத்தியப்பாடு விளங்கிக் கொள்ள முடியாததல்ல.
1991-இல் ராஜீவின் உடலைக் கண்டு தமிழகம் அழுததும், அந்தக் கண்ணீரை ஓட்டுகளாக ஜெயலலிதா மாற்றிக் கொண்டதும் உண்மைதான். ஆனால், அது வேறு தமிழகம். இன்று, இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாமல் தோற்றது மட்டுமின்றி, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க முடியாமல் பாதுகாத்து நிற்கும் டெல்லியைக் கண்டு குமுறிக் கொண்டிருக்கிறது, ஒரு தலைமுறை. இந்த குமுறலின் மீது உப்புக் காகிதத்தைத் தேய்க்கும் விதமாக மூவரின் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டால், அது தோற்றுவிக்கும் காயமானது பார்ப்பனக் கும்பலையும் அவர்களது தேசியத்தையும் வெறுக்கின்ற புதியதொரு தலைமுறையை உருவாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்க, ‘அபாயகரமான’ அந்த சாத்தியப்பாட்டினைத் தடுப்பதற்கானதொரு உபாயமாகவும் அம்மா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

மூன்றாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கிடைத்துவிடும் என்பது ஓரளவு சட்டம் தெரிந்த அனைவரும் எதிர்பார்த்த விடயம். வேறொரு வழக்கில் கருணை மனுவின்மீது கருத்து கூறாமல் 2 ஆண்டுகள் தாமதித்ததையே காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 11 ஆண்டுகள் என்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாமதம் என்பதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழலில், சட்டமன்றத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடப்படும் வேண்டுகோள் அரசியல் ரீதியில் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கணக்கிட்டிருக்கக் கூடும்.

இக்காரணிகள் அனைத்தின் கூட்டல் கழித்தலில் வந்திருக்கக் கூடிய விடைகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம். இது அமைச்சரவை முடிவல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சிக்கு வந்த மறுகணமே உடுக்கை இழந்தவன் கைபோல மெட்ரிக் முதலாளிகளின் இடுக்கண் களைவதற்காக நீண்ட கரங்கள் அல்ல இவை. இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காக நீண்டிருக்கும் கரம். அதிலும் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே.

உண்மை இவ்வாறிருக்க, “இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகத்தான் காங்கிரசு அரசு கருணை மனுவை நிராகரித்திருக்கிறது” என்றொரு நகைக்கத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள், “ரூம் போட்டு” சிந்திக்கும் சில அறிஞர் பெருமக்கள். ‘தமிழினத்தின் மானத்துக்கு மரணதண்டனை விதிக்காதீர்கள்’ என்பதுதான் நாம் இவர்களிடம் பணிந்தளிக்கும் கருணை மனு.

குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியிருப்பது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதில் அவர்கள் கொள்கை ரீதியான ஒற்றுமை உடையவர்கள். தமக்கிடையிலான சில்லறை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தேசியநலனுடன்’ தொடர்புள்ள விடயங்களில் சேர்ந்தியங்கும் ‘பக்குவம்’ உடையவர்கள். மேலும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கும் இந்தச் சூழல்தான் சுமுகமாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தகுந்த சூழல் என்று மத்திய உளவுத்துறைகளும் மதிப்பிட்டிருக்கும். தமது மதிப்பீடு முற்றிலுமாய்ப் பொய்த்துவிடும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் மட்டுமா, ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று இப்படியொரு அந்தர்பல்டி தீர்மானத்தை முன்மொழியப் போகிறோம் என்பதை ஆகஸ்டு 29 ஆம் தேதியன்று ஜெயலலிதாவே எண்ணிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகையதொரு துரதிருஷ்டம் குறித்து சோதிடர்கள்கூட முதல்வரை எச்சரித்ததாகத் தெரியவில்லையே.

இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே” என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.

நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர் அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் பொருத்தவரை மூவர் தூக்குக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பொதுக்கருத்தையோ, போராட்டங்களையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தகைய பொதுக்கருத்து தோன்றுவதற்கான நியாயம் ஈழத்தின் இனப்படுகொலையிலும் இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ‘இந்திய தேசியத்தின்’ சந்தேகப் பட்டியலில் நிரந்தரமாக அவர்கள் தமிழகத்தை வைத்திருக்கிறார்கள். ‘திராவிடதமிழ் அரசியலை’ தைரியமாக எதிர்கொண்டு நின்ற ஜெயலலிதாவும் இப்போது அதற்குப் பணிந்து விட்டார் என்பதுதான் அவர்களது மனக்குமுறல்.

தேசத்தின் முன்னாள் பிரதமரையே கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம் நடத்துவதும், அதனையொட்டி சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதும் அவர்களை நடுங்கச் செய்கிறது. இது நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதும் மிரட்டுவதும் ஆகும் என்று அந்த ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர் அதிகாரபூர்வ அறிவுஜீவிகள்.

இது அபத்தமானதும் அரசமைப்புச்சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் ஆகும். நீதிமன்றம் தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தின் தன்மையையும் குற்றவாளிகளையும் முடிவு செய்து தண்டனை விதிக்கிறது. ஆனால் மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் அரசு (Ececutive) குற்றத்தின் தன்மையை ஆராய்வதில்லை. குற்றவாளிகளின் சமூக, கலாச்சார பின்னணி, குறிப்பிட்ட குற்றத்தை இழைக்குமாறு அந்தக் குற்றவாளியைத் தூண்டிய காரணிகள், குற்றத்தின் சமூகப் பின்புலம் ஆகியவற்றை பரிசீலித்து மன்னிப்பு வழங்குவது பற்றி முடிவு செய்கிறது. மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பது, ஆயுள்தண்டனையின் காலத்தை குறைப்பது ஆகியவை பற்றி மட்டும்தான் அரசு முடிவு செய்கிறதேயன்றி, குற்றத்திலிருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில்லை.

ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்வோம். இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கின் வாக்குமூலங்களும் சாட்சியங்களும் கைதிகளிடம் மிரட்டிப் பெறப்பட்டவை, அல்லது போலீசால் தயாரித்துக் கொள்ளப்பட்டவை. தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், குற்றவாளிகளை தண்டித்திருக்கவே முடியாது என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் அன்று கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது. “ஆனானப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கூடச் சித்திரவதை பொறுக்காமல் தன்னை ஒரு சூனியக்காரி என்று ஒப்புக்கொண்டாள். சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் எதையும் ஒப்புக்கொள்வான். எனவே தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும், அது பலவீனமான சாட்சியமே” என்று கூறி உல்ஃபா இயக்கத்தை சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.2.2011) விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அப்படிப்பட்ட ‘பலவீனமான’ சாட்சியம்தான் இம்மூவரின் மரண தண்டனைக்கும் அடிப்படை.அது மட்டுமல்ல, எந்த ஜெயின் கமிசன் அறிக்கையில் தி.மு.க. வின் புலி ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி 1998 இல் ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காங்கிரசு கவிழ்த்ததோ, அதே ஜெயின் கமிசன் அறிக்கை ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியார் விசாரிக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தும், அதற்காகவே பலநோக்கு கண்காணிப்பு முகமை (MDMA) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தும் அத்தகைய விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ஒரு அரசியல் கொலை வழக்கில், சந்தேகத்திற்கிடமான சிலரை விசாரிக்காமலிருக்கும்போதே ஏனையோரின் உயிரைப் பறிப்பது, அப்பட்டமான அநீதி மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சதியும் ஆகும்.

இந்திய இலங்கை ஒப்பந்த திணிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, அமைதிப்படையை திரும்பப் பெற்ற வி.பி.சிங் மீது ராஜீவ் வெளியிட்ட கண்டனம் — ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் நடைபெற்றதே ராஜீவ் கொலை என்று கூறுகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இதுதான் இந்தக் ‘குற்றத்தின்’ அரசியல் பின்புலம். ராஜீவ் கொலையை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களும் எதிர்ப்பவர்களும் கூட, அதன் அரசியல் நியாயத்துக்குத் தம்மையறியாமல் தலைவணங்குவதன் விளைவுதான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பொதுக்கருத்து.

‘சங்கடமளிக்கும்’ இந்த அரசியல் பின்புலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனிதாபிமானம், நிரபராதிகள், மரணதண்டனை ஒழிப்பு என்றெல்லாம் பேசுவதன் மூலம் பரந்த மக்கட்பிரிவினரையும் அரசியல் கட்சிகளையும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டிவிட முடியும் என்று கருதுவோர் அம்மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும். இம்மூவரின் இடத்தில் நிற்பவர்கள் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக இருந்திருப்பின், தமிழகம் இவர்களைத் திரும்பியும் பார்த்திருக்காது. தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்களேயானாலும், அவர்களுக்காக ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

மரண தண்டனை ஒழிப்பு என்ற பொதுக்கோரிக்கை, ராஜீவுடைய போர்க்குற்றத்தை மூடும் வெள்ளைத்துணி ஆகிவிடக்கூடாது. குற்றம் ராஜீவுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. அதனால்தான் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் தூக்கு மேடையில் நிற்கிறார்கள். இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை மறித்து நிற்பதனால்தான் அப்சல் குருவும் தூக்குமேடையில் நிற்க நேர்ந்திருக்கிறது.

கருப்புத்துணி மூடித் தூக்கிலிடப்படவோ, கருணை மனுவினால் விடுவிக்கப்படவோ முடியாத, உண்மையின் இந்த முகம்தான் மக்களைப் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது. மூவரையும் தூக்குமேடையிலிருந்து இறக்க வல்லதும் அதுதான்.

_________________________________________________________________

– மருதையன், புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011

தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும் : இளங்கோ

தமிழ் விரோத தமிழின விரோத பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சீமான் முதலான சில ஈழ ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வுக்கு இளைஞர் அணி, மகளிர் அணி இருப்பதைப்போல, ஈழ ஆதரவு அணியாக சீமானின் நாம் தமிழர் இயக்கம் மாறிவிட்டது. ஓட்டுக்கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இலட்சிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இத்தகையோரின் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சந்தி சிரித்து, இப்போது ஒரு பிரிவு தமிழினவாதிகளாலேயே சீமான் விமர்சிக்கப்படுகிறார்.

பார்ப்பன பாசிசத்தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. அத்தகைய பார்ப்பன பாசிசக் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டுப் பொறுக்கக் கிளம்பியுள்ளார், சீமான். “”எங்களது நோக்கம் அடுத்து யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். காங்கிரசும், தி.மு.க.வும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்கள் நிலை. ஈழத்தமிழர் விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனைத் தூக்கில் போடச் சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்கக் காரணமாக இருந்த காங்கிரசுக் கட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. அதற்காக நான் யாரையும் ஆதரிப்பேன்” என்கிறார், சீமான்.

“அ.தி.மு.க.வும் அதன் கூட் டணியும் போட்டியிடுகிற அத்தனை தொகுதிகளிலும் வெற்றிக்குப் பாடுபட்டால்தான் நாம் ஆதரிப்பதாக அர்த்தம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க.வும் எதிர்த்து நின்றால், நாங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்குத்தான் ஓட்டுக் கேட்போம். யாருக்கோ ஓட்டுப் போடுங்கள் என்று குடுகுடுப்பை அடிக்க முடியாது. தனித்து நிற்பது யானைகளின் காலடியில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது. தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்வது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம். கிடைக்கின்ற ஆயுதத்தைக் கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம்” என்றெல்லாம் கொள்கை விளக்கங்களை அளித்து தமிழர்களைப் புல்லரிக்க வைக்கிறார், சீமான்.

“”இரட்டை இலைக்கு சீமான் வாக்கு கேட்கலாமா என்று கேட்பவரிடத்தில் சொல்லுங்கள்; இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய சுபாஷ் சந்திர போஸ் உலகக் கொடுங்கோலனாக இருந்த இட்லரிடத்தில் ராணுவ உதவி கேட்டார். போஸ், இட்லரிடத்தில் ராணுவ உதவி கேட்கலாமா என்று யாரும் கேட்கவே இல்லை. இந்திய அமைதிப்படை தமிழர்களை வேட்டையாடியபோது, அவர்களை எதிர்கொள்ள எதிரி பிரேமதாசாவுடன் பிரபாகரன் கைகோர்க்கவில்லையா, அது@பாலத்தான் எங்களது அ.தி.மு.க. ஆதரவு நிலையும்” என்று தனது பச்சையான பிழைப்புவாதத்துக்குச் சித்தாந்த விளக்கமளித்துள்ளார், சீமான்.

சீமான் மட்டுமல்ல, இதர தமிழினவாதிகளும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டுவதற்கான உந்து பலகையாக “”இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி ஏய்த்த வைகோ, நெடுமாறன், ராமதாசு, தா.பாண்டியன் வகையறாக்கள், பின்னர் தேர்தலில் கூட்டணி கட்டிக் கொண்டு ஜெயலலிதாவுக்குக் காவடி தூக்கினர். இத்தகைய ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாத அரசியலுக்கு அப்பாற்பட்ட கொள்கைபூர்வ இயக்கமாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழினக் குழுக்களும் காங்கிரசையும் தி.மு.க. வையும் தேர்தலில் வீழ்த்துவதே முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டு பிழைப்புவாதத்தில் மூழ்கி பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை வெட்கமின்றி ஆதரித்து ஓட்டுப் பொறுக்கின.

இருப்பினும், இந்த நிலைப்பாட்டை மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன் நியாயப்படுத்தினர், மணியரசன் போன்ற சில தமிழினவாதிகள். “”நாம் யாருக்கும் வாக்களிக்கச் சொல்லவில்லை. வாக்களிக்க விரும்புவோர் காங்கிரசுக்குப் போடாதீர் என்று வேண்டுகிறோம்” என்று அதாவது, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமேதாவித்தனமாகக் கோரினார், தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரான பெ.மணியரசன். “”கருப்பனைக் கட்டிவைத்து அடித்தால்,வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடுவான்” என்ற பழமொழியைக் கூறி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தினால், அத்வானியும் ஜெயலலிதாவும் தமக்கும் இதுபோல் நேரிடும் என்று அஞ்சி ஈழ விடுதலையை ஆதரிப்பார்கள் என்று தனது பிழைப்புவாதத்துக்கு அப்போது விளக்கமளித்தார்.

ஆனால் இதே மணியரசன், இப்போது யோக்கிய சிகாமணியைப் போல சீமான் முதலான தமிழினப் பிழைப்புவாதிகளை விமர்சிக்கிறார். “”காங்கிரசையும் தி.மு.க.வையும் எதிர்ப்பதற்கு செயலலிதாவுடன் குறைந்த அளவு பொதுத் திட்டம் ஒன்றை வகுத்து உடன்பாடு செய்து கொள்ள இந்த ஈழ ஆதரவுத் தோழர்களால் முடியுமா? அந்த உடன்பாட்டை ஊடகங்களில் வெளியிட முடியுமா?” என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும் சீமான் முதலான ஈழ ஆதரவாளர்களைப் பார்த்துக் கேட்கிறார்.
“”தமிழீழ ஆதரவாளர்களை ஒடுக்குவதில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும்?” என்று சீமானைக் கேட்கிறார் கவிஞர் தாமரை. “”அம்மையாரை அரியணையில் அமர்த்திவிட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? தேர்தலில் நிற்க வேண்டாம், நின்றாலும் காங்கிரசு நிற்குமிடங்களில் மட்டும் போட்டியிடுங்கள், மற்ற தொகுதிகளில் 49ஓ போடுங்கள்” என்று சீமானுக்கு ஆலோசனை சொல்கிறார்.

“”நம் ஈழ ஆதரவு நண்பர்கள் செயலலிதாவுக்குப் பின்னால் பரப்புரைப் படைவரிசையாய் போய்ச் சேர்வது பகைவர்களிடையை உள்ள முரண்பட்டைப் பயன்படுத்துவது ஆகாது. ஒரு பகையாளியிடம் சரணாகதி அடைவது ஆகும். இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்துவிட்டால், தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை ஒழித்து விட்டதாகுமா? அடுத்தடுத்தத் தேர்தல்களிலும் அக்கட்சி @தாற்றுத்தான் போகுமா?” என்று கேட்கிறார், பெ.மணியரசன் ( தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2011 பிப்ரவரி 115)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று உபதேசித்த பெ.மணியரசன் இப்போது சந்தர்ப்பவாதமாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தாங்கள் “”தேர்தலைப் புறக்கணிப்பது என்று உறுதியாக முடிவு செய்து அந்நிலையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்” என்று கூசாமல் புளுகிறார். தேர்தல் சூதாட்டத்தில் தேசிய விடுதலையைப் பணயம் வைக்காமல், தேர்தலுக்கு வெளியே நடக்க வேண்டிய போர்க்குணம் மிக்க எழுச்சிக்கு மக்களை அணியம் செய்வோம் என்று சவடால் அடிக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுத்த நிலைப்பாடும் தற்போது அவர் அறிவிக்கும் நிலைப்பாடும் ஒன்றுதானா? அப்போது சந்தர்ப்பவாதமாக எடுத்த நிலைப்பாடு பற்றி மறுபரிசீலனை கூட செய்யாமல், தேர்தலுக்கொரு நிலைப்பாடு எடுப்பதுதான் த.தே.பொ.கட்சியின் கொள்கையா?

தமிழ்த்தேச விடுதலைக்கான திட்டத்திலிருந்து, அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறையாகத் தேர்தல் புறக்கணிப்பை மணியரசனின் கட்சி மேற்கொள்ளவில்லை. அப்படியொரு திட்டமே இல்லாமல், அவ்வப்போது சந்தர்ப்பவாதமாக கொள்கை முடிவுகளை அறிவிப்பதுதான் இவர்களது நடைமுறையாக உள்ளது. இதற்கு முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கியபோது, தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் பொறுக்கினர். அது எட்டாக்கனியானதும், த.தே.பொ.கட்சியாக உருமாறி, சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்ற நரியின் கதையாக, யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாடு அம்பலப்பட்டுப் போனதாலேயே, இப்போது தேர்தல் புறக்கணிப்பு சவடால் அடித்து, தாங்கள் எப்போதுமே சரியாக இருந்ததுபோல காட்டிக் கொள்கின்றனரே தவிர, வாய்ப்பு கிடைத்தால் நாளை ஓட்டுப் பொறுக்கமாட்டார்கள் என்பதற்கு அவர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை.

சீமான் தனது பச்சையான சந்தர்ப்பவாதத்தைப் பகிரங்கமாக்கிவிட்டார். மணியரசன் முதலான இதர தமிழினவாதிகளோ மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன், தமிழன் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர். வெளிப்படையான சந்தர்ப்பவாதத்தைவிட மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம்தான் அபாயமானது என்கிறார், மார்க்சியப் பேராசான் லெனின்

நன்றி : புதியஜனநாயகம்

விமல் வீரவன்சவின் பெருந்தேசிய வாதமும் சீமானின் தமிழ்த் தேசியமும்

தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடைசெய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும்.

ஆனால் இது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் அனுப்பப்படுவதற்கு இறுதி முடிவெடுக்கப்பட்டதா என்பது தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்கவேண்டும்.

இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும் கூட இத்தகைய முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதே தமிழ் பேசும் மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.

அமைச்சரவையில் இவ்விவகாரம் பேசப்பட்டப்பொழுது தமிழிலும், தேசிய கீதம் பாடப்படுவது தொடரவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன ஆகியோரை நாம் பாராட்டுகின்றோம்.

அதேவேளையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டார்களா என்பதையும், கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தார்களா என்பதையும் அறிந்துகொள்வதற்கு தமிழ் பேசும் மக்கள் ஆவலாக இருக்கின்றார்கள்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்படுவதில்லை என்று கூறுவதே அடிப்படையில் ஒரு தவறான தகவலாகும்.

உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றான கனடாவில் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் உத்தியோகப்பூர்வமாக பாடப்படுகின்றது.

ஆரம்பத்தில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கனடிய தேசிய கீதம் பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை தடுக்கும் முகமாக எமது அயல் நாடான இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மையினர் பேசும் மொழியான ஹிந்தி மொழியில் பாடப்படுவதாக இவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

இது இவரது பெரும்பான்மை வாதத்தையும், அறியாமையையும் காட்டுகின்றது. உண்மையில் இந்தியாவின் தேசிய கீதம் வாங்களா மொழியில் பாடப்படுகின்றது. இந்தியாவின் சனத்தொகையை மொழி ரீதியாக வரிசைப்படுத்தினால், முதலில் இந்தியும், அடுத்து தெலுங்கும், மூன்றாவதாக தமிழும் இருக்கின்றன.

நான்காவதாக அதிகம் பேர் பேசும் வங்காள மொழியில் அமைந்துள்ள தேசிய கீதத்தை அனைத்து இந்தியர்களும் பாடுவது இந்தியாவின் பெருமையாகும்.

இந்தியாவில் 15 இற்கும் மேற்பட்ட தேசிய மொழிகள் இருக்கின்ற காரணத்தினால் அனைத்து மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுவது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் இரண்டே மொழிகளை கொண்டுள்ள இலங்கையில் இது நீண்டகாலமாகவே சாத்தியமாகியுள்ளது. இந்த பெருமைக்குரிய விடயத்தை தகர்த்து எறிந்து இந்த அரசாங்கம் எத்தகைய தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போகின்றது என்பது கடளவுக்குத்தான் வெளிச்சம். இதை இந்நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
இதே வேளை தேசிய கீதம் குறித்து சீமானின் உணர்ச்சியூட்டும் அறிக்கைகள் உலாவருகின்றன. உணர்ச்சி அரசியல் பல ஆயிரம் மக்களைப் பலிகொண்டிருக்கிறது என்பதை சீமான் போன்ற தமிழ் இன வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்திய மக்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான அரசியல் வழிமுறையும் , ஈழ விடுதலை அதற்கு எவ்வாறு பயன்படும் என்பதையும் அதனைப் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பேச வேண்டிய முக்கியமான காலப்பகுதியில் வாழ்கிறோம்